cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 12 கவிதைகள்

ரத்னா வெங்கட் கவிதைகள்


1

தாபங்களின் இழை கோர்த்து
நெய்த பந்தம்
ஊடுபாவில் தகதகக்கும்
வெள்ளிச் சரிகையாய்
பகடற்ற காத்திரமான அன்பு

விரல்களில் சிக்காது
நழுவுகின்ற வழவழப்பாய்
சலசலத்து வழிகின்ற
மென்மையாய் விரகம்
கன்னம் தொட்டு இழைக்கையில்
வெதுவெதுக்கும் குளுமை

சேர்த்தணைத்து உடல் தழுவ
பிரபஞ்ச அழகையெல்லாம்
நீவி கொசுவி
இடையில் செருகி
உடுத்தும் கம்பீர கர்வம்

காலம் காலமாய்
காத்திருக்க வைத்த நேசம்
மேலாடையாகையில்
நெகிழ்ந்து விம்மும் நெஞ்சம்

‘என் பட்டுடா நீ’
என்கையிலெல்லாம்
எனக்கும் உனக்குமான
இவ்வுறவின்
தொடு உணர்தலைத்
தொலைவுகள் தாண்டி
மொழி வழி கடத்துவதாய்
நிலை மாற்றம் என்னில்
பேதலிப்பில் இதம் கண்ட
பெருமிதம் உன்னில்
பாரம்பரியம் மாற்றி
வடிவமைத்ததாய்
விற்பனை உத்தி காட்டும்
புத்திப் பிறழ்வின்
பரவசம் நம்மில்


2

அடர் மஞ்சள் நிறத்தில்
பசும்பொன்னிங்கே
பரவி உருகி
புறம் படர்ந்து
உனது நீலத்தை யாசித்து
பேரன்பினில் மருகி
பித்தாய் தன்னை ஒப்புவிக்க

மருட்சி துளியுமில்லை
மயக்கத்தின் சாயலில்லை
உனைத் தேடிச் சரணடைந்த
மோனத்தில்
சுடரும் விழிகளுக்குள்

நெகிழ்ந்த துகிலுக்குள்
நேசத்தின் சரிகைகள்
ஊடுபாவிக் கிடந்தாலும்
பின்னிய கரங்களுக்குள்
சிறைப்பட்டது காற்றென
உணர்ந்த விடுபட்ட நோக்கில்
பின்னப்பட்ட மெல்லிதயமென்னவோ
அதி தீவிரமாய் துடிக்க

குறுக்கு நெடுக்காய்
புள்ளியிட்டு
சிக்கல் கோலம்
வரைவதில் கெட்டிக்காரிதான்
முடிக்கத் தெரியாது
தெருவெங்கும் தொடர்ந்து
தனித்த வனத்தில்
காலூன்றித் திரும்பிடப் புரிகிறது
திசை தொலைத்தவளென்று

காலம் உனதடியில்
நாவருடிக் கிடக்க
திரும்பாத முதுகின் நிமிர்வில்
மென்ற அவலின் தயையில்
ஒரு கைப்பிடியளவு கூட
எனதில்லையென்பதை
ஆறில் முரணாய் இரண்டு
பாலையின்
பகலும் இரவுமென
கானல் நீர் துரத்தும்
கனவின் சாயலில் முற்றிட
கண் சிமிட்டினால் மறைவாயோ ?

மொட்டுக்கள் நீரில் கிடந்திருந்தால்
மலர்ந்து
நீட்டத்தில் உயர்ந்து
அலர்ந்திருக்கலாம்
கொய்து சூடாது
நகர்வாயெனில்
முற்பிறவியின் பலனென
முடங்கிப் போவதுதான் கதியா?

கேள்வியின் த்வனி
நிரவலின் அழகிய
ஸ்வர பேதமா?
இயலாமையின் அபஸ்வரமா?
பதில் உன்னிடமா?
மீட்சியில்
உடையாது நிற்கப் பிரயத்தனிக்கும்
என்னிடமா?

சொல்…


3

சொற்களுக்குள் ஒளிந்து
கண்ணாமூச்சி ஆடுகிறது இசை இணையா இமைகள்
சுருதி சேர்க்க
லயத்தினை மறந்து
தடக் தடக் அடக்கென மௌனத்தை
எதிரொலிக்கிறது இதயம்
ஒற்றை நரம்பின் மீட்டலில்
அசைகிற காற்று
தேடித் துளைக்க
உள் வாங்கி நெகிழ்கிறது குழல்
திசை வரையறுக்காது பரவி
கிறங்கலில் கிடத்துகிறது ராகம்
கட்டுப்படவும்
கட்டுப்படுத்தவும் மனமற்ற
ஆலாபனையின் நீட்சியாய்
இவ்விரவைக் கடந்தோ
கடத்தியோ விடுவாயெனில்
நீ கலைஞன்தான்…


4

நேற்றில்லாத
நாளையும் அறியாத
நிகழ் கணத்து நினைவே

முளைத்துக் கிளைத்த
முன்னறியாப் பிரியத்தின்
இலை மறைப் பூவே

நிலவில் முகம் தேடி
புலம் பெயரும் வேகத்தில்
சிறகடிக்கும் சலனமே

பிரித்துப் பொருள் தேடா
இலக்கணமெதிலும் சேரா
கவியுரைத்த பொய்யே

காணும் இடமெங்கும்
காட்சிப் பிழையாகி
கருத்தழிக்கும் கனவே

உள்ளே புகுந்தென்னை
உலரா மண்ணாக்கி
உருக்கொள்ளும் கலையே

இங்குமங்கும் அலைபாய
எதுவுமற்றதாக்கி
நடுச் சொர்க்கம் தந்த வரமே

நாமில்லை நானுமில்லை
நீயுமிங்கே உண்மையில்லை
ஆனாலும் உயிர்த்திருப்பாயே..


குரல் : சிவநித்யஸ்ரீ

இந்தக் கவிதைகள் Spotify App -இல் உள்ள  Nutpam- Podcast –லும் ஒலிபரப்பாகிறது.

About the author

ரத்னா வெங்கட்

ரத்னா வெங்கட்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website