அரங்கேற்றம்
ஜன்னலோரப் பயணத்தில்
எதிர் காற்றின் இசைக்கு
தலை கோதிய அவள் விரல்கள்
அலாரிப்பில் ஒரு அடவும்
வர்ணத்தில் ஒரு ஜதியுமாய்
அரங்கேற்றம் நடத்தியிருந்தாள்
எதிர் இருக்கையில் என் மனமோ
பாடல் ஒலிக்காத இரயிலில்
இளையராஜாவின் பாடல் தேடி
அவள் அசைவுக்கு பொருத்தி
“பூ மலர்ந்திட நடமிடும்
பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
விழிகளால் இரவினை
விடிய விடு”
வீடு வந்து சேர்ந்தும்
தட தடக்கிறது இதயம்..
டிக் டிக் டிக்.
கடலளவு ஆழம்
இலையுணவில் ரசம் ஓடும் பழங்கதையில் எப்போதும்
கலந்து போகிறாய்.
ஞாபக பந்தியில்
முதலில் பறிமாறிய
துளி உப்பாய் நீ.
பாயசத்துடனும் கலந்து
கொஞ்சமே கரிப்புமாகி
நினைவில் இனிக்கின்றாய்.
கடலளவு உப்பாய் நீ இருந்தால்
இனி தேனீரிலும் சிறிது
உப்பு சேர்த்து பருக
முடிவு செய்துள்ளேன்.
பழக பழக கரிப்பும்
என் மனதை.
பவளப்பாறையாக்கட்டும்
இனி உன் நினைவில்
மூழ்கிக் கிடக்க
கடலளவு ஆழம் போதும்.
ஊறுகாய் மனசு
உப்பு குலுக்கி வைத்த
உன் செவ்விதழ் முத்தம்
எதனுடனும் தொட்டுக் கொள்ள
இணங்காமல்
என்னைப் போலவே
பந்தியில் பறிமாறிய ஊறுகாய்
பாவமாகிப் போனது.
டாஸ்மார்க் கடைகளில்
என்னை சப்புக் கொட்டி
கீழே விழாமல்
பார்த்துக் கொள்கிறார்கள்.
நீ கடலளவு உப்பாக இரு
நான் விரலளவு ஊருகாயில்
கரம் பிடித்து கொள்கிறேன்
உன்னை.
கவிதைகள் சிறப்பு