cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

விஜி பழனிச்சாமி கவிதைகள்


ரிசையில் நின்றுகொண்டு இருக்கின்றனவா எறும்புகள்…?
இல்லை நகர்ந்துகொண்டு இருக்கிறது.

இப்போது அதைக் கடந்து செல்லவா?
இல்லை அதன் பின்னால் வரிசையில் செல்லவா?
என்று ஒரு சிந்தனை தோன்றி மறைந்தது.

எல்லா காலங்களிலும் ஏதோ ஒன்று
இப்படி யோசிக்கவைத்துக்கொண்டு இருக்கிறது.

தோழி பூப்பெய்த நாளொன்றில்,
இன்னொருவளுக்கு காதல் வந்த பொழுதொன்றில்,
அவளே குழந்தை பெற்று
மருத்துவமனையில் இருக்கும் தருணமொன்றில்…

பதின்மத்தில் சித்தி தற்கொலை செய்த நாளொன்றில்
அவள் தொங்கிய கயிற்றையே
நெடுநேரம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன்.
அம்மா அதட்டி மிரட்டிப் பாய் ஒருவரிடம்
மந்திரித்துக் கட்டிய கயிறு
இன்னும் என்கையில் இருந்துகொண்டு இருக்கிறது.

பூச்சூடும் பெண்களைச்
சாந்துப் பொட்டு சூடிவரும் மேலாளர்
கொலுசு அணிந்து விளையாடும் பக்கத்துவீட்டுச் சிறுமி
என்று யாரோ ஒருவளை போல
நான் ஆகிவிட நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

பின் அறிந்தேன்
நான் நானாகவே இல்லை
பின் எப்படி வேறொருவராக.

இரவில் ஒளிர்ந்து மறையும் மின்மினிப் பூச்சிகளை
ஓர் சுடர்விட்டு எரிந்து அணையும் சுகவாழ்வு போல…


சந்தத்தை வளர்க்கும் சிறுமிக்கு எந்த பாடலும் புரிவதில்லை.

அவள் குழலில் கசியும் கார்மேக காற்றில்
பனித்துளிகள் சிறகடித்து பறந்துகொண்டு இருக்கிறது.

அவள் பாவாடையில் நெய்யப்பட்டிருக்கும்
பூ சித்திரங்கள் எல்லாம் மலர்ந்து
வாசனையை வீசியபடி காற்றில் கரைகிறது.

வாசனையை முகர்ந்து முகர்ந்து
அவளைத் தேடிவரும் நாடோடி
அவளிடம் வசந்தத்தை வாங்கி
அவளுக்கு ஒரு பாடலை பரிசளிக்கிறான்..

அவள் குரலெடுத்துப் பாடத் தொடங்க
இலையுதிர்காலம் மறைந்து மீண்டும்
ஒரு வசந்த காலம் தொடங்கியது.

அவள் அணிந்திருக்கும் சட்டையில்
இப்போது நட்சத்திரங்கள் பூக்கத்தொடங்கின..

நட்சத்திர காட்டில்
கண்கள் கூசி நாடோடி பூக்களைப் பதியவைக்கிறான்.

அங்கே பனிக்காடு முளைக்கத்தொடங்கியது.

பனி சிறுமியைச் சூழ…
வெள்ளை நிறத்தில் அவள் தேகம் மிளிர..
அவள் கைகளில் சிறகுகள் எழு..

மேலெழும்
பூக்களும்
பனிகளும்
நட்சத்திரங்களும்
அவளுடன் சிறகு எழுந்தன.

நாடோடியும்..

புது பிரபஞ்சம் பூக்கத்தொடங்கியது.


 

றவைகளுக்குக் கூண்டு சிறையல்ல..

 

சிறை,
பறவைகளுக்கு ஒரு பொருட்டே அல்ல.

எனினும்,
நியாயங்கள்
தத்துவங்கள்
கடவுள்கள்
கருணைகள்
லட்சியவாதங்கள்
எல்லாம் உங்கள் பொருட்டு
அமைக்கப்பட்ட நிலத்தில்
எங்கள் மொழியை
எங்கள் குரலை மறுதலிக்க முடியாத
துர்ப்பாக்கிய திரிபு சிக்கலில் நீங்கள் இருக்கிறீர்கள்.

எனினும்,
எங்கள் நிலத்தில்
எங்கள் மொழியை
எங்கள் குரலை
எங்கள் ஆட்சி கொண்டே அமைப்போம்.

அங்குப் பறவைகளின் குரலில்
ஒரு விடியலின் அசைவில்
ஓர் உதயத்தில்
எங்கள் விடுதலை பிறக்கும்.

எங்கள் தலைமுறை காக்கும் நிலத்தில்
கருப்பு
சுடர் விட்டு எரியும்
முக்கோண வடிவில்
ஓர் சூரியமுனை…


லை உச்சியில் ஓரு தெய்வச் சிலை
அதன் அருகே சிலைப்போல ஒருவள்…

படையல் யாருக்கு படைத்ததென்று
புரியாதொரு குழப்பத்தில்
பக்தன் தடுமாறி தடுமாறி வணங்குகிறான்.

பெண்ணும் தெய்வமும் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த மலை மீது வெளீர் வானத்தில்
சில குருதி திட்டுகள்..
அதை கிழித்துக்கொண்டு
ராக்கெட் ஒன்று மேகத்துக்குள் மறைகிறது..
மீண்டும் வானம் வெளீர் நிறத்திற்கு மாறுகிறது.

பெண்ணும் தெய்வமும் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

கோவிலின் கீழ்வளாகம் முழுவதும்
கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளது
என்று அறிவிப்பு பலகை தொங்குகிறது.

