cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 12 கவிதைகள்

அன்புத்தோழி ஜெயஸ்ரீ கவிதைகள்


காதல் காப்பான் காதை

 

அக்கிளிகள் இரண்டும்

முத்தமிட்டுக் கொண்டேயிருந்தன 

காதலிப்பதே வாழ்வென்ற காலம்

சட்டென்று எங்கிருந்தோ வந்த பருந்தொன்று

வானத்துப் புள்ளினங்கள்

பறந்து கொண்டே இருக்கின்றன

நின்று நீயுமினி காதலிக்காதே..

பற..என இலக்கைத் தூண்டுவதாய்

இறகைத் தூண்டியது.

 

கோபத்தில் சிவந்த ஒருகிளி 

நீ எப்படி அதைச் சொல்லலாம்

குதித்து நீண்டு வாதிட்டே குரங்காகிப் போனது

ஆட்டுவித்தபின் அடுத்த இலக்கு

தேடிப்போனது பருந்து 

முத்தமிடாவிட்டால் செத்துவிடுவேனென

புறங்காட்டி மரத்தைக் கொத்தியே

மரங்கொத்தியானது மற்றோர் கிளி 

இயல்பு திரிந்தாலும் கூடு கிடைத்தது

மிச்சக்காதல் பொத்திக் காத்திருந்தது.

 

அங்கே..

சிறு புதர்களின் நடுவே 

அழியாக்காதல் மகரந்தக்  கவிதைகளை

மலர்களில் எழுதிக்கொண்டே

காதலை எப்போதும்போல் கொண்டாடின

தம் செயலாற்றுகோலை ஒருபோதும்

பிறருக்கு வழங்காத வண்ணத்துப்பூச்சிகள்.

 


தேவதையும் தேவதையும்

 

தனித்திருக்கும் தேவதைகள் சக்தியற்றவை  

தேவதையும் தேவதையும் சேர்ந்துவிட்டால் 

சாத்தானால் ஒன்றுமே செய்துவிட முடியாது 

என்பதறியாத தேவதைகள் 

தேவதைகளைச் சேர்த்துக் கொள்வதேயில்லை

ஒருவேளை அதுவுமோர் அரக்கி 

என்பதால்கூட தேவதையைப் புறக்கணித்திருக்கும் 

என்றெல்லாம் எண்ணாது 

நேர்மறைப் பால்வெளியின்  கடைசி தேவதை.


கனவின் நிஜம்

 

நான் உறங்குகையில் எந்தக் குற்றவுணர்மின்றி

உருட்டப்படும்  பாத்திரங்களின் மீயொலி

செவிப்பறை தாண்டி எவருமற்ற 

உயிரறையை ஓங்கி அறைகிறது 

திடுக்கிட்டு விழித்தலரும் விழிவழி

எனதேயான வசந்த சொப்பனமொன்று

உடைந்தோடுகிறது 

அசையாமல் கிடக்கும் நித்திரைக் கோலத்தின்

சாகச பாவனைகளில் உருட்டப்பட்ட பாத்திரங்கள் 

எவர்சில்வரால் ஆனவையல்ல எனும் 

பேருண்மை மௌனமாய் உறங்குகிறது.


இந்தக் கவிதைகள் Spotify App -இல் உள்ள  Nutpam- Podcast –லும் ஒலிபரப்பாகிறது.

About the author

அன்புத்தோழி ஜெயஸ்ரீ

அன்புத்தோழி ஜெயஸ்ரீ

முதுகலை வணிக மேலாண்மையியல் மற்றும் முதுகலை ஆலோசனை உளவியல் பட்டதாரியான ‘அன்புத்தோழி’ ஜெயஸ்ரீ; அகில இந்திய வானொலியில் தொகுப்பாளராகவும், பொதிகை தொலைக்காட்சியில் வாசிப்பாளராகவும் பணிபுரியும் இவர் உளவியல் ஆலோசகராகவும், கல்லூரிகளில் சிறப்பு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

எமக்கும் தொழில், இடை வெளியில் உடையும் பூ, நிலாக்கள் மிதக்கும் தேநீர், தழும்பின் மீதான வருடல் ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்கள் இவரின் எழுத்தாக்கத்தில் இதுவரை வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website