குற்றவுணர்ச்சி.
வைக்கம் முகமது பஷீர் கனவில் வந்தார்
ஆச்சர்யம் தான்
முன்பு புரிந்த ஒரு குற்றத்தின் வடுவில்
அவ்வப்போது உண்டாகும் வேதனைக்காக
பாவ மன்னிப்பு வழங்குவதைப் போல அசைந்த
அவரின் நீண்ட அங்கியின் நுனியிடம்
பகிர்ந்து தேம்பினேன்
மெலிந்த குரலில் சில ஆறுதல் சொற்களைப் பேசினார்
நிஜத்திலும் அவர் குரல் இப்படித்தான் இருக்குமா?
தெரியாது
மெல்லிசை போலான அந்த மொழியில்
கடலை உலர வைக்கும் ஆற்றலிருப்பதாய்
உணர்ந்தேன்
அதனை இம்மி பிசகாது
உன்னிடம் பகிர்ந்துக் கொள்ள அழைத்தேன்
உன் உலகமோ சுவிட்ச் ஆப்பிலிருந்தது
பஷீரோ வந்த வழி சென்று விட்டார்
இன்னொரு குற்றத்தின் உலர்ந்திடாத
வாசலை நோக்கி
நடக்கத் தொடங்கினேன்
நான்.
பேனா.
கீழே கிடந்தது
எடுக்க சிறு தயக்கம்
மை தீர்ந்து ஏமாற்றம் எனும் சொல்
அதில் படிந்திருக்குமோ?
இருந்தும்
புதுமை மாறா அதன் வசீகரம்
தன்னிடத்தே குனிய வைத்தது
எடுத்து உள்ளங்கையில் எழுதிப்பார்த்தேன்
ஆம்
நீங்கள் நினைப்பது போலவே
ஒரு பெண்ணின் பெயர் தான்
தொலைத்தவர் என்று
யாரும் அங்கிருக்கவில்லை
நானே வைத்துக் கொண்டேன்
மளிகைப் பட்டியல் முதல்
இன்னும் சிலவும்
இதோ இதையுமே அதில் தான் எழுதுகிறேன்
இப்படியிருக்க
அதன் மூடி தொலைந்து விட்டது
வீட்டில் தான் எங்கேனும் விழுந்திருக்கக்கூடும்
தேடுகிறேன்
தேடுகிறேன்
கிடைத்த பாடில்லை
வேறெந்த வேலையும் ஓடவில்லை
பேனாவைத் தொலைத்த திருவாளரே
உங்களுக்கெங்கேத் தெரியப்போகிறது
இரண்டு நாட்களாய்
தொடரும் அவதி.
நன்றி : பா.ராஜா புகைபடம் : நெகிழன்