விற்பனை மனிதன்
உச்சிப்பொழுதில்
பசியைத் தூக்கி அலையும்
பாதசாரியின் கையில்
பளபளக்கின்றது
விற்பனைப் பொருள்…
பிசுபிசுப்பேறிய தலை
கரைபடிந்த ஆடை
கனமான பையோடு
திரியும் இவனைச் சுற்றி
கமகம வாசத்தோடு
நாக்கைத் துளைக்குள் ருசியோடு
மஞ்சள் வண்ணக்கலவையாக
ஆவி பறக்கும் பிரியாணி…
நாசுக்காக போக்குக்காட்டும்
லெக்பீஸ் ஒன்று…
அவனின் வியர்வைத் துளிகளை
ருசித்துவிட்டு பறக்கின்றது…
கூதிர்கால நினைவுகள்
கதகதப்பிற்குள்ளாக
இழந்துபோன வாழ்வின் சுவடுகள்
குளிரின் போர்வைக்குள்
சுருங்கி விரிய
வலிகள் கொஞ்சம் உலர்வைக் கொள்கின்றன…
நரைத்த தாடியில்
சிக்குண்டு கிடக்கிறது அவனின் மனம்..
காற்றும் கோத முடியா தலை மயிாில்
கடந்துபோன வாழ்வின்
மிச்சம் கொஞ்சம் எச்சமாக
மாட்டித் தவிக்கின்றது..
இவன் ஒய்யாரக்குளியலைக்
உலகம் காணாதவரை…
இவனின் வாழ்வென்பது
மணல் லாரியில் சிக்கிய
தவளையாய் அன்றாடம்
வதைபடுகின்றது…
நெருப்பு அடங்கிய பின்பும்
இவனின் நினைவுகள் புகையாய்
கசிகின்றது என் தோட்டத்தில்…