– 01 –
சாலையில் மிதிபடும் சருகுகளுக்கு
நொறுங்கும் சப்தத்தைப் பரிசளிக்கிறது சூரிய வெய்யில்.
விடியல் வரை
காத்திருக்கும் மறுபுலர்வின் முறுகலும் வெளிர்நிறமும்
வாட்டத்தில் மோட்சம் அடைகின்றன.
நிராகரிப்பும் அண்மிப்பும்
இயைபுறும் ஊடுகை,
ஆற்றாமையின் பருப்பொழுதுகளை
அடைகாக்கின்றன.
இயல்பிருத்தலின் ஒவ்வாமை
கார்காலமாய்த் திரிந்த கோடையில் உதிரும் பருவ ஒலி,
மெத்தென்ற பெருமௌனத்தின்
கூரிய செவிகளுக்குள் வீழாது அதிர்ந்திசைக்கும்.
உலர் மதர்ப்பின் நிலம்
உவர் கடலென நிறைந்து நிறைந்து திமில்கின்ற தத்தளிப்புக்குள்
தாழ்திறக்கின்றன என் அட்டிகை முத்துக்கள்.
– 02 –
ஆலங்கட்டி மழை வரள்நிலம் வீழ்ந்து
மழைவாசம் கனிந்த மணல்
நாசியெங்கும் பரவும்.
புளகாங்கிதமாய்
முட்காடுகள் முளைத்துஉதிரும், மந்தகதியில்
நேசக்கற்றாளை அகமியமாய் உருகி அமிலம் தணிக்கும்.
ஈரமற்ற புல்வெளியெங்கும்
துகினம் கலையும்
மழைப்பாட்டு நினைவு
முட்டிமோதும் முரண் வெள்ளத்தில் வீழும் பனிக்கட்டி ஓடமாய்..
நம் நிலவின் மிகையொளி
குவியமாய் பதிந்த உன் கால்த்தடம்
காற்று தழுவிய இடம்
கற்பனைக்காடு உலர்த்தும் கிளைசிலிர்ப்பு
மேயும் தட்டான் உள்ளே
சஞ்சரிக்கும்
நிறம்மாறிய மேகப்பிதற்றலின் நிறம் கற்றைச்சாம்பல்/
வானிருந்து வெப்பச்சலனமாய் அவிழும் முடிச்சுக்கள் ஒவ்வொன்றும்
பெயர் அறியாப் பருவகாலங்களில்
மழையென ஜீவித்துச் செல்லும்.
– 03 –
உபரியில் புலப்படும் மீதம்
நம்பியிருத்தலின் கால அளவு
ஒரு சொல்லில் வளர்ந்து உபயோகப்படுதலில் தேய்ந்து
விசாரம் அற்றுப்போகிறது.
காரியதீர்க்கம்
கைகுலுக்கி விடைபெறும்
பின்பு
இறுதியாய்ப் படிந்த நிழல்
அர்த்தச்சுழலில்
சிலையாகி உறைகிறது.
எதிர்ப்படும் முகத்திரையில் கண்டடையப்படும்
அவர்களின் அச்சுப்பிரதிகள்,
சுயவெளிப்படுதலின் அசல்நிறங்களை
தற்காலிகமாய் இழுத்து மறைக்கிறது.
சேதாரமான பற்றுதலின் கீழ்
பற்றையாய்க் குவிந்து உலர்ந்து
எரிந்துகொள்ளும் வெய்யில் நிறச் சுடருக்கு
மறத்தல் என்று பெயர்,
அதையே தேர்ந்தெடுத்துக் குளிர்காய்கிறது
அடிநிலப்பச்சை.