நிறங்களின் மணத்தை நுகர்ந்தபடி
காற்றில் மிதந்த கனவின் ஊஞ்சலை
அறுத்து எறிதல் கடினமாய் இருக்கிறது.
நுகர்கிற நொடிதோறும்
மெருகேறி மிளிரச்
செய்த கனங்கள் அவை.
கடக்கிறவர்கள் சிலர்
ஊஞ்சலை ஆட்டி
ஒப்புதல் தந்ததும் உண்டு.
அந்த கண்ணாடிப் பாலத்தையும்
உடைத்த முயற்சியில்
சிதறிய சில்லுகள்
ஏதும் கிழிக்காமலே
துளிர்த்துக் கிளம்புகிறது குருதி.
கட்டுடைத்தலின்
இடிபாடுகளுக்கு இடையே
நரைக்கத் தொடங்கிய தலையோடு
புன்னகையைக் கூட அலங்காரம்
என மறுத்து
இறுக்கமாய் இருக்கும்
இந்த எதார்த்தத்தைக்
கொஞ்சமும் பிடிக்கவில்லை எனக்கு.
குரல் : சாய் வைஷ்ணவி
கவிதையின் ஒலிவடிவத்தை Spotify செயலி மூலமாக கேட்க :
கவிஞர்களுக்கு எப்படிக் கட்டுடைத்தலைப் பிடிக்கும்? படைப்பாக்கம் என்பதே கனவூக்கம்தானே? உண்மையை அறிதல் என்பதுதான் முன்னேற்றத்தின் வழி. ஆனால் உண்மையை வெளிப்படுத்துவதற்கான கட்டுடைத்தல் என்பது சமயங்களில் வாழ்வின் அழகியல்களையும் தகர்த்துச் சென்று விடுகிறது என்பதை மிக நுட்பமான சொற்களில் பதிவு செய்திருக்கும் கவிஞருக்கு நனி நன்றி! இது உலகத்தரக் கவிதை!
வணக்கம் 🙏 நல்லதொரு கவிதை வழியாக நல்லதொரு கவிதை மின்னிதழை அறிமுகம் செய்த மைதிலிக்கு நன்றி. உங்கள் இணையத் தமிழ் வளர வாழ்த்துகள் 👍
நன்றி !