cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 10 கவிதைகள்

முருக தீட்சண்யா கவிதைகள்


கார்த்திகைப் பூக்களின்
அதிகாலை வெண்சித்திரம்
பனியைத் தூவுகிறது
கஸ்தூரி இடப்பட்ட
பொன் வகிடொன்று
பூத்து குலுங்கி இருக்கிறது
மழை மேகம் திரண்டிருக்கும்
இவ்வுப்பு வெயிலில்
நனைவதற்கும்
கரைவதற்கும்
ஏதுமற்று
துவள்கிறது உடல்
தனித்து விடப்பட்ட
பால்யத்தின் வீதிகளில்
கொத்துக் கொத்தாக
உதிர்ந்திருக்கும்
மலர்களை காற்று
நகர்த்துகிறது
அந்நறுமண நீல மலர்கள்
அனாதைகளென
அலைவுறுகின்றன
மழையைத் தூர்த்த
செம்மஞ்சள் நிற வெய்யில்
பகலின் மீது கவியத் தொடங்குகிறது
குதூகலித்து இளமைக்கு திரும்ப
இந்த விநாடிகளே போதும்,
அங்கே இருப்பவளுக்கு
இது எதுவுமே தெரியவில்லை
மனம் கண்ணாடிச் சுவரில்
நடனமிடுவதும் கூட.

ரு நீல மேக மயில்கள்
அசைந்தசைந்து நடந்து கொண்டிருக்கின்றன

பொங்கும் பிரவாகமெடுத்து
மெல்ல மெல்ல பரவுகிறது மழை

ஆச்சர்ய குறியிலான மின்னல்கள்
விண்ணேகி தெறிக்கின்றன

வெறியேறிய அகல் ஒன்று
காற்றின் திசையெங்கும் அலைவுறுகிறது

கனவிற்குள் சிதறிய காலம்
கரைதட்டி மீள்கிறது

அத்தனையும் பிடுங்கி எறியப்படும்
நிலத்தில் உடல் தாவரமாகி இறைஞ்சுகிறது

ஒளி மெல்ல மெல்ல இருளில் மூழ்குகிறது
யாரோ அவ்விரவை சாமத்திற்கு
இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்

கடைசி மணி ஒலிக்க எல்லா நிசப்தங்களும்
வானத்தைவெறித்தபடி வெளியேறுகின்றன.

கைவிடப்பட்ட அச்சமவெளியில்
ஒரு ஜெம்ஸ் மிட்டாயைப் போல
கரைந்து கொண்டிருக்கிறது காலம்.

லையடிவாரத்தின் பாதக்கொலுசென
உதிர்ந்திருக்கின்றன அகாலத்தின் பூக்கள்
இரவு இரயிலைப் போல
நீண்டிருக்கும் வானில்
திங்களை
தலைகீழாக நிறுத்தியிருக்கின்றன
வெளவால்கள்
அரிய வகை வன்மத்துடன்
உதிர்கின்றன நட்சத்திரங்கள்

ஒரு மலரைப் போல
முந்தைய நாளை சூடியிருக்கும்
என் அவநம்பிக்கையின் தேவதையே
எப்போது நீ வந்தாய் என்றேன்
கணத்தின் மீது கை வைத்து காட்டினாய்
உன்னை ஜாமத்தின் மீது கிடத்தி விட்டு
பிரமையின் கலங்கரை விளக்கை
வரையத்தொடங்கினேன்

காற்றில் மோதிப் பறக்கும்
குமிழிப் போன்ற உன் விழிகளில்
நன்மையையும் தீமையையும்
கலந்தே தீட்டியிருக்கிறாய்

நீயேன் எப்போதும் சிறு நண்டின் ஓடுகளையே
சூடியிருக்கிறாய் என்றேன்
இருத்தலின் நீடிக்கும் மர்மத்தை
இன்மையின் விழிகளால் பார்த்தாய்
கைவிடப்பட்ட பறத்தலின்
சிறகிலிருந்து சந்தேகத்தின் நறுமணம் எங்கும் பரவுகிறது

கனவிற்கும் விழிப்பிற்க்கும் இடையிலான
மனநல காப்பகத்தில்
பைத்தியம் பிடித்த தடகள வீரனைப் போல
இறந்த காலத்தைத் துரத்தியபடி
தறிகெட்டு ஓடுகிறேன்

