மட வார்த்தைகள்
என் நெஞ்சிலிருந்து எழுத்தெழுத்தாக எழுப்பினேன்
சர்க்கரை சிந்திய தரையை தேய்ப்பதென
என் வீட்டையே ஒரு ஒழுங்கோடு மேய்கின்றன
பார்க்க அழகாக இருந்தது
சொற்களை மாதுளை விதைகளாக்கி
அந்தரத்தில் எறிந்தேன்
என் வீட்டு கூடை மாதுளை பழங்களால் நிறைந்தது
உண்ணத் தேனாய் இனித்தது
வார்த்தைகளுக்கு சிறகுகள் வரைந்தேன்
இரவின் ஈசல்கள் போல
அவை என்னையே சுற்றியே பறந்தன
உணரப் பரவசமாய் இருந்தது
இலையுதிர் காலத்தில் இலைகளென
மரம் உதிர்த்த பின்னும்
கிளையில் மயங்கி கிடக்கும்
அவற்றிடம் வெறுப்போடு கேட்டேன்
நீங்கள் ராதையின் காதலென்றால்
குழல் இனிமை விஞ்சி
கோபியர் காமத்தை விரட்டி
கண்ணனைத் தேடவேண்டும்
ரூமியின் கனவென்றால்
மீனின் தாகத்தோடு
வெற்றுத் தரையை முத்தமிட்டு
சொர்க்கத்தின் பாதையை திறந்திருக்க வேண்டும்
ஊர்மிளையின் விரகமென்றால்
பேதையின் கண்ணீரை துடைக்க
காற்றோடு பறந்து காடடைந்து
லஷ்மணனை நாடியிருக்க வேண்டும்.
மட வார்த்தைகளே
உங்களுக்கு
என் கூட்டில் என்ன வேலை?
ஆனந்தனின் மனைவி
ஆனந்தன் நேர்மையானவர்
எல்லோரும் மனதையும் கவர்ந்த நம்பிக்கையாளர்
பக்திமான்
உதவியென்றவர்க்குத் தயாளம் காட்டுபவர்
ஆனால்
அவர் மனைவிக்குத் தீராத கோபம்
முதலாம் மணநாளில்
ஆனந்தன் சொல்வார்
என் அருமை காட்டுக்குதிரையே கம்பீரமாய் நட
நகரத்து யானையது ஓடினால்
தெருக்குழந்தைகள் மிரளும்
அசைந்தசைந்தே உடன் வருவேன்
பயணிப்பது தானே இலக்கு?
அடுத்த ஆண்டின் நிறைவில்
ஆனந்தன் மனைவி சொல்வாள்
எனதருமை ஹெலிகாப்டர் கனவுகளே
ஆனந்தன் செய்து தந்த பட்டங்களில்
ஏறிப் பறந்து பாருங்கள்
மூன்றாண்டுக்குப் பின்னர்
ஆனந்தன் சொல்வார்
என் அருமை மழைத்துளிகளே
ஒளி புகுந்து கடந்தால் என்ன
நிறப்பிரிகை வானவில் அல்லவா?
ஆனந்தன் மனைவி சொல்வாள்
உடைந்த வளையல்கள்
அடைபட்ட கண்ணாடி பெட்டகத்துக்கு
ஒளி கீற்று போதாதா
காட்டும் வடிவங்களுக்கு அளவே இல்லை
ஒருபோதும் கண்ட காட்சி மீளத் தெரிவதுமில்லை
ஐந்தாண்டு கழியும் போது
ஆனந்தனின் மனைவி சொல்வாள்
எனதருமை மாமரத்து வண்டே
மதுவருந்திவிட்டு மாயமாய் போ
மரத்துக்காரனுக்கு
வண்டுண்ணா பழங்களைத் தரவேண்டும்
ஆனந்தன் சொல்வார்
ஆகா என்ன ருசி என்ன ருசி
ஏழாம் ஆண்டு முடிந்ததும்
ஆனந்தன் சொல்வார்
என் அருமை நிலாத்துண்டே
பள்ளியறை விதானத்தில் வரைந்து வைத்த
வானமும் அதில் சில நட்சத்திரங்களும்
மினுக்கி மினுக்கி சிரிக்கின்றன பார்
போதாதென்று
சின்ன சின்ன கோள்களிடம்
உன்னைச் சுற்றி வரச் சொல்லியிருக்கிறேன்
இனி இருளே இல்லை நம் வானில்
பத்தாம் ஆண்டில்
ஆனந்தன் மனைவி சொல்கிறாள்
நீர் மோரில் மேல் மிதக்கும் நீர்
நீரேயல்ல
ஒரே ஒரு முறை கலக்கினால்
அது நீரல்ல
நீர்த்துப்போன மோர்.
வழிக்கு ஒளி
கழிவறையில் அமர்ந்திருந்த சில நொடிகளில்
தரையில் தோன்றியது அரூப சித்திரம்
கண்கொள்ளா பேராழகன்
இமைக்காமல் பார்த்திருந்தேன்
கைக்கெட்டும் தூரத்தில் தான் பூத்திருந்தான்
எழுந்து வர மனமில்லை
உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தவளிடம்
திரைசீலை காட்டி காட்டி மறைத்தது
மகுடம் தரித்த முகமொன்றை
அழையாத விருந்தாடி சென்றதொரு வீட்டில்
கசந்த உணவை முகம் சுளித்து விழுங்கும் போது
அலட்சியமாய் எரியப்பட்ட துப்பட்டா
நாற்காலி திண்டோடு இணைந்து காட்டியது
வினோதமான நிழலோவியத்தை
கட்புனலாக அந்த சித்திரக்காரன்
எப்போதும் என் அருகே தான் இருக்கிறான்
அவன் எனக்காக வரைந்து வைப்பவனை தேடித் தேடி தோற்கிறேன்
அவன் சொல்வது இது தான்
நீ வரைந்தவனை தேடுகிறாய்
வரை குறிப்புகளை தேடு
ஒருவேளை ஒளி கிடைக்கலாம்.