cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைகள்

அம்பலப்படப் போகும் உன் அந்நிய முகம்- மூன்று நகரக் கவிதைகள்


நகரம் – ஒன்று

விலையுயர்ந்த கைப்பைகளை
கடைகளில் காட்சிக்கு வைத்திருக்கும் நகரமே

உன்னை அபரிதமாக நேசிக்கிறேன்.

ஒரு கை நிறைய வைரங்களைப் போன்று
ஜொலிக்கும் நுழைவாயில்களால் மட்டுமே
உருவாக்கப்பட்ட உன் வீதிகள்
கடந்து போவதற்கு இனிமையானவை.

அவை நமக்கு நமது இளமையை
திருப்பித் தருகின்றன.

வரவேற்புக் கலையை மாத்திரம்
நீ கவனத்தோடு கற்று வைத்திருப்பதால்

உன் வழியனுப்புதல்கள் பல நேரங்களில்
தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன.

ஆனாலும்
கைப்பைகள் விற்பதில்
தேர்ந்த நகரமே

உன்னை அபரிதமாக
நேசிக்கவே செய்கிறேன்.

விலையுயர்ந்த கைப்பகளின் நிறுவன
இலச்சினைகள் மினுங்கும்படிக்கு
கவனமாக உடம்புக்கு முன்னால்
மடித்துத் தூக்கிய கரத்தில்

முன்னும் பின்னும் அசைந்தபடி
எங்கள் அனைவரையும்
ஓயாமல் கவனித்துக் கொண்டிருக்கும்

இளம் கன்றுகுட்டிகளின்
தோலாலான

உனது தேன்நிறக் கண்களையும்.

நகரம் – இரண்டு

நகரம் என்பது
அந்நியர்களுக்கு உரியது.

நன்றாக இழுத்துப்
பூட்டிய பிறகும்

கிளம்பிப் போனவர்கள்
மீண்டும் திரும்ப வந்து
ஓரிரு முறை உன்னை
பளபளக்கும் பித்தளைப் பூட்டாய்

அசைத்துப் பார்ப்பார்கள்.

அசைத்துப் பார்க்கும் கைகளின்
கிளர்ச்சியிலும் அச்சத்திலும்
கட்டப்பட்டதுதான்

புகழ்மிக்க நகரமே
உன் ஆதி முகம்.

நகரம் என்பது கடவுள்.

சாத்தப்பட்ட கதவுகளில் தொங்கும்
பளபளக்கும் பித்தளைப் பூட்டுகளின்
மகத்துவம்தான்

நகரங்களின் மகத்துவமும்.

எந்த நகரத்துக்கும்
சொந்தமானவர்கள்
என்று யாரும் இல்லை.

நகரம் – மூன்று

உடல் சிலிர்க்கப்
பாடிக்கொண்டு வரும் கருவண்டுகளாக

மெல்ல அசையும் மரக்கிளையில்
ஒளிமிகுந்த ஒரு கொத்துப் பழங்களைப்போல்
தொங்கும் உன்னைச் சூழ்ந்து கொள்வோம்

நகரமே
பரவசமாய் உடல் சிலிர்க்கப்
பாடிக் கொண்டு

இன்னமும் எங்கோ தூரத்தில்
ஆளுயரத்திற்கு வளர்ந்திருக்கும்
லாலாங் புற்களையும்
கறுத்த டுரியான் மரங்களையும்

கப்பி மீன்கள் எப்போதும்
பள்ளிக்கூடப் பையன்களின்
ஜாம் ஜாடிகளின் ஒரு கைப்பிடிக்கு அப்பால்
நிரந்தரமாய் நீந்தும் திறந்த சாக்கடைகளையும்

மெல்லிய வாசனைகளாய்
எங்கள் மீது பூசிக் கொண்டு
மாறாத திகைப்பில் மூழ்கி
உன்னைச் சூழந்து கொள்வோம்

முகங்களை மாற்றிக் கொண்டேயிருக்கும்
பட்டணமே

பரவசமாய் உடல் சிலிர்க்கப்
பாடிக் கொண்டு.


Art Courtesy : Cynthia Anna From Pinrest

About the author

சித்துராஜ் பொன்ராஜ்

சித்துராஜ் பொன்ராஜ்

சிங்கப்பூரில் வசிக்கும் சித்துராஜ் பொன்ராஜ் . இதுவரை தமிழில் 'பெர்னுய்லியின் பேய்கள்' (அகநாழிகை, 2016) 'விளம்பர நீளத்தில் ஒரு மரணம்' (காலச்சுவடு, 2018) ஆகிய நாவல்களையும், 'மாறிலிகள்' (அகநாழிகை, 2015), 'ரெமோன் தேவதை ஆகிறான்' (காலச்சுவடு, 2018) ‘கடல் நிச்சயம் திரும்ப வரும்' (வம்சி புக்ஸ், 2019) , ‘அடுத்த வீட்டு நாய் & இன்னபிற அதிசயம்வற்றாத ஆண் பெண் கதைகள்' (உயிர்மை, 2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார்.

'கதைசொல்லியின் ஆயிரம் இரவுகள்' (யாவரும், 2019) என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார்.

'காற்றாய்க் கடந்தாய்' (அகநாழிகை, 2015), 'சனிக்கிழமை குதிரைகள்' (பாதரசம், 2017) ,
’இரவுகள் பொதுமக்களுக்கானவை அல்ல’ (உயிர்மை, 2023) ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளியிட்டு உள்ளார்.

உலக மொழிகளிலுள்ள பல இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.

2019ல் இவருடைய 'இத்தாலியனாவது சுலபம்' என்ற கவிதைத் தொகுப்பும், 'மரயானை' நாவலும், 2020ம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுப் போட்டியில் தமிழ்ப் புனைவு மற்றும் கவிதைப் பிரிவுகளில் முறையே முதல் பரிசினையும் தகுதிப் பரிசினையும் வென்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website