நீ மட்டும் ஏனிப்படி கரையைத் தின்று
அலைகளை செரிக்கிறாய்
கழிவிரக்கத்தின் மீது
உன் நினைவுகளை வைத்து
சூதாடி சூதாடி தோற்கிறேன்

திசைகளை நீ மட்டும் தனியாகவே
எரித்திருக்கலாம்
அந்தரங்கத்தின் இரகசிய மணம்
காட்டி கொடுத்து விட்டதே
நீ காலத்தை சுத்திகரித்து
பாவமன்னிப்பில் புதைத்து வைத்திருப்பதை

சமவெளியில் படரும் நிலமடர்ந்த
இருளைப் போல நாம் அடுக்கப்பட்டிருந்தோம்

நேர்ந்துவிட்ட காமத்தை
அவமானங்களின் சன்னதியில் வைத்து
பலியிடுகிறேன்
பொன்னொளியின் சாபங்களை நீட்டுகிறாய்
உன் நிதானமின்மையை முத்தமிடும்
என் தனிமையின் அலைகளை எழுப்பாதே
என் உறுதியை முத்தமிட்டு குலையச் செய்யாதே
நழுவுகின்ற இவ்வுடலைத் தாங்கு
நடுங்குகின்ற இம்மனதை தழுவு
இந்த இரவை இறுகப் பற்றிக்கொள்
எனக்கு எமாற வரமளி.

வன் நிழலாகி விடுவதென்று
முடிவு செய்தான்
எதன் நிழலாகுவதென்று
தெரியாமல்
எதிர்ப்படும் எல்லாவற்றின் மீதும் மோதி
அதனதன் நிழலானான்
இல்லைகளின் நிழலானான்
ஆம்களின் நிழலானான்
இன்மையின் நிழலானான்
பின் இருத்தலின் நிழலானான்
ஒரு பொழுது அவனொரு குதிரைவாலின்
நிழலானான்
இருளில் அது வளைந்து
நெளிவதைக் கண்டவர்கள்
சர்ப்பமென அஞ்சி அடிக்க தொடங்கினர்
பின் பெருநோயொன்றின் நிழலானான்
மெல்ல நோய் பிம்பம் பெருகி
உயிர்க்கொல்லியென
வாட்டத் துவங்கியது
மிச்சமிருக்கும் வாழ்வின் மீது
என்னை கிடத்திவிடு என்று
உரக்க கத்தத்துவங்கினான்
நிழல் பேசியது
நான் இப்போது உன் இதயத்தின்
நிழலாகத் தான் இருக்கிறேன்
நீ தப்பித்துக்கொள் என்று
இடது புறத்துக்கு மாறி தாறுமாறாக
துடிக்கத் தொடங்கியது.

நீண்ட மிக நீண்ட நதியின் கரையில்
நடந்து கொண்டிருக்கிறேன்
மனதின் குரல் எட்டும் தொலைவு வரை
யாருமில்லை
ராட்சத உருக்கொண்டு பெருகிறது நிழல்
வழி தவறுகின்றன ஆநிறைகள்
கைவிடப்பட்ட வானவில் ஒன்று
நிறங்களை கரைத்துக் கொண்டிருக்கிறது
இருளின் மீது படிகிறது காவியத்துயர்
துருவங்களின் ஒத்திசைவில் அதிர்கிறது புவி
யாருக்காக வரையப்பட்டதோ இக்கணம்
அவர்களையே விழுங்கக் காத்திருக்கிறது
பெரும் நிசப்தம்.

டும் பனியின் இம்மார்கழி சாலையில்
பறக்க எத்தனிக்கும் அப்பறவையை காணுதல் நம்ப இயலாதது
காலைப் படிமங்களை வானத்திற்கு இறைக்கும்
அச்சிறு பறவை
மலையருவிக்கு முத்தத்தை
குதூகளித்தளிக்கிறது
கூதலென கொட்டும் பனியை
சிறகை சிலிர்த்து
ஆராதிக்கிறது
பாதசாரிகள் உச்ச குளிரில்
வெண்சிலையென
விறைத்து நிற்கிறார்கள்
பனிப் பூக்கள் காலடியில்
மேகத் தவம் பூணுகின்றன
கட்டற்ற குளிரின் மாயமாக
காற்றின் திசையெங்கும்
ஒரு தாவணித் திரை
பணிப்பாறைகளை உருக்கி
பவள முத்தங்களாக்குகிறது
அந்த கணம் மறுகணமாகும் நொடியில்
அப்பறவை காலத்தை பனிச் சித்திரமாக்கி பறக்கிறது

