மண்ணைத்
தனித்தனி உதடுகளாக
முத்தமிட்டுச் செல்லும்
பாதங்களைப் புதைத்தபின்
பரவிய வெறுமையின்
தனிமைக்குள்
பால்யத்தில்
கொஞ்சிய ஞாபகங்களின்
கருத்தடை மாத்திரைகளைத்
தேடும் வாழ்க்கையின்
நிழற்குடை நீ.
கழுவப்பட்ட நீரில்
கைவிடப்பட்ட பருக்கை
சொரண்டிய செதிலாய்
நீந்துவதற்கும்;
தலையசைத்த மரம்
உதறிவிடும் பழுத்த இலை
அதைக்
கைநீட்டி எடுக்க முயலும் தருணத்தில்;
யாரோ ஒருத்தரின்
உள்ளங்காலும் உச்சந்தலையும்
ஒன்றை மிதித்தும் ஒன்றைத்
தாங்கியும் நிற்கிறது.
நாளைய நம் இல்லத்தின்
கேட் வழியெங்கும்
திறந்து கிடக்கும்
நம்பிக்கை வாயிலில்
எந்தப் பருக்கைக்கான
எத்தனையாவது இலை நாம்.
நினைவின் அலகு
கனம் கூடும் பொருட்டு
சற்றுநேரம்
காலால் மெட்டி வைக்கப்படும்
இப்பிரிவு.
பொடனியில் கொத்தி
முடிந்தமட்டும் குதறி
தயக்கம் உப்பும்
சொந்தக் காகங்கள்.
பால்யம் அப்பிய
நுங்கு வண்டியேறும்
புதைமேட்டில் காசரளி
உனைப்போல்
கூப்பிட்டுப் பார்க்கும்.
மண் தள்ளியபின் நீளும்
துக்க விரல்களில்
உள்ளங்கையாகிறாய்
தலையெழுத்து உதிரும்
மண்டையோட்டில்
என்பெயர் நசுக்கிய கோவத்தலை.
சொற்கள் ஊறிக் கிடக்கும்
இக்குடிநீரில் நிரம்பியெழும்
உப்பீனி வாசம் சூடிய
நம் சந்திப்பின்
முதல் மிடறிலிருந்து
முற்றும் மிடறுவரை
கவனம் கொள்ளும்
ஹேர்பின் உதடுகள்.
‘நீ’
இரண்டு மாத்திரை
கவிதைக்கு முன்/பின்
எப்போது எடுக்க வேண்டும்.
இந்தக் கவிதைகளை வாசித்த குரல் : சிவநித்யஸ்ரீ
இந்தக் கவிதைகளை Spotify செயலி மூலமாகவும் கேட்கலாம்.