நட்சத்திரங்களற்ற இரவு
காற்று அழைக்கிறது மூன்றாம் இரவில்
இலை விழும் சப்தத்திற்கு
தெருவிளக்கினடியில் பூனைகள் புரண்டு படுக்கின்றன
மாபெரும் அலையின்மீது
மீச்சிறு அலை தவ்விக்கொண்டு
கரையைத் தொடச்செல்கிறது
நத்தைக்கூட்டின் வெளியே நீட்டிக்கொள்ளும்
தலையில் எறும்புகள்
நங்கென குட்டிச்செல்கின்றன.
நீ சொல் இங்கே
உன் பெயரென்ன
இருளைக் கிழித்துச்செல்லும் புகைவண்டிக்குள்
ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து
யாரோ ஒரு சிறுமி
யாரோ ஒரு சிறுமியைத் தேடுகிறாள்
நெளியும் நிழல் உடனிருக்க
நீ சொல் இங்கே
யாராக இருக்க விரும்புகிறாய்
குற்றங்களுக்கப்பாற்பட்ட விழிகளோடு
திண்ணைகளைத்தேடி வருபவனை
நாய்கள் முகர்கின்றன
நக்குகின்றன
கடித்திழுக்கின்றன
யாவற்றையும் அனுமதிக்கிறான்
மௌனமாக
நீ சொல் இங்கே
நீ யாராக இருந்தாய்.
https://radiopublic.com/nutpam-podcast-6nyQXM/s1!03c5f#t=3
சொற்கள்
தொண்டைக்குழிக்குள் ஒரு மேடை இருக்கிறது
அதில் ஆடைகளற்று நிர்வாணமாக
அவன் நின்று கொண்டிருக்கிறான்
அவனிடம் ஒரு புத்தகம் இருக்கிறது
அதில் சில குறிப்புகள் இருக்கின்றன
அதிலிருந்து
மன்னிக்கிறான்
தண்டிக்கிறான்
தள்ளுபடி செய்கிறான்
இன்னும்
விழுங்கிக் கொள்கிறான்.
சந்தை
பார்வைகளற்றவனின் சந்தையில்
தடவுதல் மொழி
சொரசொரப்பான
மிருதுவான
ஈரப்பதமான
காய்ந்த
விரைத்த
கொழகொழப்பான
கசங்கிப்போன
நொறுங்கிப்போன
ஒடிந்த
கிழிந்த
பிசுபிசுப்பான
எத்தனையோ
பரிபாஷைகளை தடவிக்கொள்கிறான்.