cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 12 கவிதைகள்

யாழினி கவிதைகள்

யாழினி
Written by யாழினி

எல்லைகள்
எனக்கான எல்லைகளை
நீ வகுத்து
பாதை சமைக்கிறாய்
அச்சாலை செல்லவேண்டிய
தூரத்திற்கு என்னை இட்டுச்செல்லவில்லை
பாதுகாப்பென ஊர் எல்லையோடு முடிவுருகிறது
நிலமெங்கும் மதில் உயர்த்தி
மூன்று வேளை உணவை பரிசளிக்கிறாய்
தேவை அறியாது
சோற்றுப்பருக்கைகளோடு
தீர்ந்துவிடுவதில்லை என்வாழ்வு
அவ்வப்போது தாழ்நீக்கி
புத்தாடை ஆபரணங்களோடு
வீதியுலா வரப்பணிக்கிறாய்
அவலட்சணத்தில் சுருங்கிப்போகும்
என்மனதை காண
அவகாசமிருக்காது உனக்கு
விதிகளில் புதைந்து கொள்ளும்
முகமல்ல என்னுடையது
எத்தனை வலிமைக்கொண்டும்
வானத்தை உன்னால் மூடிவிட முடியாது.

நகரும் காலம்
நொடிகளால் நிரம்பும் பொழுதென
அறிவாய் நீ
தீர்ந்துபோகும் முன்
இந்த அணைப்பைத் துளியும் தளர்த்திவிடாதே
நீ இல்லாத பொழுதில்
கர்வம் மிக வேகமாய் அதன் உச்சம் தொடுகிறது
உன் விழியால் அதையும் நலம்கேள்
அணைத்துக்கொண்டே
உச்சி மோதும் என் மூச்சுக்காற்றுக்கு
ஆயுள் நீளும் அதிசயத்தை
நீ நீங்கியபின் சொல்லில் சிறைபிடிக்க முடியாத வறுமை கண்டு புன்னகைப்பாய்
விரல்களை விரல்களோடு சேரவிடு
நகரும் காலத்தை முடிந்த மட்டும் உறைய வைப்போம்
விடைபெறும் முன் திரும்பி பார்த்துவிடாதே
திசைகள் சூன்யமாவதை என்னால் ஜீரணிக்க முடியாது.

வலி
நான் கோராத பொழுதில்
எதன்பொருட்டும் தீர்ந்துவிடாத
ஒன்றைத்தான்
நேசமென அள்ளி தந்தாய்
கைகள் வழிய வழிய
எதிர்பாராத நொடியில்
பிடிங்கிக்கொள்கிறாய்
உன்னுடையதென
குறைப்பிரசவத்தில்
இறந்து பிறந்த
சிசுவைக்கழுவி முடித்து
கருவுற்ற வயிற்றை
தடவிப்பார்க்கும் தீரா வலி
அகமும் புறமும் ஒரு சேர
யாழினி

About the author

யாழினி

யாழினி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website