யிரம் மாயப்பிரகாசத்தோடு
அந்தக் குடை
அஸ்தமனத்திற்குள்
பிரவேசித்துக் கொண்டிருக்கிறது
திட்டமிடாத சந்திப்புகளின் மீது
பெய்கிறது ஒரு பேரண்ட மழை
அவன் குடையின் மீது
கவனம் கொள்கிறான்
அனிச்சையான அந்த ஈரத்தின் மீது
நிலத்தின் பாடல் இசைத்தபடியே
இருக்கிறது
அவன் மீண்டும் குடையின் மீது
கவனம் கொள்கிறான்
காற்றும் சேர்ந்து கொள்ள
பேரிருளை காலத்தின் மீது கொட்டியபடி
குடை குதூகலித்து அலைகிறது
இப்போதும் மறுபடியும் மறுபடியும்
அவன் குடையின் மீதே
கவனம் கொள்கிறான்
வானத்தின் மீது மோதிவிடாமலும்
நிலத்தின் மீது இடித்துவிடாலும்
தொடரும் பயணத்தில்
இப்போது அவன் கவனம் தவறுகிறான்
தவறவிடப்பட்ட குடையோ
ஆயிரம் சிறகுகள் கொண்டு
விண்ணேகி விண்ணேகி விரிகிறது
இப்போது தொட முடியாத தூரத்தில்
அது ஒரு வெள்ளைக் கைக்குட்டையென
உயரப்பறக்கிறது
உலர்ந்த மேகத்தின் மீது
பல யுகத்திற்கான மழை
வற்றிக் கொண்டே இருக்கிறது.

னக்கொரு காஃபி கவிதை எழுதுவாயா ? என்றவள்

சரியான விகிதத்தில்
கலந்து தயாரித்த
காஃபியை பருகியபடி
பேசத்தொடங்கினாள்

நானொரு மரண வீட்டிற்கு சென்றிருந்தேன்
அங்கு ஒரு ஜீவனுள்ள காஃபியை பருகத்தந்தார்கள்
நான் அந்த காஃபியை திரும்ப திரும்ப வாங்கி
குடிக்கத் தொடங்கினேன்
அப்போது மரணத்திற்குள் இருந்தவன்
எழுந்து வந்து என் கோப்பைகளை உடைத்து விட்டு
மீண்டும் படுத்துக்கொண்டான்

நான் பிறந்த போதே என்தாய்
ஒரு காஃபியின் தாலாட்டைத்தான் பருகத்தந்தாள்

சிறுபிராயத்தில் ஒரு முறை
காஃபி ராகத்தை இசைத்தவனோடு
நான் ஓடிப்போய்விட்டேனாம்

பதின்ம வயதில் நானொரு கந்தர்வனை சந்தித்தேன்
அவனொரு கரந்த காஃபியின் வாயிலாக
தன் காதலை பருக தந்து கொண்டே இருந்தான்

இப்படி காஃபி குறித்து அவள் விவரித்த கதைகள்
நம்பும்படியாக இல்லை என்றாலும்
காஃபி நிறத்தில் வறுக்கப்பட்டிருந்த
அவளது உதடுகளை பார்த்தபடியே
அவன் தலையாட்டிக் கொண்டிருந்தான்.


 

About the author

முருக தீட்சண்யா

முருக தீட்சண்யா

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ‘கீரனூர்’ கிராமத்தை பூர்வீகமாக கொண்ட முருகதீட்சண்யா, தற்போது வசிப்பது மயிலாடுதுறையில். வணிக நிறுவனமொன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறார். “நீர்மையின் சாம்பல் சித்திரங்கள்” எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். இவரின் கவிதைப் படைப்புகள் சொற்கள், காக்கைச் சிறகினிலே, புதுப்புனல், கணையாழி போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
D NANDAKUMAR

சிறப்பு நண்பா
நுட்பத்தில் நுட்பமான கவிதைகள் வாழ்த்துகள்

கற்பகசோபனா

எப்பா, ரொம்ப சூப்பருப்பா..

வாழ்த்துக்கள் முருகதீட்சண்யா

You cannot copy content of this Website