தேர்ந்த இலாவகத்தோடு
தாம்பூலச் செல்லத்துடன்
திவ்யப் பொருட்களை இணைக்கும் ,முதுமகளின்
இன் மனதும் இரு கைகளும்
ஓர்மையின் எழிலுடன்
ஒருங்குதல் போன்று
வனப்பையும் வாஞ்சையையும்
இணைத்து இழைத்து
ஒலிப்பேழையில் வைத்து
அனுப்பிய உறுதுணையான
உன் குரல்முகம்
உள்கம்பீர தலை வருடலோடு,
மனம் இறங்க…
என் முகம் சிவக்கிறது!
நீ
பதித்துச் சென்ற
முத்தங்களின் ஈரத்தில்
முளைத்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகள்
விட்டுச் சென்ற
வண்ணங்கள்தான்
வானவில் ஆனது.
நினைவின் தாக்கத்தில்
வாட்டம் கொண்டு உயிர் கலங்கி
நின்ற நிலையில் கண்களின் ஈரம்
கரம் கொடுத்து மருகி அணைத்து
மனமள்ளிக் கொண்ட நெஞ்சப் பருவமது …
எதிர்பார்த்தோம்.
நமக்குள் நாம் இணைந்து கொண்டோம் .
ஏற்பு மறுப்பென்ற தன்மைகள் மறந்து
இயலாய் இணைந்து கொண்டோம்.
இனி வேண்டாமொன்றும் என்று
சபதமிட்டுக் கருவிழிகள் உருள
கைக்கொண்டதைத் தூக்கிப்போட்டுப் பிறகு
அசட்டு பிசட்டென்று
அள்ளிக் கொட்டிய வார்த்தைகள்
பிடிவிட்டு தரைச் சிதறி தேய்ந்து
தொலைந்து போய் விடுகின்றன.
தொலையா ஆழ் நினைவுகள்
முன் மனமும், பின் மனமும்
அறியா வேளையில்
பிளவு கொண்ட நிலம்
பிரசவித்த சீதை போல்
எழிலாக முன்னெழுந்து நிற்கின்றன.
நுதல் முத்தும் விரல் கோர்ப்பும்
நெருங்கி வந்து இயல் வாழ்வின்
ஏனையவவற்றை மறைத்து, மறைந்து
ஏங்கிய இதயத்தைத் தூண்டிவிட்டுக்
கண்ணின் நீரை கட்டுப்பாடு இன்றி
துளிர்க்க வைக்கிறது.