கனவில் வாழ்வது.
அதிகாலை வீசிய பனி
நடுவெயில் நேரத்தில்
ஒரு கனவு போல இருந்தது
சாயுங்காலம் பிடித்துக்கொண்ட மழையில்
வியர்வை வழிந்த வெயில்
ஒரு கனவு போல இருந்தது
சற்றுமுன் என் பிழையை
முதலாளி சுட்டியது
ஒரு கனவு போல இருந்தது
நேற்று அம்மாவிடம் பேசியது
இன்று ஒரு கனவு போல
இருந்தது
எப்பொழுதோ நட்பிலிருந்து
விழுந்துவிட்ட நண்பனின் ஊரை
இப்பொழுது கடப்பதும்
ஒரு கனவு போல இருக்கிறது
இவ்வெல்லா தருணங்களிலும்
உன் நினைவென்பது மட்டும்
அக்கனவில்
வாழ்வது போலவே இருக்கிறது.
கூடூர் பிரிவு.
இருசக்கர வாகனத்தில் வந்தவனொருவன்
மரணக் கவுல் வீச
மூளைச் சிறதிக்கிடக்கிறான்
கூடூர் பிரிவில்.
நாற்பதை எட்டாத தேகமுள்ளவனுக்கு
எட்டு வயதிலொரு மகளிருக்கலாம்
மகளுக்காக எதையாவது வாங்க
இச் சாலை சந்திப்புக்கு வந்திருக்கலாம்.
சமவயதில் இரு காவலர்கள் விளக்கடித்தபடி
வாகனங்களை ஒதுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கும் அங்ஙனமேயொரு
மகளிருந்தால், அவள்
என் தந்தையொரு காவலதிகாரியென
பெருமையோடிருந்தால்
பலநூறு வாகனங்களின்
ஒளியிலும், ஒலியிலும் உடலறுபட
இருளைபொழிந்து கொண்டு
மௌனமாக நிற்கும் வானமே சாட்சி.
சாயல்.
வதங்கிச் சுருங்கிய
பாசாங்கலர் சேலை
அள்ளி முடிந்த
பாதி நரைத்த கொண்டை
வேலைக் களைப்பில்
கருத்து மெலிந்த தேகம்.
அந்தி விழுந்ததும்
தொடங்கிவிட்ட உணவுக்கடையில்
முதல் ஆளாக
இரண்டு இட்லி,காரச்சட்னியை
தய்யிலையில் வாங்கி
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே
விழுங்கிவிட்டு குச்சி கையால்
தண்ணீர் ஜக்கைத்தூக்கி
கழுவிக்கொண்டு
முந்தி முடிப்பிலிருந்த
இரண்டு மாத்திரைகளை விழுங்கியபின்
பத்து ரூபாயை
கல்லாபெட்டி மேசையில் வைத்தபடி
விருட்டென மறைந்துபோன
அம்மாவை எழுத நினைத்து
என் அம்மாவை எழுதி விட்டேன்
இந்தக் கவிதையில்.