யானையைப் போலிருக்கும் அன்பு
தெருவைப் பார்த்தபடியே
படுத்திருக்கும் நாயைப்போல
ஊரையே பார்த்தபடி
நெடும்மலையொன்று
நீண்டு படுத்திருக்கிறது
அசப்பில் யானையைப்
போலிருக்கும் அதன் வயிற்றில்
காலத்தின் மூப்பு படிந்த
பெண்னொருத்தி
கற்சிலையாகி காத்திருக்கிறாள்
தனித்திருக்கும் அவளின் பொழுதுகள்
வெப்பமாய் தகித்திருக்கிறது
அம்மலையெங்கும்
யாருமே வராத
அம்மலையின் பாதையில்
முட்கள் பூத்திருக்கின்றன
ஒரு மழைநாளின் குளிரிரவில்
நினைவுகள் நெட்டித் தள்ள
கடைசியிலும் கடைசியாய்
வந்து சேர்ந்தோம்
சுருக்கம் கூடிய
மூதாட்டியின் மார்புச் சூட்டோடு
வாரி அனைத்துக் கொண்டது
அம்மலை தெய்வம்.
தெருவாசிகள்
நீண்டு விரியும் புறவழிச்சாலையில்
உருண்டோடிய பந்தென
கிழக்கில் தெரிகிறது
சிவந்து உதிக்கும் சூரியன்
சற்றைக்குமுன் நிகழ்ந்த
விபத்தொன்றில் இழந்துவிட்ட
தம் உறவொன்றைக் குறித்து
கவலையுற்று நின்றிருக்கின்றன
இன்னும் நெரிசல் கூடாத சாலையோரத்தில் சில நாய்கள்
இருள் பழுத்து உதிரா அப்பொழுதில்
சத்தமின்றி நிற்கும்
நேஷனல் பர்மிட் வாகனமொன்று
படுதா விலகாத நேநீரகத்தின் வாசலில்
இறக்கிவிட்டுச் செல்கிறது
தன் பொதிமூட்டையில்
நினைவுகளை
இறுகப் பற்றியிருக்கும் மூதாட்டியை
வாகனம் கக்கிய புகையின்
நெடி தாங்காது
விலகி
நடக்கத் தொடங்கின நாய்கள்.
இடையில் ஒரு நாடகம்…
குளிர்காலத்தின் இளம்வெயிலில்
வெதுவெதுப்பாய் இருக்கும்
பள்ளி மைதானத்தில்
விளிம்பு கட்டி நிற்கும் மரங்கள்
நிழல்களைக் காயப்போட்டிருக்கின்றன
பாடவேளை தொடங்கியதும்
வகுப்பறை வாசலருகே
குழந்தைகள் கழட்டி வைத்த
குறும்புத்தனங்கள்
சரசரவென மரத்திலேறி
மஞ்சள் பூத்த இலைகளென
போலி செய்கிறது
உற்று கவனிப்பது போல
பாவனையாகத் தலையாட்டும்
கிளையிலிருந்து அவ்விலைகள்
யாரும் காணாதபோது
தனித்த நடனத்தின் அசைவோடு
தரையிறங்குகின்றன
நிறமிழந்த புகைப்படமாய்
பாடங்கள் சலித்தபோது
ஜன்னலில் மேயும்
சிறார்களின் மீச்சிறு பொழுதை
காற்றில் ஏந்தி
மைதானத்தில் அலைகழித்து
யாருக்கும் கேட்டிடாத சிற்றொலியோடு
வெளியேறுகிறது
கால் முளைத்த அவ்விலைகள்.
இந்தக் கவிதைகள் Spotify App -இல் உள்ள Nutpam- Podcast –லும் ஒலிபரப்பாகிறது.