cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைகள்

ஆறுமுக விக்னேஷ் கவிதைகள்


 உன் விருப்பம்

உன் எண்ணங்களால்
ததும்பி வழிகிறது மனது
தளும்பும் மனதிற்கு
களிம்பாவதோ அல்லது
தழும்பாவதோ உன் விருப்பம்
குழந்தை தாயின்
சேலை விளிம்பைப்
பற்றிக் கொள்வதைப் போலத்தான்
பற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது
காதலையும் கடவுளையும்
மச்சங்கள் அளவிற்கு
தழும்புகள் கொண்டாடப்படுவதில்லை
என்பதை அறியாதவள் அல்ல நீ.

 வாசப்பூக்கள்

டஜன் கணக்காய் பட்டுப்புடவைகள்
பீரோவில் இருந்தாலும்
அம்மா அவற்றை உடுத்துவதில்லை
சேலை வைத்திருக்கும்
அட்டைப்பெட்டிகள் அனைத்திலும்
இரண்டு பாச்சை உருண்டைகள்
எப்போதும் கிடக்கும்
அத்திபூத்தாற் போல்
அம்மா பட்டுப்புடவையை
உடுத்த நினைக்கும்போது
மாடியில் இருக்கும் பீரோவில்
என்னை ஏதேனும் ஒன்றை
எடுக்கச் சொல்லிப் பணிப்பாள்
நான் எடுத்துத் தரும் புடவை
அவளது கல்யாணச் சேலையாகவோ
பரிசச்சேலையாகவோ இருந்தால்
அம்மாவிற்கு ஏக சந்தோஷம்
ஒவ்வொரு முறை சேலையை
எடுத்துத் தரும் போதும்
பாச்சை உருண்டையின் வாசனையை நான் முகராமல் விட்டதில்லை
அதுபோல் திருஷ்டி கழிக்க
சூடம் எடுக்கும் போதும்
சூட டப்பாவின் வாசனையை
முகராமல் விட்டதில்லை
அம்மாவோடு நான் எப்போதும்
தொடர்பு படுத்திக்கொள்ளும் வாசனைகள்
பாச்சை உருண்டை வாசனையும்
சூட டப்பா வாசனையும்
இவ்விரண்டு வாசனைகளும்
எனக்கு எப்போதும்
மோப்பக் குழையாத அனிச்சங்கள்
கல்யாணச் சேலையையும்
பரிசச் சேலையையும்
பெண்களின் நெஞ்சம்
எப்போதும் மறப்பதில்லை
அம்மாவின் கல்யாணச்சேலை
சிந்தாமணி நிறத்தில்
கத்தரி பூ வண்ண கரை வைத்தது
இன்றுவரை அதை
எப்போது உடுத்தினாலும்
அக்கம் பக்கத்தில் எல்லாம்
‘இது என் கல்யாணச் சேலை’ என்று சொல்லி மகிழ்வாள்
ஆண்களுக்கு
கல்யாண வேட்டிச்சட்டை
பரிச வேட்டிச்சட்டை
என்பதெல்லாம் இல்லை
எப்போதும்
வெள்ளையும் சொள்ளையும் தான்
பிரித்துணர வழிவகையும் இல்லாமல்
எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான
தங்கச் சரிகை.

அப்சரஸ்கள்

முழு கூந்தலையும்
ஒன்றாகச் சேர்த்து வைத்து
ஒருபக்கமாக மார்புக்கு மேல்
படர விட்டிருப்பவர்கள் அழகிகள்
மொக்குள் சிரிப்பால்
தொப்புள் கூச்சம்
உண்டாக்கும் வண்ணம்
பேசும் போது
கண்ணையும் கன்னத்தையும்
மறைக்க வந்து விழும்
கூந்தல் இழைகளை
நிமிடத்திற்கு ஒருமுறை
ஒருகையால் ஒதுக்கி
காதிற்கு நகர்த்துபவர்கள்
அப்சரஸ்கள்
பெண்ணின் முகத்தை
நிலவென்றும்
கூந்தலை மேகமென்றும்
சொல்வது முரண்கள் தான்
மேகம் நிலவை
மறைக்கும் போது
நிலவு அதை ஒதுக்கி விடுவதில்லை
ஆனால் பெண்ணோ
முகத்தில் வந்து விழும்
குழல் கற்றைகளை

ஒதுக்கி விடுகிறாள்.


About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website