ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த புகைப்படத்தை
அனுப்பிவிட்ட தோழியொருத்தி
பார் எவ்வளவு மாறிட்ட என்கிறாள்
ஆம் எவ்வளவோ மாறிவிட்டது!
ஒரு காதல் முறிந்திருக்கிறது
பெயரின் பின்னால்
இரண்டு பட்டங்கள் கூடியிருக்கிறது
முன்னூறுக்கும் குறையாமல்
புத்தகங்கள் படிக்கப்பட்டிருக்கிறது
நான்கு காதல்களை நிராகரித்தேன்
குறைந்த பட்சம் பத்து
நல்ல கவிதைகள் எழுதியிருப்பேன்
ஒரு புகைப்படத்திற்கு பின்னல்ல
ஒரு காதல் மலர்ந்து உதிர்வதற்குள்
எவ்வளவு மாறியிருக்கிறது!
திடீரென உள்நுழைந்து பார்க்கிறேன்
உன் அறையில்
பாதி அருந்தப்பட்ட தண்ணீர் குவளை
பாதி உண்ணப்பட்ட ஆப்பிள்
பாதிக் கிழிக்கப்படாத நாள்காட்டி
பாதியில் நிறுத்தப்பட்ட கவிதையென
உன்னைச் சரணடைந்த எல்லாமும்
பாதியிலேயே நிற்கிறது
ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் படாத
என் நேசத்தைப்போல.
மோட்சம் தர விரும்பா ஒருத்தி
நரகத்தின் வாசலையும்
அடைத்து வைத்திருப்பதன்
நியாயமென்ன தேவி?