சிந்து ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறாள்
பாம்புகள் கயிறாகி
பாம்புகள் இருக்கையாகி
பாம்புகளே கம்பிகளாகவுமாகி
ஆலகாலம் பொங்கும் அகாலத்தில்
அமைக்கப்பட்ட ஊஞ்சலில்
சிந்து ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறாள்
அவளது
தலையின் மீது பாம்புகள் ஊர்கின்றன
நெற்றியை நக்கிநக்கிச் சுவைக்கின்றன
தோள்களின் மேல் பாம்புகள் ஊர்கின்றன
கக்கத்தைத் தீண்டித் தீண்டி சுவைக்கின்றன
அவளது கழுத்தின்மேல் பாம்புகள் ஊர்கின்றன
காதுமடல்களை சப்பிச்சப்பி சுவைக்கின்றன
அவளது மூக்கின் மேல் பாம்புகள் ஊர்கின்றன
காந்தக்கண்களை கவ்விக்கவ்விச் சுவைக்கின்றன
அவளது மார்பின் மீது பாம்புகள் ஊர்கின்றன
காம்புகளை கடித்துக்குதப்பிச் சுவைக்கின்றன
அவளது கன்னங்களின் மேல் பாம்புகள் ஊர்கின்றன
ஊதடுகளை உரசி உரசிச் சுவைக்கின்றன
அவளது இடையின் மேல்
தொடையின் மேல்
கருஉருப்பின் மேல்
குறிக்காம்பின் மேல்
புட்டங்களை சுற்றிச் சுற்றி
கால்முட்டிகளின் கெண்டைக்காலின் நகங்களின் மேல்
பாதங்களின் மேலும் கீழும்
கால் விரல்களைச் சுற்றி
நகங்களைக்கூடச் சுற்றிச் சுற்றி சுற்றி
பாம்புகள்
பாம்புகள்
மேலும் பாம்புகள்
அவளது
நெற்றி நீலம்பாரிக்கிறது
கழுத்து நீலம் பாரிக்கிறது
விழிகள் நீலம்பாரிக்கின்றன
கருவிழியும் நீலம் பாரிக்கிறது
அவளது
நாசி நீலம் பாரிக்கிறது
உதடுகள் நீலம் பாரிக்கின்றன
கன்னக் கதுப்புகள் நீலம் பாரிக்கின்றன
மார்பு நீலம் பாரிக்கிறது
காம்புகள் நீலம் பாரிக்கின்றன
இடை நீலம் பாரிக்கிறது
கருவுருப்பு நீலம் பாரிக்கிறது
குறிக்காம்பு நீலம் பாரிக்கிறது
புட்டங்கள் நீலம் பாரிக்கின்றன
கால் மூட்டுகள் கெண்டைக்கால்கள் பாதங்கள்
கால்நகங்கள் கைநகங்கள் பற்கள்
விலா எலும்புகள் நீலம் பாரிக்கின்றன
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி…எனப்
பாடல் பெற்ற கூந்தலும் கூட நீலம் பாரிக்கிறது
கம்பியான பாம்புகள் மாறுகின்றன
இருக்கையாகயிருக்கும் பாம்புகள் மாறுகின்றன
கயிறாகத் தொங்கும் பாம்புகள் மாறுகின்றன
சிந்துக்கள் கூட மாறுகின்றனர்
ஊஞ்சல் மட்டும் மாறாமல்
ஆடிக்கொண்டிருக்கிறது
வேகமாக
நீளமாக
பெரிதாக
வேக வேகமாக
நீள நீளமாக
பென்னம் பெரியதாக
பல்கி
பெருகிப்
பெருகிப்
பெருகி…