பெண்ணும் தெய்வமும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆட்கள் குறைய குறைய
மேகம் கருக்கத்தொடங்க
அப்பெண் தன் வீட்டை நோக்கி நகர தொடங்குகிறாள்…

தெய்வம் சிலையாகியிருந்தது.

அப்பெண்ணின் கொலுசொலி-
அம்மலை முழுவதும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.


 

ரு கொலையுதிர் காலத்தின் இறுதியில்
சில சாசனங்களை நிறைவேற்றும் தொனியில்
உறங்கிக்கொண்டு இருக்கிறது இந்த இரவு.

எண்ணங்களில் வாழ்விடங்களின் அதன் நம்பகமான பூமியில்
கொத்து கொத்தாக விழும் பிஞ்சு உடல்களை
இந்த வசந்த காலத்தின் மீது தூவிக்கொண்டு கிடக்கிறான்
கடவுளின் சன்னிதியில் ஒருவன்(ள்)!.

நட்சத்திரங்களையும் நிலவினையும் அண்ணாந்து பார்க்கும்
சிறுமி ஒருவளின் கண்களை நோக்கி
எரிகல் வீசுவது குரூரத்தின் வாழ்வியல்,

கண்களில் ஒளியுடன் கருணை பிரகாசிக்கும்
புன்னகையுடன் கைகளை நீட்டும் சிறுவனை
வாள் முனையில் மண்டியிட வைப்பது நம் வாழ்வு.

பச்சை பச்சையாக வழிந்தோடும்
இரத்தத்தின் வாடை நாசிக்குள் இறங்கி
அதன் புனிதத் தன்மையை
ஒரு மதுக்கோப்பையில் ஏந்தி
புத்தனுக்குப் படையலிடுவது
அவன் புன்னகைக்கு நாம் தரும் பரிசு.

உயிர் வலியுடன் ஒரு சிசுவைப் பெற்றெடுக்கும் அன்னையை,
அவள் தம் கருனையை
அவள் அனுமதியில்லாமல் அழித்தொழிப்பது .

உதிரும் குருதியைத் தேக்கி
அதன் நறுமணங்களைச் சுவாசித்து
இந்த பேரண்டத்தின் உயிர் குமைகளைக் கடத்தும்
அணுக்களைத் தீயிட்டுக் கொண்டாடுகிறோம்.

ஒற்றை கொலையுதிர் காலத்தின் கடைசி இலை
உதிரும் முன் சற்று பறந்திருப்போம் .

மேகக்கூட்டத்தின் ஞாபகத்தில்….


சுமைதாங்கி கல் அருகே கைக் குழந்தையுடன்
துயரத்துடன் நின்றிருக்கிறாள்.

தன் ஊருக்குச் செல்லும் பேருந்து வரத் தாமதமாகத் தாமதமாக
நடையாய் நடந்துவிடலாம் என்று எண்ணங்கள் தோன்றவே
ஊரின் தூரம் அவளை மேலும் களைப்படைய வைத்தது.

சூரியனின் சூடு
மண்டைக்குள் இறங்க…
நா வறண்டு தண்ணீருக்கு ஏங்கியது நாவு.

சித்திரை மாதத்தில் மட்டும் கணவனிடம்
சண்டையிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றவே,

தளிர் தூரத்தில்
கைகாட்டி
‘அப்பா அப்பா’ என்றது..

அவன் கோவமாகச் சைக்கிளை மிதித்துக் கொண்டு
அவள் அருகே நிறுத்தினான்.

முகத்தைத் திருப்பிக் கொண்டு
வேறு எங்கோ பார்த்தபடி தேம்பித் தேம்பி அழுதாள்..

கண்களில் கண்ணீர் மட்டும் வரவே இல்லை..

ஆத்திரத்தில் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டே
பளீர் என்று அவள் கன்னத்தில் அறைந்தான்..

குழந்தையை முன் அமர வைத்துக் கொண்டு
அவளைத் திரும்பிப் பார்த்தான்

கண்களைத் துடைத்துக் கொண்டு
சைக்கிளின் பின்புறம் ஏறினாள்…

அவனிடம் ஏதோ முணுமுணுப்பாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

அவனும் தலையைத் தலையை அசைத்துக் கொண்டு சைக்கிளை மிதித்தான்..

தூரத்தில் அவள் செல்லும் பேருந்து வந்து கொண்டு இருந்தது.

வெயில் சற்று குறைய,
அவன் இடுப்பில் கை வைத்துக் கொண்டாள்…

மேகம் கருக்கத் தொடங்கியது.


ரியா நீரூற்றுக்குள் மெல்ல மெல்ல நடக்கிறாய்..
உன் மேக்லீன் சொல்கிறாள் கடல் மீது நடப்பாயா என்று..

மூன்று சுழியில்
நிலத்தின் மேற் புறத்தில்
மந்தை வெளியில்
யாருமற்ற தனிமையில்
ஆட்டுக்குட்டியின் கைபிடித்து நடந்து வருபவனின் வருகையை நோக்கி…

அவன் கையில் தவறவிட்ட மற்றொரு ஆட்டுக்குட்டி நீ ரியா..!
நான் அவன் மடியில் தாளமிடும் வீணையின் சுரம்..!

அங்கிகளை உனக்கு அளித்து
சிலுவையை எனக்கு அளித்தான்
ரியா

ஆணிகள் கைகளில் இறங்கியிருக்கிறது
வெள்ளைப் புறாக்களின் சிறகில் உனையமர்த்தி பறக்க விடுகிறான்
நீ அமைதி கொள்!!!.


About the author

விஜி பழனிச்சாமி

விஜி பழனிச்சாமி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website