cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 12 கவிதைகள்

அன்றிலன் கவிதைகள்

அகமலர் பூக்கும் காடு

தொலைத்துவிட்ட
மகிழ்வை மறந்து
ஒரு பெரும் தருணத்தின்
வாயிற்கதவுகளைத் திறக்கும்
விந்தையைக் கற்கக்
காத்திருக்கின்றன ஆயிரம் கரங்கள்.

அகடுகளென விழும்
இரவுகளின் இருண்மையில்
ஊறிக்கிடக்கிறது
மகிழ்வின் அச்சு.

எப்படியும் பொய்களைத் திரட்டி
ஒரு கதையின் மீது அமர்த்தி
நடைபழக்கப் பார்க்கின்றன
மானிட நாவுகள்.

ஒரு சுவையுள்ள வாழ்வை
மதில்மேல் அமர்ந்து
கொறித்தபடியிருக்கிறது
அணிலொன்று.

உள்ளொளியில் பூக்கும்
அகமலர்தான்
யாவற்றின்மீதும்
மணம் பரப்பி
ஒரு மெளனக் காட்டை
சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறது.

தலையெழுத்தை அறிதல்

வலி நதியைக் கடக்கையில்
யார் தலையில் என்ன எழுதியிருக்கு
என்னும் புலம்பல்
எங்காவது எதிரொலித்தபடியிருக்கிறது.
அம்மொழியின் சாயல்
எதுவென இன்றுவரை கண்டடைந்ததில்லை
தவ்வியோடும் கூட்டல் பெருக்கலில்.

ஓர் ஆய்வகத்தில்
ஆராய்ச்சியைப் பார்ப்பவன்
கண்ணாடிப் பேழைக்குள்
தனித்து நிற்கிறான்
எண்ணூறு ஆண்டுகளாய்.
மண்டை ஓட்டில் தெரியும் கோடுகளைப்
பார்த்து தலையெழுத்தென்று
கொள்ள முடிந்தது
சுடுகாட்டில் ஒரு மண்டையோட்டினை
எட்டி உதைத்த அறியா பருவத்தில்.

அரிதாரத்தைத் தாங்கும்  நிழல்கள்

ஒரு மேடை வெறும்
கட்டடமாகத்தான்
பெரும்பாலும் காத்துக்கிடக்கிறது
ஒரு திருவிழா காலம்
தன்னை நோக்கி வரும்வரை.

ஒரு தேர்ந்த கலைஞனைப்போல்
அது தன்னைத் தானே
ஒத்திகை பார்த்துக்கொள்கிறது
தன்மீது விழும்
பழுத்த இலைகளின் மெல்லிசையில்.

விழா நாளில்
கைதட்டல் ஒலி எழுகையில்
கூத்து கட்டுபவனையும்
பார்வையாளனையும்
ஒரு புள்ளியில் இணைத்த மகிழ்வில் வரும்
தன் கண்ணீரை
அம்மேடையோ மறைத்திருக்கக்கூடும்.

அந்த மேடைக்கும்
கூத்து கட்டுபவனைப்போல்
எப்போதாவதுதான்
வாய்க்கிறது
தான் அலங்கரிக்கப்படுவதும்
கவனிக்கப்படுவதும்.


 

About the author

அன்றிலன்

அன்றிலன்

அன்றிலன் எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதும் இவரின் இயற்பெயர் இரா.சிவக்குமார். இவரது கவிதைப் படைப்புகள், ஆனந்த விகடன், கணையாழி, குமுதம்- தீராநதி; பேசும் புதிய சக்தி, காமதேனு ; இனிய உதயம், கனவு போன்ற இதழ்களிலும், கோடுகள், வாசகசாலை, தமிழ்நெஞ்சம் படைப்பு- கல்வெட்டு, தகவு, கொலுசு, முதலான மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

இவருடைய முதல் கவிதை தொகுப்பு "மாயநதியின் கால்தடம்".

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website