(அ)
முகச்சுருக்கங்களேறிய
ஒரு பழங்காலமாக
உடல் இருந்தது
அந்த நாட்களின் பிசுக்குகள்
அதனுள்ளிருந்தன
அதை உணராமல்
கருத்தா? பொருளா?
எனத் தத்துவம் பேசிக் களைத்தில்
நதியிலிருந்து நீரெடுத்துப்பருகிக்கொண்டது
தன் சகாக்களையும் பார்த்து
நீர் அருந்துங்களென்றது
இங்குத் தண்ணீர் தான் முதலில் தோன்றியதெனக் கூறி
உடல்கள் நதியில் குழுமத் தொடங்கி
ஏராளமான சதைகள் நீரடித்து விளையாடி நின்றன
அதைப் பார்த்து
உனக்கான அடையாளத்தைத்
தேர்வு செய் என்று உடல் பக்கத்தில் வந்ததில்
வேண்டாம் உடலே!
சதைகளை எதிலிருந்து அடையாளப்படுத்துவது?
என் பிடித்தமான அடையாளம் வேறு
எனச் சொல்லி நகர்ந்தேன்
உடலின் மகிமை தெரியாமல் அலைகிறாய் என்று
கட்டுங்கடங்கா உடல்களைக் காண்பித்தது
நல்லது உடலே!
உன்னை நீயே உவந்து கொள்!
நீ சொல்வது
நதியிலிருந்து சிறு குவளையில்
நீர் அள்ளிக் குடிப்பது போலுள்ளது
எனச் சொல்லி வெளி வந்தேன்.
(ஆ)
நதியிலிருந்து வெளிவந்தவுடன்
நடக்கத் தொடங்கினேன்
பெருங்காற்று வீசியது
வீதிகள் அழகாய்த் தெரிந்தன
கருணைத் தூதனின் பிறப்பிற்காக
நகரம் புதுமையுற்றிருந்தது
கண்டு களிவடைந்து
சன்னமாய் வழி கடந்தேன்
என்னுள் சிறு தியானித்தல் மனநிலை
அது நிரந்தரமில்லை
என உணர்த்தியவாறு
உடல்களின் சப்தம் மறித்தது
பன்னூறு முறை சொல்லியும்
அடையாளம் உணரென்று கூறி
மலை பிளந்தாற் போல
வெடிப்பு மொழி பேசியது
நகர் உடலே!
உன் திறம்புதலான மனநிலை மாற்றிக் கொள் என்று
கடந்தபோது
கடுங்காற்று வீசி
என்னைத் தள்ளிச் சென்றது
வெற்று வெளியில்
ஒரு ஆழம் தெரிந்ததில்
உள்நுழைந்து போனேன்
அங்கு,
திரள திரள கறந்த பாலும்
நறுமலரும் கொண்டு படைக்கப்பட்டு
என் அம்மை தெரிந்தாள்
கண் கசக்கிப் பார்த்தேன்
வெது வெதுப்பு
ஊற்றாக குளிர்ந்தோடினாள்
இப்பொழுது,
நீரை அள்ளி அள்ளிக் குடித்தேன்.
(இ)
பூரண ஒளியாக
வெளி வந்து நடந்தேன்
சிறு சிசுவின் சிரிப்பும் கதையுமாய்
ஊற்றுகளும் என்னோடு வந்தது
போகும் இடமெல்லாம்
வெப்பம் தவிர்த்து
நீர் நிறைந்த பள்ளங்கள் மிகுதியாயின
எக் கரைக்கட்டலும் அதற்கில்லை
நீரின் எல்லைக்கு அளவேது?
கரைந்து போய் நின்ற போது
தன் சேர்க்கைகளோடு உடல் முன் வந்தது
தனக்கு முன்னுரிமை வேண்டுமென
எதிர்கட்சிகள் போல 16 பிரச்சினைகளை
அடுக்கி வாதிட வா! வென்றது
என்னின் அமைதி
அதற்கு வெற்றிபோல் தோன்றியிருக்கக் கூடும்
கேள் உடலே!
அமைதியும் மகிழ்ச்சி தான்
ஆரவாரமும் மகிழ்ச்சி தான்
செப்புகிறேன் உடலே கேள்!
“உடலென்பது சிறு தளிர்
கால்களென்பது பெரு விருட்சம்” என்றேன்
அவ்வளவு தான்…..
நானும்
ஊற்றுகளும் திரும்ப நடக்கத் தொடங்கினோம்
உடல்களைக் காணவில்லை.
” உடலென்பது சிறு தளிர்
கால்களென்பது பெரு
விருட்சம்”
மிக அருமை.