உன் நினைவென்பது
கரிக்கோட்டு சித்திரம்..!
கனவுக்கும்,
கற்பனைக்கும் இடையேயான நிகழ்காலத்தின் தீரா சமர்.
காற்றுக்குதிரையேறிய மனதின் ஓயா சவாரி..!
உன் நினைவென்பது.
கழுத்தை பின்னிய
நச்சரவத்தின் நெடும்பல்..
சுழன்றெரியும் தீயிடை
நிலைத்த வெற்றிடம்..!
உன் நினைவென்பது நாசியில் நிறைந்த காலத்தின் வாசம்…
ரணத்தின் மீதான ஒத்தடத்தின் உயிர்சுகம்..
உன் நினைவென்பது
முற்றி முதிர்ந்த முது தேறலின்
பற்றி எரியும் தீரா கசப்பு
ஆம்.. !
உன் நினைவென்பது
மீளவொண்ணா மாயப்பெரும் போதை..!
தேர்ந்த பரிசகாரனின்
பக்தியோடும் பக்குவத்தோடும் தான்
சமைக்கப்படுகிறது
உனக்கான என் ஒவ்வொரு சொல்லும்.
நிவேதனமாய் நீ இதை ருசிக்கும்
முன் தனக்கென கேட்பவர்களிடம்
படையலுக்கு முந்தி இனிப்பை
உண்ண விழையும் குழந்தைகளின் சாயல்..!
அன்பை சுமந்துவரும் என் மொழிகள்
பிறர் அறியாவண்ணம் உனக்கு கடத்துவது…
பெருவிருந்தாயினும் பிடித்த நல்லிக்கறியை வாறி எடுத்து
கணவனுக்கு பரிமாறும் மனைவியின் காதல்…
தனக்கு கிடைத்த பண்டத்தை பேரன் / பேத்திக்கு
என பத்திரப்படுத்தும் கிழவியின் வாஞ்சை…
பாதியை மட்டும் கரந்தாலும் கன்றுக்கு என
மடிசுருக்கிக்கொள்ளும் பசுவின் தாய்மை..
கூரிய பற்களிடையே காயம்படாமல் குட்டியை
கவ்வித்திரியும் நாயின் ஜாக்கிரதை உணர்வு…
நெருக்கிக் கட்டிய மல்லிச்சரத்தை
நறுக்கித்தரும் தோழியின் சிநேகம்…
ஆடும் மயிலின் தோகையென சிலிர்த்தபடி விரியும் மோகம்…!
எனக்கு நானே மிச்சமில்லாத உனக்கான படையல்..!!!
– பாரதி சித்ரா
நேர்த்தியான கவிப்பு..
நன்றியும் அன்பும் அண்ணா 😍
அழகு அத்தனையும்
நன்றியும் அன்பும்