cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

பூவிதழ் உமேஷ் கவிதைகள்


  • காதலிக்காத பெண்ணுக்கு நிலவு ஒரு பழைய குடிசை

வள் உப்பு போன்றவள் 

அவள் கண்கள் மிளகு போன்றவை 

விரும்பியபடி இருக்கும்போது 

அவள் நிழலில்

கண்டப்பேரண்டப் பறவையின் வலிமை இருக்கிறது 

ஆனாலும்

ஆண்களின் பொய்களுக்கு எதிராக 

அவள் இரண்டு மடங்கு உண்மையை சேகரிக்க வேண்டும்


வள் உதடுகள் அழிஞ்சி பழம் போன்றவை

இளம் ஒஞ்சி உடைய அவளுக்கு

நிலவு ஒரு பழைய குடிசை

சிறு துளையை நகர்த்திக் கொண்டது போல உதடு குவித்து

அதைக் கூப்பிடுகிறாள் 

அப்போது 

கடவுளைப் போல இருப்பதற்கு 

அவளிடம் எல்லா காரணமும் இருக்கிறது.

ஆனாலும் 

இறந்த மரம் நிற்பது போல 

தங்கள் தேவை மீதே நிற்கும் ஆண்கள் 

அவளுக்கு முழுமையானவர்கள் இல்லை.


வள் உடல் அடர்ந்த நிற உடைகளுக்கு ஏற்றது

இருளை இலேசாக பறக்கவிடுவது போல 

காற்றில் களையும் கூந்தல் உள்ள அவள்

தூங்கும்போது படுக்கைக்கு கீழே 

வேறொரு தேசத்தை உருவாக்குகிறாள்,

கைகளை ஒரு காகித கோப்பை போல மாற்றி 

அன்பை பெற்றுக்கொள்ள விரும்பி

உப்பைத் தொடர்ந்து தரும் கடலைப் போல 

அன்பைத் தரும் ஆணைத் தேடுகிறாள்

ஆனால் அவளிடம் வரும்போது 

வடகயிறு போல மாறிவிடும் ஆணின் கைகளை 

அவள் விரும்புவதில்லை


வள் ஈரமான கடற்பாசி தன்மையுள்ள நாசிக்கு மேலே

நான்கு நிலவுகளைப் பார்ப்பது போல கண்கள் கொண்டவள் 

பரவளையம் போல வளைந்த முதுகினால் வானம் பார்க்கிறாள்

அப்போது

மரம் உதிர்க்கும் பூவைப் போல நடனமாடும் 

சில வசைச் சொற்களைப் பேசுகிறாள்

ஏனெனில் அவசரமான ஆண்கள் பற்களைப் போன்றவர்கள் 

அவர்களுக்குச் சுவை தெரிவதில்லை.

அதிலும் 

தங்கள் உடல் இருப்பையே அறியாத ஆண்கள்

இறந்த பூனைகளின் படத்தை வரைபவர்கள் .

 


யாருக்குத் தெரிந்தாலும் சிரித்து விடும் 

ஒரு பாலியல் நகைச்சுவையை நினைத்து மெல்லியதாய் சிரிக்கிறாள்

அப்போது

அவள் ஆடையில் ஒட்டியுள்ள ஒட்டங்காய்ப்புல் கூட அழகாகத் தெரிகிறது

அவளது இரத்த ஓட்டத்தில் மகிழ்ச்சி ஒரு மீச்சிறு படகாக அசைகிறது 

காதின் அணிகலன் காற்றில் அசைவதால் இசைக்கிறது 

அதைக் கேட்க விரும்பினால் 

உங்கள் காதை மட்டும் நீட்டி அனுப்புங்கள் 

ஆனாலும்

ஆண்களால் ஒரு பெண்ணை முழுதாக நேசிக்க முடியாது 

ஏனெனில்

பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு

அரை இதயம்தான் இருக்கிறது.

 


 

  • இரண்டு கவிஞர்கள்

 

நான் வேறு யாருமல்ல 

வானில் பறக்கும்போது 

குளத்தில் தெரியும் பறவைகளை உண்பவன்

நீயும் வேறு யாருமல்ல 

குளத்துக்கு மேலே பறவைகள் எதுவும் பறக்காதிருக்க 

காவல் காப்பவள் அவ்வளவே

நாம் போன பிறகு 

பறவைகள் அதே குளத்தில் நீர் அருந்துகின்றன 

நாம் நண்பர்கள் என்று நினைத்து


  • ஒளிரும் துளை சூரியன்

இருள் எவ்வளவு பெரிய வாய் 

அதன் ஒரு பல்லை

கோவத்தில் உடைத்த இரவில் 

எனக்கு நெடுநேரம் தூக்கம் வரவில்லை 

 

அப்பல்லை

தலையனைக்கு அடியில் வைத்துக்கொண்டேன்

இரவு முழுவதும் உறுத்தியபடியே இருந்தது 

விடிந்த போது 

எனக்கு முப்பத்து மூன்று பற்கள் இருந்தன

 

இரவின் பல் உடைந்த இடத்தில்

வட்டத் துளை ஒன்று

ஒளிர்ந்த படியே இருக்கிறது அது தான் சூரியனா?

