cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 12 கவிதைகள்

செல்வசங்கரன் கவிதைகள்


சோக க்ரீச்

 

இரண்டு சக்கர வாகனத்தை கடக்க முயல்கிறது ஒரு அணில்

அந்த அணிலைத் தான் 

இன்னொரு வாகனத்தில் கடந்து போகிற கவிஞன் இப்பொழுது

கொல்லப் போகிறான்

அணில் துல்லியமாக சாலையைக் கடந்து புதருக்குள் 

புகுந்து மறைந்துவிட்டது

பாவம் சக்கரத்திற்கு கீழே நசுங்கி செத்துக் கிடந்தது அந்த அணில்

அப்படித் தான் அந்தக் கவிஞன் சொன்னான்

அவன் சொன்னதையே மற்ற எல்லா அணில்களும் சொல்லின

அவனோடு சேர்ந்து கொண்டு எல்லாரும் சோக கீதம் பாடினர்

அணில் அந்த புதருக்குள் தப்பித்து மறைந்ததும் க்ரீச் க்ரீச்சென 

ஒரே அணில்களின் சத்தம்

எல்லாம் சோகமயமாக இருக்கட்டுமென தப்பித்த அணில் சொன்னதும்

புதருக்குள்ளிருந்து வந்தது எல்லாம் ஒரே சோக க்ரீச்கள்.

 


தரைமட்டமான கட்டிடம்

 

படுக்கையிலிருந்து எழுந்தவள்

என்னுடைய கையிலிருந்து அவளுடைய கையை விடுவித்தாள்

அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்வு 

அங்கு ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது

அக்கட்டிடம் பார்க்க எங்களது புதிய வீடு போலவேயிருந்தது

பயமாக இருந்தது

இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை இருவருமாகச் சேர்ந்து

காப்பாற்றிக் கொண்டிருந்தோம்

இது நாங்கள் சந்தித்திராத புதிய பிரச்சினை

அந்த இடிபாடுகளுக்கிடையேயிருந்து 

இப்பொழுது என்னை அவள் தூக்கிக் கொண்டிருந்தாள்

இனி உன்னுடைய முறையென அவளிடம் கூறி

இடிபாடுகளுக்கிடையே போய் நான் படுத்துக் கொண்டேன்.

 


பேச்சு உடல்

 

பேசிக் கொண்டே நடந்தார்கள்

பேச்சு சுவாரசியத்தில் இடையில் இருந்த கடலைக்கூட

கவனிக்கவில்லை

அவர்களுக்கு முன்னாலிருந்த கடல் இப்பொழுது பின்னாலிருந்தது

அவர்களுக்கு முன்னாலிருந்த மலை இப்பொழுது பின்னாலிருந்தது

அப்படித்தான் நடக்குமென ஒருவரையொருவர் பார்த்து 

சொல்லிக்கொண்டனர்

நல்ல நண்பர்களான நாம் இப்பொழுது எடுத்திருப்பது பேச்சு உடல்

கடல் மலை நமக்கென்ன வியத்தற்குரிய ஒரு பொருளா

வா கடந்து செல்வோமென

சந்தித்தே வெகு காலமான பழைய நண்பர்கள் 

தங்களது பேச்சு உடலை எதிர்காலத்தில் கொண்டு வந்து இருத்தினர்

இவர்களெல்லாம் நமக்கு ஒத்துவரமாட்டார்கள்

கடந்து செல்லுங்களென எதிர்காலம் தன்னை ஒரு சாய்த்துக் கொண்டு

அவர்களுக்கு வழியைவிட்டது.


 

About the author

செல்வ சங்கரன்

செல்வ சங்கரன்

செல்வசங்கரன் ( பி. 1981 ). விருதுநகரில் வசித்து வருகிறார். கல்லூரியொன்றில் தமிழ்ப் பேராசிரியர் பணி. 2009 லிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவருகிறார். ஆதவன் ( கே.எஸ்.சுந்தரம் ) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். அறியப்படாத மலர் ( 2013 ), பறவை பார்த்தல் ( 2017 ), கனிவின் சைஸ் ( 2018 ), சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி ( 2020 ), கண்ணாடி சத்தம் ( 2022), மத்தியான நதி ( 2022) ஆகிய ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சௌமா இலக்கிய விருது பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website