cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 10 கவிதைகள்

கனவுக்கொருவர் நனவுக்கொருவர்


கவிதை சொல்லிகள் இருவர் : கனவுக்கொருவர் நனவுக்கொருவர்

கனவும் நனவும் சந்திக்கும் 

 புள்ளிகளில்  இருந்தே

 அவையிரண்டும்  எதிரெதிர்த்  திசைகளில்  

அவைகளுக்கான காட்சிகளாக நீட்சியுறுகின்றன.   

 

 

மரத்தின் கீழே 

அமர்ந்திருக்கிறேன்

கட்டிலில் உறங்கிக்

கிடக்கிறது எனதுடல்

விட்டுத் தாமதித்து 

வீசும் காற்று 

மரத்தில் மோதிக் கலைய

என் மேல் 

உதிர்ந்து விழும் இலைகளின்

மெல்லிய ஈரம் 

தோல் கலங்களில் படியும். 

 

ரொடேசனில் தலைதிருப்பி

அசையும் சுவர் மின்விசிறி 

எனதுடலின் பக்கமாய்த் திரும்பும்

தருணங்களில்

அருகே விழித்திருக்கும் மகளின்

நினைவிலிருந்து வெளிவரும்

கொத்துக் கொத்தான

சவர்க்கார முட்டைகளில் சில 

என்னில் மோதி உடைகின்றன.

 

மேலிருந்து விழும் கனத்த  நீரோசை 

சடுதியாக செவியுள் நிறைகிறது.

திரும்பினால்

என் பின்னே அந்தரத்திலிருந்து 

வெண்னுரைகள் சடைத்துப் 

பாய்ந்து வருகிறது அருவி.

அதன் நீரோட்டப் பாதையில்தான்

அமர்ந்திருக்கிறேன்

அது என்னை சற்றும் 

நனைத்து விடாமல் கடந்து செல்கிறது

 

 

சமையலறையில் 

திறந்து விடப்படும் பைப்பிலிருந்து

பாயும் தண்ணீர்

வோஸ் பேசனில் மோதிச்

சிதறும் சப்தங்கள்.

அதனைத் திறந்து விட்டிருப்பது

என் கணவன் தான்.

அவன் பீங்கான் கோப்பைகளை 

கழுவும் நேரமிது.

அருவியின் சப்தலயத்திற்குள்

கலந்திணைந்து வெளி வருகிறது

தபேலா ஓசைகள். கூடவே

நடன மங்கையொன்றும். 

என் வயதினை ஒத்தவள் தான்.

தபேலாவின் தாளலயத்திற்கு ஏற்ப

தன் உடலில் அதிர்வுகள் காட்டி

நெழிந்தசைந்து நடனமாடுகிறாள்.

அவளின் கைகளிரண்டும்

அருவியின் ஓசைக்கு இசைவாக

நெழிவைக் காட்டுகின்றன.

அவளது உடலின் வடிவும் வாகும்

என்னையே ஒத்திருக்கிறதென 

ஒரு குழப்பம்

சற்றே நிலவி மறைந்துவிடுகிறது.

 

நீர் சலசலக்கும் வோஸ் பேசனிற்குள்

தூரத்தில் இருந்தே 

குறிபார்த்துப் பாத்திரங்களை வீசி

பயிற்சி செய்கிறான் கணவன்.

சரியாக பேசனில் விழாமல்

முட்டித் தெறிக்கும் பாத்திரங்களை

பாய்ந்து பாய்ந்து பிடிக்கிறான்.

கிரிக்கெட் வீரனின் 

தேர்ந்த லாவகம் அவனிடம்.

அவன் தினமும்

மையலறையில் இயங்குவதைப்

பார்க்கும் எவரும் 

சமைக்கிறானா அல்லது

கிரிக்கெட் விழையாடுகிறானா

எனக் குழம்பக் கூடும்.

அவளது அங்க அசைவுகளில்

லயிக்கும் பொழுதே

என்னுள் திரண்டெழும் காமம்

ஒரு எல்லையில் 

மெல்ல வெடித்து ரத்த நாளங்களில் 

கலக்கும் பரவசம். 

 

 

என் ஒரு கரம் மார்பகத்தை அழுத்த

வாயுதடுகள் அகல

வெளியே பாய்கிறது வெம்மை.

யோனியில் கசிவு.

 

பரவசத்தில் கண்களை ஒரு நொடி 

மூடித் திறக்கிறேன்

அங்கு ஆடியவள் இல்லாது போய்

ஒரு சிறுமி நடந்து வருகிறாள்.

என்னை நனைக்காமல் செல்லும் 

அருவி அவள் கால்களை நனைக்கிறது.

அவள் கால்கள் எத்திவிடும்

நீர்த்திவளைகள்

என் முகத்தில் மோத ஈரமேறுகிறது. 

அடுத்த கணமே

அருவியில் நனைகிறது எனதுடல்.

அந்தச் சிறுமி

என் கைகளைப் பிடித்து

 அம்மா என்கிறாள். 

 

 

தூக்கத்தில் புரளும் எனதுடலின் 

கரமொன்று 

என் வயதை ஒத்த யுவதியின் 

மார்புகளின் மீது விழுகிறது.

என் அருகே மகளிருந்த இடத்தில்

கவர்ச்சியான நடன ஆடை

அணிந்திருக்கும் யுவதி ஒருத்தி

சாய்ந்திருக்கிறாள்.

அறைக்குள் வரும் கணவன்

என் மீது நீரைத் தெளித்து

எழுப்புகிறான்.

மகள் எங்கே என்கிறான்.

என்னருகே சாய்ந்து கிடப்பவளிடம்

நீ யாரம்மா என்கிறான்.  

 

 

About the author

இமாம் அத்னான்

இமாம் அத்னான்

இமாம் அத்னான் இலங்கையில் வாழ்ந்து வருகிறார். இளநிலை சமூக ஆய்வாளராக நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார்.
கவிதை, Flash fiction, கவிதைப் பிரதிகள் மீதான கோட்பாட்டு விமர்சனங்கள் என எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்.

இவருடைய 'மொழியின் மீது சத்தியமாக' எனும் கவிதைத் தொகுதி மோக்லி பதிப்பகத்தின் வெளியீடாகவும், 'மந்திரிக்கப்பட்ட சொற்கள்' எனும் flash fictions பிரதிகள் யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாகவும் வந்துள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website