அவனை என் வீட்டுக்கு அழைத்தபோது
உலகம் தலைகீழாக விடியத் தொடங்கி இருந்தது
சூரியன் திசை மாறி காணாமல் போனது
தேடிப்பறந்த பறவைகள் கானகத்தை இழுத்துப்போயின
மனிதர்கள் எல்லாம் தலைகீழாக நடந்துக்கொண்டிருந்தனர்
காமம் முற்றிப்போன விலங்குகள்
இருள் அதிகரிக்க வேண்டி குருகிநின்றன
அவனை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் வழியில்
நிலவு பாதை தொலைத்து நின்றது
தேடி அழைந்த நட்சத்திரங்கள்
கூட்டமாக என் வீதியில் உலாவுதை
கதிரவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது
அவன் வீட்டுக்குள் வந்துவிட்ட போது
அப்பா மாடியில் இருந்து கீழ் தளத்துக்கு
ஏறிக்கொண்டிருந்தார்
அவர் கைகளில் ஜவ்வாது வாசனை நிறைந்திருந்தது
அம்மா நிலை வாசலின் கோலத்தை
அழித்துக் கொண்டிருந்தாள்
அது வீதியெங்கும் தெறித்து விழுந்து எழுந்தோடியது
அவன் என் படுக்கை அறையை எட்டி பார்த்தப்போது
என் படுக்கையில் நான் உறங்கிக்கொண்டிருந்தேன்
எப்போதும் போலவே அவன் என் நெற்றியில்
ஒரு சிறு முத்தமிட்டான்
நான் விழித்துக்கொண்டேன்
இன்றும் நான் மட்டும் தலைகீழாக விடிகிறேன்.
பால் மணத்தின் புடைப்போடு நிம்மதியின் உச்சியில்
உறங்கிக்கொண்டிருக்கிறது குழந்தைகளின் இரவு
உறக்கம் பிடிக்காத தகப்பனின் மனமொரு
விடமற்ற சர்ப்பம் போல சத்தமிட்டு
நாற்புறமும் புரண்டு புரண்டு விழிக்கிறது
ஒன்று இரண்டு மூன்றை
தலைகீழாக எண்ணுவதில் தொடங்கி
லட்சத்தி சொட்சம் வந்தபோது தெருவில்
நடுசாம நாய்கள் குறைத்துக்கொண்டிருந்தன
எண்கள் விட்டுப்போகும் தடங்களை எல்லாம்
எண்ணங்கள் ஆக்கிரமித்துக் கொள்வது இயல்பானது
இமைகளை கண்கள் கொண்டு
மூடுவதைப் போல அவ்வளவு எளிதானதல்ல
அவமானத்தை பொறுத்துக் கொண்டவனின் இரவு
காய்ச்சிப்போன விரலிடையைப் பற்றிக்கொண்டு
ஆறுதல் பேசுகின்றன நண்பனிடம்
கடன் வாங்கிய மலபார் பீடிகள்.
அருமை
நல்லா எழுதுறீங்க வைசு. உங்க புக் படிச்சி இருக்கேன். இன்னொரு poetry collection கொண்டு வாங்க
வார்த்தைகளும் அர்த்தமும் கைப்பிடித்து அழைத்துச் சென்று அழுத்தத்தை கொடுத்து அனுப்புகிறது…. இன்னும் எழுதுங்கள் கவிஞரே…..