cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைகள்

சேலம் ராஜா கவிதைகள்


வற்றாத ஞாபகநதி.

இதயத்தை இடமாற்றம் செய்த காதல்
தடம்மாறி கிடக்கிறது
எத்தனை முறைதான் நீயும்
அதே மோதிரத்தை
சொட்டை தட்டப்போகிறாய்
வீசவும் முடியாமல்
விழுங்கவும் முடியாத இரண்டாம் கட்ட
தண்டனை எத்தனை கொடியது.
வாழ்வென்பது எப்போதுமே இப்படித்தான்
பிடித்தவற்றை பிடிங்கிக் கொண்டு பிடிக்காதவற்றை கையில் திணிக்கும்
வாழ்தே ஆகவேண்டும்
அதற்காகத் தான் வாழவே வேண்டும்.
நல்லவேளை சேரவில்லை
நினைத்துப் பார்ப்பதற்கென்று
என்னிடம் எத்தனை ஞாபகமிருக்கிறது.
வாழ்தல் கொடிதுதான்
மாத்திரையை போல ஞாபகங்களை விழுங்கிக் கொள்ளத்தான் வேண்டும்
கால் தடம் பதித்த இப்பெருநகரம்
நரகமாகும் சில நேரங்களில் சொர்க்கமாகும்.
வானிலை மாற்றத்தைப்போன்று
உனது நினைவு மழையாய் வெயிலாய்
குளிராய் என்னைப் பின் தொடரத்தான் செய்கிறது.
எத்தனை முறை உதறினாலும்
இதயத்தை விட்டு
உன் ஞாபகங்கள் பிரிவதேயில்லை.
என் தனிமையில் கூட எப்போதும்
உன் ஞாபகங்கள் என்னை
தாங்கி கொண்டேயிருக்கிறது.
எதுவுமே நினைவில்லை என்று
எத்தனை முறை பொய் சொன்னாலும்
உன் ஞாபகத்தை யார் கண்டுபிடிப்பது
ஒளிந்து விளையாட உன் ஞாபத்தை தவிர
என்னிடம் எதுவுமில்லை.
எல்லாக் காதலர்களைப்போலத் தான்
உன் பெயர் தாங்கிய பலகையை
கடந்து போக முடியாமல் தவிக்கிறேன்
பிரிந்து சென்ற இடத்திலியே
ஞாபகங்கள் நின்று விட்டது
வாழ்வதற்கு உயிர் மட்டுமா தேவை
உன் ஞாபகங்கள் நின்ற நொடியை
தொட்டுப் பார்
உடல் உரைந்து போய் மண்திங்கட்டும்.

சிகப்புச்சேலையின் நான்காமாண்டு நினைவஞ்சலி.

காதலின் சாட்சியாக
கழுத்துத் தாலியேறியதும்
நெற்றித்திலகமிடும் கோவிலில்
இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டோம்
அன்றவள் அதுவரையுடுத்தாத
சிகப்புச்சேலை உடுத்தியிருந்தாள்

பின்பு நீண்ட பேருந்துப்பயணத்தில்
அச்சேலையின் முடிவு எனக்கு முக்காடானது
எங்கள் இறக்கம் வந்தபோது நல்ல மழை
பயணக் களைப்பு ஒற்றுப்போகாதவளின்
வாந்தியை கையிலேந்தினேன்.

மனைவியாகிவிட்ட மகளின்
செய்கைகளை கண்டறிந்த
அவளுடைய அம்மா கண்டறிந்தாள்
அவள் அம்மா ஆவதற்கு ஆசை கொண்டதை
மூளைச்சலவையால்
மூலையில் குடியேறியது மோதிரம்

பிள்ளைக்கு முலைப்பால் கொடுக்கும்
அரவமற்ற நேரத்தில்
அவளின் நினைவில் உதித்தேன்
ஈராண்டுகளுக்குப்பின்
கண்ணீர்த் துளிகள் காய்ந்த வடுக்களானது

வடுக்களைத் தடவித் தடவி
காலங்கள் கடந்தது
எங்கிருந்தாலும் நீ வாழ்கவென நானும்
நீ வாழ்கவென அவளும்.

