உனக்காக மட்டுமே
மிச்சமிருக்கும் இவ்வாழ்வு
என உறுதியாய் தெரிந்த
நாளில் தொடங்கியது
இப்பயணம்..
சுருங்கிச் சுருண்டு
என் நிழலுக்குள்
ஒளிந்துக் கொள்கிறது
கடந்து வரும் பாதை..
நிழலின் கனத்தை
சுமந்து உனைத்தேடி
விரைகிறது கால்கள்.
நான் இனித் திரும்பி
போகமுடியாது.
கனவுகள் கைக்கூடியோ
அல்லது முற்றிலும்
கலைந்தோ போகும்
ஒரு வெற்று நாளில்
உன் அதீத அன்பின்
இறுக்கத்தில் உயிர்துறத்தல்
போதும் எனக்கு.
பின்னங்கழுத்து ஈரத்தில்
அப்பிக்கிடக்கும் மயிர்க்கற்றைகளில்
நீள விரல்கள் கோர்த்து
புலியின் வேட்கையோடு
வேட்டையாட முன்னிழுத்து, பின்
அவன்
பூவிற்கும் தெரியாமல்
லாகவமாய் இதழ்தின்னும்
கலைக்கு
என் ஆயுள் கொடை!