உடைந்தவற்றில் மீதம் ஒளிவர்வதில்

புதுமையொன்றும் இல்லை

உடைந்த மனம்  வலியில் ஒளிர்வதில்லையா? 

 


 

  • கழுவிய உருளைக்கிழங்கு போன்ற முகம்

 

எல்லாம் தொடங்கும் நகரத்திலிருந்து 

எல்லாம் முடிவடையும் நகரத்திற்கு வந்திருக்கிறேன்.

கழுவிய உருளைக்கிழங்கு போன்ற முகம் உடைய ஒருத்தி

அவள் எங்கு ஒளிந்திருக்கிறாள் என்று அவளே தேடும் இவ்வூரில் 

ஒரு நீர்க்குமிழியைப் பிடித்து 

கூடுதல் இதயமாகத் தைத்துக்கொண்டேன். 

எங்கிருந்து வந்திருக்கிறாய் என்ற வினாவிற்கு 

அட்ச தீர்க்க ரேகைகளில் பதிலளித்தவன் மேல் 

சற்றுமுன் இரக்கம் காட்டிவிட்டதால் 

அடுத்துவருபவர் மேல் காட்ட மீதி இரக்கம் இல்லை. 

கண்ணுக்குத் தெரியாத தெருக்களும் உள்ள இவ்வூரில் 

சுற்றி அலைவதற்கு ஏற்ற கால்கள் உள்ள அவளிடம் காட்ட

என்னிடம் இரக்கம் கொஞ்சமும் இல்லை.

துளைகள் உள்ள படகு 

தானே தண்ணீராய் நிரம்புவது போல 

நகரெங்கும் அவள் அழகே நிரம்பியது

பிறந்ததிலிருந்தே வியப்படைவதை நிறுத்தாத அவளிடம்

போதையிலிருப்பவன் வார்த்தையைத் தட்டுவதுபோல பேசினேன்

எளிய மிருகத்தை வெளியேற்றுவது போல 

முறைப்பையும் சினுங்கலையும் வெளியேற்றினாள்

எடையற்ற ஒரு முரண்பாடு மிக லேசாகத் தொடங்கியது

மலையைக் கவிழ்க்க முடியும் என்று அவள் சொன்னாலும் 

ஏற்றுக்கொள்வேன் இனி.

மலையின் குளிர்கால புல்லிடம் பேசுவது போல . 

காதைப் பற்றிய கவலையின்றி 

வாய்க்கு வசதியான சில சொற்களைப் பேசினாள்

செவ்வடிவம் அல்லாத காதிதத்தில் கடிதம் எழுதி 

மடிக்கத் தினறுவது போல யோசித்தாள்

சூரியன் செடிநேரத்தில் உச்சிக்கு வந்ததும் 

தன் நிழலைப் பார்த்து பரவசத்தோடு சிரித்தாள் 

அவள் அவளுக்கு கிடைத்து விட்டிருக்கக்கூடும்

எல்லாம் முடியும் நகரத்திலிருந்து 

எல்லாம் தொடங்கும் நகரத்திற்குத் திரும்புகிறேன்.

இனி எங்கு ஒளிந்திருக்கிறேன் என்று என்னையே தேடுவேன்.


 

About the author

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தவர். ‘வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி’ என்ற கவிதை தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்டவர். ‘சதுரமான மூக்கு’ மற்றும் துரிஞ்சி’ ஆகிய கவிதை நூல்களுக்கு தமிழின் முதல் அஃபோரிச கவிதை நூலான ‘தண்ணீரின் சிரிப்பு’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். எழுத்தெனப்படுவது எனும் இலக்கணம் சார்ந்த நூலையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறுவர் இலக்கியத்திலும் பங்களித்து வரும் இவர் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

செளமா இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது, தமிழ்நாடு கலை இலக்கிய மேடை விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். , சமீபத்தில் இவரின் “சதுரமான மூக்கு” சிறந்த கவிதைத் தொகுப்பு -2023க்கான படைப்பு இலக்கிய விருது பெற்றுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website