இன்றெங்கள் பிள்ளைத் திருமணத்திற்கு
நான்காவது ஆண்டு
அந்தி மயங்கி ஆட்களேதும் வந்துவிடாத
பொழுதில் அழைத்தாள்
தன் சரியை சமாளிக்க அவளுக்கு
தெரியுமென்பது எனக்கும் தெரியும்

முதலில் அவள் வாழ்த்துவாளென நானும்
நான் வாழ்த்துவேனென அவளும்
நியாயங்களை கற்பித்தோம்.

உரையாடல் முடிவில்
அவளது கன்னத்தில்
காட்சியில் பறக்கும் முத்தமொன்று ஒட்டிக்கொண்டது

அதையவள் தடவித்தடவி
சிலாகித்துக்கொண்டபோது
இன்றவள் உடுத்தியிருந்த
சிகப்புச்சேலையைப் பற்றி
இறுதிவரை நான் பேசவேயில்லை.

டோஷிலா பேசிக்கொண்டிருக்கிறார்.

பகலின் இரைச்சல்கள் விலகி
நிசப்தம் கவிழும் நேரம்
அலுப்புகளில் படுக்கையிட்டு
அத்தினத்தை அசை
போடத் துவங்குபவர்களுக்கு
ஆதூரமான ஒரு குரல்.

எல்லாருடைய குரலுக்கும்
ஈர்ப்புசக்தி இருப்பதில்லை
வருடப்படிகளிலேறி
தாய்மடி விலகிவிட்டவர்கள்
இவரின் குரல்மடியில் தஞ்சம் கொள்கின்றனர்.

துயரக்கொதியில் வேகுபவராயினும்
தோல்வியின் நொதியில்
நுரைத்தவராயினும்
நம்பிக்கை மழை பொழிந்து
துவட்டிவிடுகிறது மாயக்குரல்.

முகமே தெரியாதவர்களை
நலம் விசாரிக்கும்போதே
இணக்கமாகிவிடுகின்றனர்
எதிர்வீட்டுக்காரர்களைப் போல்.

குரல்வழி குறளோதுவது
வெகுசிலரே
வாய்ச்சொல் கேட்டு
திருந்தாமல் போனவர்கள் இருக்கலாம்
இவரின் வானொலி மொழி கேட்டு
திருந்தித் தெளிபவர்களுண்டு.

அசைபோடத் தொடங்கியவர்களை
அசந்துறங்க செய்யும் வரை,
ஒளிவிளக்கில் நெளியும் சாலையில்
சலிப்பின் கன்னிகளில் சிக்கியவர்களுக்கு
பயணத்தொலவை
பஞ்சுமெத்தையாக்கிவிடுவது வரை

சூரியன் கவிழ்ந்து
சந்திரன் தெளியுமிரவில்
இரண்டு மணிநேரம்
இரண்டு லட்சம்பேரும் கேட்கலாம்
இருபது பேரும் கேட்கலாம்,

பனித்துளியில் மலர்ந்த
முல்லைப்பூவின் பரிசுத்தம்போல்
புத்துணர்வு பொங்கும் குரலில்
டோஷிலா பேசிக்கொண்டிருக்கிறார்
பேசிக்கொண்டேயிருப்பார்.

RJ டோஷிலாவிற்கு.


Art Courtesy :

  • Kamal RAO ( Red Saree Women)
  •  Svetlana Shamshurina | Dreamstime.com ( RJ Image)

 

About the author

சேலம் ராஜா

சேலம் ராஜா

கனரக வாகன ஓட்டுனராக பணிபுரியும் சேலம் ராஜா இலக்கிய வாசிப்பு, கவிதை, கதை, கட்டுரை, போட்டோகிராபி என இயங்கி வருபவர்.
மூன்று வருடங்களுக்கு முன் "கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள்" எனும் கவிதை தொகுப்பு வெளியானது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருது, படைப்பு சிறந்த தொகுப்பு விருது , தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வளரும் படைப்பாளர் விருது போன்ற விருதுகள் பெற்றுள்ளார். இவரின் அடுத்த கவிதைத் தொகுப்பான ’மயில் பற்றிய குறிப்புகள்’ சமீபத்தில் (2023- பிப்ரவரி) வெளியானது.

Subscribe
Notify of
guest
3 Comments
Inline Feedbacks
View all comments
Ganesan

உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் 🎉

Deepapriya.H

Toshila poem wonderful, first two poems are good for read. Congrats !

மாணிக்கம்

அருமையான கவிதைகள்

You cannot copy content of this Website