cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

மதார் கவிதைகள்

மதார்
Written by மதார்

  • குறி

அந்தியைக் குறிபார்த்துக்
கல்லெறிந்தேன்

காலையின்
தலைக்கு மேல்
எழுந்த கல்
காலையின்
தலையிலேயே
விழுந்தது

ஓடிச்சென்று பார்தேன்

வீம்பு, பிடிவாதம், முரண்டுடன்
கல் அங்கேயே கிடந்தது

பட்டப்பகல் மறைந்து
மத்தியானம் மறைந்து
அந்தி
சாய்ந்தது
கல்லின் மேல்

என் குறி தப்பவில்லை.


  •  வட்டி வரி

உரையாடலில்
சொல்ல மறந்த
ஒரு வரி
இப்போதென் நினைவில்

உரையாடியவர்
சென்றுவிட்டார்

உரையாடலும்
முடிந்துவிட்டது

இந்த
ஒரு வரியை
திருப்பிக் கொடுக்கவேண்டுமே

அடுத்த சந்திப்பில்
பெற்றுக்கொள்கிறேன்
என்றுவிட்டால்
என்ன செய்ய

ஒரே ஒரு வரிதான்

அசலுடன் வட்டியும்
சேர்ந்தால்
அடுத்த சந்திப்பில்
அடுத்த உரையாடலைத்
தொடங்கவேண்டியிருக்குமோ?


  • மெய்ப்புப் பார்த்தல்

கனவை மெய்ப்புப் பார்த்தேன்
நனவை ஒப்பிட்டு

வரிக்கு வரி பிழை
அடித்தல்கள்

இப்போது
நனவை மெய்ப்புப் பார்க்கிறேன்
கனவின் மூலப் பிரதியுடன்



ன் குழந்தை
கடவுளைத்
திருடிவிட்டது

திருப்பிக் கொடுக்கலாம்
என்று மனந்திருந்திய கணம்

உடமையின்
உரிமையாளன்
என்று யாருமே இல்லை

பின்பு
பெரிய மனதுடன்
குழந்தை
தத்தெடுத்து வளர்த்தது
கடவுளை.


 

About the author

மதார்

மதார்

மதார் - நெல்லையைச் சேர்ந்தவர். தற்போது ஈரோட்டில் பணிபுரிகிறார். 'வெயில் பறந்தது' இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இத்தொகுப்புக்காக 2021ஆம் ஆண்டுக்கான 'விஷ்ணுபுரம் - குமரகுருபரன்' விருது இவருக்கு வழஙகப்பட்டது.

You cannot copy content of this Website