cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

அகராதி கவிதைகள்

அகராதி
Written by அகராதி

ளவேனில் பிறந்து இருக்கிறது.

மல்லிச்செடியின் மெளனமவிழத்

தொடங்கியுள்ள பொழுதிது.

நறுமணம் நிறைக்கிறது.

பாசாங்கற்ற நிர்வாணம்

வந்து போகிறது விழிமுன்..

 

மேகம் திரண்டு மழைக்குத் தயாராகி விட

மயில் அகவிக் கொண்டே

தோகையைப் பார்த்துக் கொள்கிறது.

ஈரமான நினைவுகள்

கண்திறந்த கனவின் காட்சிகளில்

அழகழகான

வண்ணங்களேறிக் கொள்கின்றன

 

காற்றசைவில் களிநடனம்

மண் தொட்டு விண்ணாட

வாய்த்திருக்கிறது அந்தகனுக்கு..

விழிப்பிடித்து

விரல்கள் பயணித்த

நிமிடங்கள்

நாணிக் கொள்கின்றன.

 

கலக்கவிருக்கும் மணித்தியாலங்கள்

சுகமிட்டபடி

நாழிகைக்கு ஒரு முறை

நறுமணம் எழுப்புகிறது

கைப்பிடித்த முதல் தீண்டல்

இமை கவிழ்த்த இதழ் ஒற்றல்

தடம் பதித்த மீறல்

தகவல் சொல்லும் கீறல்

 

திளைக்கும் நினைவிற்கு

மகரிகைக் கட்டும் பொழுதுகள்

தருணங்கள் தருவிக்கும்

நாள்காட்டியைத் தடவி

முத்திரை இடுகின்றன.

நீராடிய நிமிடத்தில்

நினைத்துக் கொண்ட முத்தங்கள்

காத்துக் கொண்டிருக்கின்றன.

நிகழவிருக்கிறதொரு

கோடை குடமுழுக்கு !


வாழ்வென்பது ஒன்றும்

அத்தனை எளிதில்லை தோழா!

அவளுடைய

மோதிர விரலின்

இரண்டாம் கோட்டின்

உட்புற விளிம்பில்

ஊசியெடுத்துக் குத்திய அளவில் இருக்கும்

சிறிய கரிய மச்சம் அறிவாயா..

அந்தக் கரம்

யாருடைய தோளையேனும் பிடிக்கையில்

நகர்ந்து விழுந்து விடுமோ

என்று பதைக்க வைக்கும் .

துடைத்தால் போய் விடும்

போலிருக்கும் அதற்கு

இத்தனை வசீகரம் கூடாது.

அவள் தன் வயிற்றின் மீது

கையை வைத்து

படுத்துக் கொள்கையில்

கொப்பூழ் இருப்பது

படபடப்பைத் தராமல் இருக்குமா..

குழிந்து இருக்கும் அதன் சுழிப்பிற்குள்

தவழ்ந்து இறங்கி விடுமோ?

சாத்தியக் கூறுகள்

அதிகம்போலவே தெரிகிறது.

ஒரு வசீகரம்

இன்னொரு வசீகரத்துடன்

இணைந்து கொள்ளுமென

பயந்து தளர்கிறது மனது.

கன்னத்திற்கு வேறு அடிக்கடி

கை போய்

தாங்கியாகச் செயல்படுகிறது

அதன் பளபளப்பில்

மயக்கம் வந்து பச்சக் என்று

அந்தப் பருவிற்கு பக்கத்தில்

அமர்ந்து கொண்டால் கூட பரவாயில்லை

நேற்று

புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கையில்

யாரோ வந்து விட

அப்புத்தகத்தினை நீண்ட நேரம்

தாங்கிக் கொண்டிருந்த

கையின் விரலில்தானே இருக்கிறது

புத்தகத்திற்குள் உலா வரும் ராணி

பகட்டும் படாடோபமுமான ஆள்.

