cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைகள்

முன்னிரவு பேச்சு…..


(அ)

அவர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள்

அவர்களின் சம்பாவனையில்

சாரம் ஏறுவதும், இறங்குவதுமாயிருந்தது

என் கைகள்

நிறங்களைத் தேட ஆரம்பித்தது

அதோ, கதம்பமான நிறங்கள்….

கச்சிதமாக கலக்கத் தொடங்கினேன்

ஓவியத்திற்குள் நுழைவதற்குள்

அவர்களை

மறுபடியும் எட்டிப்பார்த்தேன்

இடைத்தேர்தல் வாக்காளர் தேர்வு போல்

ரகசிய வாக்கெடுப்புக்குள் மலங்க விழித்திருப்பது கண்டு

கொஞ்சமே துளியான/ நிறைவான

மூச்சினை இழுத்தேன்

என் விருப்புகளில் ஒன்றான

நிலத்தின் கீழ் இறங்குவதை

தீட்டத் தொடங்கினேன்.

 

(ஆ)

அங்கு,

பெரிய பெரிய நிலக்குழிகள்

தோன்ற ஆரம்பித்தது

எனக்கு, அது அறைகளாகக் காட்சியளித்து

பிரெஞ்ச் கட்டிடக்கலையின் சாயல் காட்டியது

அதில், நிறங்கள்  மூழ்கத் தொடங்கின

திண்ணிய மனநிலையில்

சுரமுள்ள இசை போல

ஓவியக்கோர்வை மேலெழுந்தது.

 

( இ)

இப்பொழுது,

நன்கு நிலக்குழிகள்

ஆழமாகின

நான் உட்குடைந்து போனேன்

அமிழ்ந்து போன மௌனங்களாய்

சதைகளற்ற

அடுக்கடுக்கான எலும்புகள் தெரிந்தன

அவைகள்

கோடிக்கணக்கான தடயங்களாக

அறிந்த/அறியாத/ மறைக்கப்பட்ட

புத்தகங்களாய் வெளிப்பட்டன

சற்று அருகில் போனேன்

கண்கள் இருண்டது.

 

(ஈ)

துவள துவள கண் விழித்த போது

அங்குலம் அங்குலமாய்

அவர்கள் எனைச் சுற்றியிருந்தனர்

செஞ்சாந்து குழம்பாய்த் தெரிந்தார்கள்

என் மூளையைக் கசக்கும் அந்நியச்சொல்லாய்

பயனற்ற நிலக்குழிகளைத் தூர்த்து விட்டோமென்றனர்

மற்றும்

எலும்புகளைப் பொடித்து விட்டோமென்றனர்

நான்

சிறிது யோசித்து,

அதனை ஒரு மரக்கால் அளவைக் கொண்டு

அளவிட முடியாது என்றவுடன்

இடுங்கிப் பார்த்தனர்.

( உ)

இப்போது,

அவர்களை விட்டு நகர வேண்டும் எனத் தோன்றியது

போக்குவரத்துச் சிக்கல்கள் போல்

ஆங்காங்கு இருந்தார்கள்

நான் தாழ தாழ ஊரத் தொடங்கினேன்

ஆனாலும்,அவர்கள்

பார்த்து விட்டார்கள்

தோலைத் தேய்த்துச் செல்வதைப் பார்த்து,

ஏன்  வற்றிச்

சுருங்குகிறாய்?

எலும்புகள் போலியானது என்றனர்

போலி/ உண்மை என்று எதுவுமில்லை

அது தன்னளவிலானது

என் தலைத்தாய் அம்மை

ஒவ்வொரு சதையும்

ஆகும் கதையை அன்றே அடிக்கோடிட்டவள் என்றேன்.

 

(ஊ)

இப்போது,

மறுபடியும் நிறங்களைத் தேட ஆரம்பித்தேன்

என்னை

நிறங்களோடு சுற்றிக்கொள்ள விரும்பினேன்

நிலத்தின்  மேற்பரப்பு வேறொரு காட்சியாய்ப்

பிளந்தது

மிகத் துல்லியமாகத்

தீட்டினேன்

அவர்கள் நெருங்கினார்கள்

நான் கவனம் தப்பவில்லை

இங்கு பார்!

ஓவியத்தில் புதிதாக

என்ன உள்ளது?

என்றார்கள்

தெரியாது என்றேன்.

சற்றுத் திரும்பி

வரைந்த ஓவியத்தைப் பாருங்கள்.

அதில்,”உடல் கடலாக இருக்கலாம்.

ஆனால்,நீரென்பது

கால்கள் தான்” என்றேன்.

எங்கினும் நீல நிறம்

மிதந்தாடத் தொடங்கியது.


Art Courtesy : David Dnderson

About the author

ம.கண்ணம்மாள்

ம.கண்ணம்மாள்

மருத நிலம் தஞ்சையை சொந்தமாகக் கொண்டவர். பொதுவெளியில் கவிதை, சிறுகதை என இயங்கி வருகிறார்.
"சன்னத்தூறல் " இவரின் முதல் கவிதைத்தொகுப்பு.
அடுத்த கவிதைத்தொகுப்பு “அதகளத்தி” சமீபத்தில் வெளியானது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website