மீனவன்
00
ஒவ்வொரு முறையும் எதையாவது கண்டுபிடிக்கும்போது சுவரில் கோடு வரைந்தேன். கண்களைப் போலவே என் காதுகளை மூடுவதற்கு எனக்குப் பயிற்சி உண்டு. அதனால் எதுவும் நடக்காதபடி கட்டளைகளை விதித்துவிட்டு என்ன நடக்கப் போகிறது என்று காத்திருந்தேன். வீட்டைப் போல கட்டளைக்குக் கீழ்படியும் ஒன்றை நம்மால் பார்க்கவே முடியாது. புயல் வந்தபோது கடைசியாக குலுங்கி அழுதுவிட்டு இறந்த எத்தனையோ வீடுகளைத் தெரியும். அதில் குடியிருந்தவர்களையும் தெரியும், அதைப் பிரதமர் பார்வையிட்டபோது வெளிவந்த போட்டோஷாப் படங்களும் தெரியும்.
01
வீட்டை இழந்த பிறகு புதியதாக எதையாவது கண்டுபிடித்தால் மணலில் கோடுகள் வரைந்தேன். ஒரு நிமிடம் சிரித்து ஒரு நிமிடம் அழுதேன். அடுத்த இரண்டு நிமிடங்களைப் பயன்படுத்தி இன்னொரு விளையாட்டைக் கண்டுபிடித்தேன். மெழுகுவர்த்தியின் குழந்தைப்பருவம் அணையும்போதுதான் வருகிறது என்பதை கண்டுபிடித்த பிறகு நான் கடலுக்கு வந்து விட்டேன்.
02
நான் தண்ணீர் குறைவாகக் குடிக்க வேண்டுமென மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் தாகமாக இருக்கும்போது நீச்சல் பழகுகிறேன். கடலுக்கு வந்தபிறகு எதையாவது புதியதாகக் கண்டுபிடித்தால் தண்ணீரில் கோடு வரைகிறேன். நேர்த்தியான நேர்கோடுகள் எனக்குக் கைவருவதில்லை என்பதை எல்லாக் கோடுகளும் மீன்களாக மாறியதைப் பார்த்து அறிந்துகொண்டேன்.
03
துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பி கரை திரும்பியபின் புதியதாக எதையும் கண்டுபிடிப்பதில்லை பழக்கதோசத்தில் விரல்கள் காற்றில் கோடுகளை வரைந்தபடி இருக்கின்றன. அந்த வளைந்த கோடுகள் எல்லாம் பறவைகளாக மாறுகின்றன. வேடர்கள் அவற்றை பசிக்காகச் சுட்டாலும் இப்போதும் உடல் நடுங்குகிறது.
அலெக்சா
வணக்கம், இன்று எந்தச் செய்தியும் இல்லை
தாழிடப்பட்ட கதவுகளைப் பார்க்கவும்
சாவித்துவாரம் மிகச்சிறிய கிட்டாரைப் போல தெரியும்
வணக்கம், நாளையும் எந்தச் செய்தியும் இல்லை
வீட்டைச் சுத்தம் செய்யவும்
கைமறதியாய் வைத்த பொருட்கள் கிடைக்கும்
வணக்கம், உணவை ஆர்டர் செய்து கொள்ளவும்
மற்ற நேரங்களில் வீட்டிலேயே தண்ணீர் பருகவும்
நான் திரும்பி வர இன்னும் சில நாட்களாகும்
என்னை பழுது பார்ப்பவர் நேற்று முதல் காதலில் விழுந்திருக்கிறார்
இப்படிக்கு
அலெக்சா.
கிணற்றின் வீடு
நான் கிணற்றின் வீட்டிற்குத் திரும்பினேன்
நீர் மட்டம் உயர்ந்திருந்தது
கைகளை நீட்டினால்
முகத்தை ஈரமாக்கிக் கொள்ளலாம்
அவ்வளவு அருகில் நீர் இருந்தது.
கிணறே நீ எனக்கு குடிநீரைத் தராதே
முகம் பார்க்கும் கண்ணாடியாக இரு என்றேன்
சிற்றலையால் சம்மதம் தெரிவித்தது
கால்களை நல்ல வாடகைக்கு விட்டவன் போல நாடு நகரம் சுற்றிவிட்டு கோடையில் வந்தேன்
கிணறு எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி
முகம் பார்த்த கண்ணாடியை
கைக்கும் கண்ணுக்கும்
எட்டாத தூரத்தில் வைத்திருந்தது
காலம் தாண்டி
கானகம் தாண்டி வந்த ஒருவனை
ஏமாற்றலாமா என்றேன்
வாயையும் தொண்டையையும் எங்கோ வைத்துவிட்டது போல
கிணறு பேசாமல் அமைதியாக இருந்தது
அது விளையாடுவதற்கு ஒரு பந்தை கொடுத்துவிட்டு திரும்பினேன்
பெண்களிடம்
மிக மரியாதையாக நடந்து கொள்ளும் ஒரு மரம்
அன்று யாரும் வராத போதும் 34 வது பூவை எனக்காக உதிர்த்தது
ஒருமுறை நான் அழகானதை உணர்ந்தேன்
மழையை வரவழைக்க
தவளைகளைப் பிரார்த்தனைச் செய்தேன்
உலர்ந்த தாவரங்களுக்கு
வேறு எந்த உணவையும் கொடுக்கத் தெரியாமல்
வெயிலில் நின்றேன்
ஒளிச்சேர்க்கையின் மூலமே உண்டு உயிர்த்து
இருப்பைத் தக்கவைத்த
அந்தியும் புலரியும் எளிய உயிரினங்களாக என்னுடன் வாழ்ந்தன.
எவ்வளவு முட்டாள்தனமாக நீந்தினாலும்
மீன் கரையைக் கடக்காததைப் போல
என் கால்களும் பூமியைத் தாண்டி போகவில்லை
நான் அதிகப்படியாக முட்டாளாக இருக்க முயன்றேன்
நகங்களுக்குப் பதிலாக விரலை வெட்டினேன் பழங்களை எரிந்து தோலைத் தின்றேன்
பறவைகளைக் குரங்குகள் என்றும்
கடலைப் பட்டாம்பூச்சி என்றும் அழைத்தேன்
என் தலைமுடிக்கு ஐநூறு வயது என்றேன்
கார்காலம் தொடங்கியது
குதிரைகளின் காவலர்கள் கல்லாக மாறியதாக வந்த வதந்திகளை நம்பினேன்
காற்று செத்துவிட்டது எனவும் நம்பினேன்
இரவிலும் கரும்பில் நீடிக்கும்
இனிப்பாக என்னிடம் இருந்த அன்பு,
விதைப்பவரின் கால்தடங்களும் தானியங்கள் என சொல்லிகொடுத்தது
கார்காலம் முடிந்தது
நனைந்து நனைந்து நானே மேகமாகிவிட்டதைப் போல உணர்ந்தேன்
கிணற்றின் வீட்டிற்குச் சென்றேன்
நீர் மட்டம் உயர்ந்திருந்தது
கைகளை நீட்டி முகத்தை ஈரமாக்கிக் கொண்டேன்
மீண்டும் கண்ணாடி ஆனதற்கு நன்றி கிணறே என்றேன்.
காலம் எல்லாவற்றையும் மாற்றும்
காத்திருப்பு எல்லாவற்றையும் மாற்றும்
கிணறு முதலும் கடைசியுமாய் இதைத்தான் பேசியது.