இத்தனை நேரமாகச் சுமந்து

பிடித்து வைத்துக் கொண்டிருந்தால்

அவள் பறித்து

ஒட்டிக் கொண்டுவிடும்

சாத்தியக்கூறுகளும் இருக்கிறதே..

நட்புகளின் தோள் பிடிக்கையில்,

கரம் கோர்க்கையில்

அவர்களின் தோளும் கரமும்

விருப்புடன் வழித்தெடுத்துக் கொண்டால்

என்ன செய்வது??

ஓ கடவுளே!

இப்படிப் பயந்து பயந்து

பதட்டம் விளையுமிந்த

வாழ்வென்பது ஒன்றும்

அத்தனை எளிதில்லை தோழா…


வளைப் பார்ப்பதும்

தங்களுக்குள் கிசுகிசுப்பதுமாக இருந்த

சிறிய பட்டாம்பூச்சிக் கூட்டத்தைக் கண்டு

சிநேகச் சிரிப்பொன்றை நீட்டுகிறாள்

 

நீ கேள், நீ கேளென

கிசுகிசுத்தக் கூட்டம்

அருகே நெருங்குகிறது

ஒரு பட்டாம்பூச்சி சிறகசைத்து

நெருங்கி

நீங்கள். .. ?  என்க,

மென் நகையுடன் ஆம்.

நீங்கள் என் மகனது

வகுப்புத் தோழர்களா என்கிறாள்

ஆமாம் இசைக்கிறது கூட்டம்

 

ஒரு குரல் மட்டும் கொஞ்சலாக

‘எனக்கு மட்டும் பிறந்த நாளுக்கு

அவன் இனிப்பே தரல’ என்கிறது

அதற்கென்ன நான் தருகிறேன்

தன் தோள் பையில்

வண்ணக் காகிதங்களால்

சுற்றப்பட்ட

விதவிதமான இனிப்புகளை

அள்ளிக் கொடுக்கிறாள்.

 

சேர்ந்தார் போல் இசைக்கிறது

அத்தனைப் பட்டாம்பூச்சிகளும்

‘ம்ஹூம் அவன்தான் தர வேண்டும்’

சற்று நேரத்தில் வந்து விடுவான்

வாங்கிக் கொள்ளுங்கள் என

சாலையை நோக்குகிறாள்.

 

ஏய் வரான்டி, வந்துட்டான்டிகளுக்கிடையே

இரு சக்கர வாகனத்தில் வந்து

பட்டாம்பூச்சி கூட்டத்தைக் காணாதது போல்

திசைமாற்றியப்

பார்வையை ஓடவிட்டு

நிறுத்துகிறான் வாகனத்தை

 

அவளிடம் ‘ஓட்டு’

என பின் அமர்கிறான்

பிறந்த நாள் கொண்டாடும் மகன்

வாகனத்தை ஓட்ட

தயார் செய்து கொண்டே

திரும்பாமல்  கேட்கிறாள்

அவர்கள் உன்னைத்தான் கேட்டார்கள்

இனிப்பு தரவில்லையாயினும்

ஒரு சிரிப்பு தந்து விட்டு வரக்கூடாதா..

மறுப்போடும் தயக்கத்தோடும்

வருகிறது

மீசை முளையாத ஆணிடமிருந்து

‘ம்ம்ம்… ‘

 

திரும்பி கை அசைத்திருப்பானோ ,

சிரித்திருப்பானோ,

பட்டாம்பூச்சிகளிடையே ரீங்காரம்!

மெளனப் புன்னகையுடன்

வண்டி நகர

சாலை கிடார் ஆகியது..

 


அகராதி

About the author

அகராதி

அகராதி

திருச்சியை சார்ந்தவர். இவரின் இயற்பெயர் கவிதா. தமிழிலக்கிய பட்டதாரியான இவர் ”அகராதி” எனும் புனைபெயரில் படைப்புகளை எழுதி வருகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு வெட்கச் சலனம் எனும் பெயரில் வெளியாகி உள்ளது. பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் கதை, கவிதைப் படைப்புகள் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website