cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 10 கவிதைகள்

யாழினி கவிதைகள்

யாழினி
Written by யாழினி

ன் வீட்டில் எப்போதும்
அந்த ஒரு துண்டு வெளிச்சம் இருக்கும்
சிலபொழுதுகளில் இன்னும்
சிறிய சதுரத்தில்
அந்த வெளிச்சம் பேசிக்கொண்டே இருக்கும் என்னிடம்
மௌனமாய் நான் விழி
கசிந்த பொழுதுகளை
அது அறிந்தே வைத்திருந்திருந்தது
மனதுக்குள் முனகிய பாடல்வரிகளை மனனம் செய்துகொள்ளும்
சிலசமயம் சூரியனையும்
எப்போதாவது நிலவையும்
அடிக்கடி நட்சத்திரங்களையும்
தோட்டத்துப் பூக்களையும் காட்டி
என்னை சமாதானப்படுத்தும்
என் உடைந்த காதலை
அதுக்கு மட்டும் சொல்லியிருந்தேன்
என் அவசரப்பொழுதுகளை
எண்ணி சிரிக்கும்
இணைபிரியாத் தோழிகளானோம்
ஏதோ ஒரு நொடியில்
அந்த வெளிச்சம் என் வானம்
என உணரத்தொடங்கியபோது
சிறகுகள் முளைத்திருப்பதைக் கண்டேன்.

ந்த மழைக்காலம்
என்ன செய்துவிட முடியும்
என்றிருந்தேன்
காத தூரங்களுக்கு
அப்பால் இருக்கும்
உன் உள்ளங்கைச் சூட்டை
எனக்குள் கடத்திக்கொண்டிருக்கிறது
இக்காலம்
மஞ்சள் பூக்கள் பிடிக்குமெனமறிந்து
பூவரசம்பூக்களை
பறித்துத் தருவாய்
பூக்களற்ற இக்காலத்திலும்
உன் மணத்தை நிறைக்கிறது
இக்காலம்
மழை முடியுமுன்
அவசரமாய் வந்து சேரவேண்டிய
கட்டாயமில்லை
பொருத்து வா
மழையை நிதானித்து
உள்ளிழுக்கும் நிலமாய்
நினைவில் ஊறிக்கொண்டிருக்க
உதவுகிறது இக்காலம்
நீ வரும் வழியெங்கும்
நிறைந்திருக்கும்
மூக்குத்திப்பூக்கள்
வசந்தத்திற்காய்..

தியின் வேகத்தில்
பயணிக்கத்தொடங்கிய கணத்திலேயே
வாழ்வின் வெற்றி படரத்தொடங்கியது
தனக்கான இடம்
தனக்கான உருவம்
தனக்கான நிறம் என
தக்கவைத்துக்கொள்ளும் எண்ணமின்றி
ஆண்டாண்டுகளாய் கடந்து
யாரோ ஒருவனின் கையில் சேர்ந்தபின்னும் தன்னுள் சேமித்த
குளிரைப்பரப்பிக்கொண்டே இருக்கும்
கூழாங்கல்லிற்கு புத்தனின் சாயல்
வெகு இயல்பாய் நிலைத்துவிடுகிறது

பசலை நிலவு

நீள் இரவின் மிச்சங்களை எண்ணி
தன்சோபை ஒளியால்
கசிந்துருகுகின்றன நட்சத்திரங்கள்
அப்பசலை நிலவோ பனிபடர் யாமத்தில்
இளைத்துக்கொண்டே போகிறது
தண்துறைப்பாசிகள் ஒன்றுகூடி
உன் வரவிற்காய் காத்திருக்கத்தொடங்கின
பிரிவாற்றாமையில் வருந்தித்தவிக்கும்
அவற்றிற்காவது
உன் வரவைச்சொல்லியிருக்கலாம்.

மழை இரவு

அடர்ந்த இருளையும்
ஆழ் மௌனத்தையும்
இறுகப்பற்றியிருக்கிறது
இம்மழை இரவு

மின்சாரமற்ற அறையில்
நொடிக்கு நொடிக்குத் தாவும்
கடிகார முள்ளொன்றின் இரைச்சல்

அமைதி பூசிய இதயத்தில்
கூர்வாளொன்றை இறக்கிப்
பதம்பார்க்கிறது

ஊர் சோர்ந்து துஞ்சும் வேளையில்
மிக தேர்ந்த ராணுவ வீரனைப்போல
ஊடுருவும் உன் நினைவுகள்

முட்கள் கிழித்து சருகாகிய
நினைவுகளைக்கொளுத்தி
நிகழ் பொறுக்கிறேன்

அனுமதியற்ற அத்துமீறலுக்காக
உலர்ந்து காய்ந்த கணுக்கள்தோறும்
முத்தங்களைச் செலுத்திச்செல் !

 

About the author

யாழினி

யாழினி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website