cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

மதுரா கவிதைகள்

மதுரா
Written by மதுரா

1.
நிசப்தம் போர்த்திய
நள்ளிரவொன்றில்
சலம்பும்
நினைவடுக்குகள்
நித்திரைக்குள்ளும்
நிச்சலனமாய்
இருக்க விடுவதில்லலை.
பொழுதெல்லாம்
ஆகாயம் முழுக்கத்
துடைத்துத் தன்
தீந்தைகளால் வரைந்த
வானத்தை
மெல்ல விசிறிவிடும்
பறவைகளேதுமில்லை
இக்கணம்.
கனிந்துதிரக்
காத்திருக்கும்
நட்சத்திரங்களின்
தடமொற்றி நகரும்
முகில்களுக்கிடையிலாவது
ஒளித்து வைத்திருக்கலாம்.
இடம் பெயர்ந்துவிட்ட
இதயத்தை
இப்போது எங்கே தேடிப் பிடிப்பது?

2.
எங்கோ சேகரித்த
சொற்களை
நினைவுகளுடன்
படரவிட்டு பின்னலாக்குகிறது
பாண்டி ஆட்டமென
கட்டத்தில்
அங்குமிங்குமாகத்
தவ்விக் குதிக்கிறது.
இழுத்துப் பிடித்து
இணைக்கப் பார்க்கிறேன்.
இன்னும் இன்னுமென
முடிவுறா வேட்கையொன்றின்
நீட்சியாய்…
இயல்பற்று அறுந்துபோகிறது.
இத்தனைக்கும் பிறகு
இனி நான் எதை எழுத?
குறைப் பிரசவக்
குவியல்களுக்கிடையில்
மெலிதாய்க் கேட்கிறது
லப்..டப்.

About the author

மதுரா

மதுரா

ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டதாரியுமான எழுத்தாளர் மதுரா என்கிற தேன்மொழி ராஜகோபால் மன்னார்குடியைச் சார்ந்தவர். கவிஞர், கதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கியத்தின் பல தளங்களிலும் இயங்கி வருபவர் ! நவீனத்துவக் கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதுவதில் திறன் வாய்ந்தவராகவும் உள்ளார். இவரின் “சொல் எனும் வெண் புறா” , “பெண் பறவைகளின் மரம்” உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
முகமது பாட்சா

அருமை

You cannot copy content of this Website