நிறமிலி படிமங்கள்
நிறங்களின் கூர் படியா
ஓவியத் தூரிகையால்
என்
அங்கப் பிரதேசம்
முழுவதும்
நம் நினைவுகளைச்
சிந்தி வரைந்தேன்
சருமச் சலதி
கூலாகிட
கரைந்து ஓடின
உன் பிம்பங்கள்
என்னை
அழித்து அழித்து
உன்னை உயிர்ப்பிக்கவே
உடலொழிந்த நான்
உன் இமைகளைப்
போர்த்தி
மறைந்திருக்கிறேன்
இரட்சண்யத்தின்
இறுதித் துளியால்
இன்னும்
நனையப்படாமலே இருக்கிறாய்
இரகசியமான
என் இருப்பை
விழிதிறந்து தேடும்
பாசாங்கை
நிறுத்திக்கொள்ளும் கணம்
மறுரூபங்களின் மெய்ம்மையில்
நீயும் அழிவாயென
அறிந்துதானிருக்கிறாய் போலும்.
மாம்ச பாவம்
நான்
தென்மலையாக
மாறியதும்
என் மழைக்காட்டையெல்லாம்
அழிப்பதற்கெனப்
பூக்கத் தொடங்கிவிட்டாய்
இலைக்கின்னிகள்
நசித்துண்ணும்
பச்சையமாய்
நான் சுவைக்கப்படுகிறேன்
கண்டறியா
என் வண்ணங்களையெல்லாம்
செடி கொடியாய்ப்
பூசிக்கொண்டு அசைவாடுகிறாய்
பூமியை மூடியிருக்கும்
சருகலாய்ப்
புராண காலம்முதல்
நிலமார்பில்
படர்ந்திருக்கிறாய்
எப்போதும்
பெய்யும் தூரலில்
புகையும் மண்வாசமாய்
ஜீவித மணம் இரைக்கிறாய்
இன்னும் ஓர் ஊழி
இப்படியே கிடப்போம்
என்ற
கவிகை நிழல்
உத்தரவாதத்தை
துலங்கா
நம் புலத்தில் வாக்களிக்கப்பட்ட
தெய்வீக உடன்படிக்கையை
நான் மாத்ரம்
முறித்துக்கொள்ளாதிருந்தால்
தழையுடுத்தி
வெளியோடத் தேவையின்றி
தோட்டத்திலே
புணர்ந்தபடி இருந்திருக்கலாம்.
கயிற்றழிவு
உறு கயிறாய்ப்
பரவெளி மிதத்ததில்
விலகிவிட்டது
உயிர்பயம்
மரண பள்ளத்தாக்கின்
அடிக் கரும்பினைச்
சுவைக்கத் தயாரான
அதேவேளை
பரமபதத்தின் முடிவைக் காண
மேலேறவும் துணிந்துவிட்டேன்
சர்ப்பத்தின் நுனி நாவாய்
ஏணிப்படிகளின்
சுவை காண்கிறேன்
சுக்கிலப் பூசலின்
வழுவழுப்புக்கு முந்தி
கர்ப்ப மணத்தின்
அணுக்கத்துக்கு முந்தி
புணர்ச்சி போதத்தின்
தானழி கணத்துக்கு முந்தி
காலமென்னும்
கருத்துக்கு முந்தி
கோடி வகை இருட்பிரிகை
கூடாரங்களை முந்தி
ஒளிச் சேர்க்கையின்
படரலையும் முந்தி
… …
விடுபடலை நிறைக்கும்
பயணத்தைத்
தொடங்கி வைத்துச் சிரிக்கிறது
கைப்பிடி ஊஞ்சல்.