தன்னிடம் வருபவர்கள்
தன்னை இறுகப் பற்றிக்கொள்ளுமாறு
பார்த்துக்கொள்கிறது முதலில்.
கைகளின் பிணைப்பில்
இதுவரை சுகித்திடா
புதிய அனுபவமொன்றின்
ஆனந்தத் தித்திப்பு
மனதின் நாக்கில் தேன் சுனையாகப்
பெருகுகிறது ஆரம்பத்தில்.
மெல்ல மெல்ல நகரத் தொடங்க
இசை குடித்த பறவைகளாய்க்
கிறங்கவைக்கிறது
உலகம் மறந்து.
பிறகு
மேலெழுந்து வான்தொட்டுக்
கீழ்ப் பாய்கிற அருவியாகிறது
வேகமெடுக்கிற பிரிய நதி.
உலகத்தீரே
உலகத்தீரே
இதுபோல் ஏது இன்பமென
ஓவென ஆரவாரக் கூச்சல் எழுகிறது.
அதன்பின் முதல் திருப்பத்தில்
இடதுபுறம் அவளுடைய விருப்பங்கள்
வலதுபுறம் அவனுடைய தேர்வுகள்
என்று மாறிச் சுழல
அச்சத்தில் கண்களை
மூடிக்கொண்டு தொடர்கிறது பயணம்.
சில சமயங்களில்
பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிற
நீண்ட மௌனம்
முடிவுறாத இருட் குகைக்குள்
வேகமாகப் பாய்கிற ரயிலாக
மாற்றிவிடுகிறது.
பிரிவுக்குள் வீழ்ந்துவிடாதிருக்க
பழைய பரவசத் தருணங்கள்
மனதெங்கும் பரவவிட்டு
இது இன்பம்தான்
என்ற நம்பிக்கையை
அழுத்தமாகப் பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு கோபமும் பிரிவையும்
ஒவ்வொரு பிரிவும் கோபத்தையும்
விளைவிப்பது
தவிர்க்க இயலாத் தடுமாற்றங்கள்.
குடும்பம், நட்பு, வேலை, தேர்வுகள்
எனும் பக்கத்துப் பெட்டிகளை
நாமும்
அவர்கள் நம்மையும்
இடித்துத் தள்ளிவிடாமல் பயணிப்பதே
சாதனையாகிறபோது
சலிப்புத் தட்டுகிறது.
என்னைக் கைவிட்டுவிடமாட்டாய்தானே
என்று காதலர்கள் ஒவ்வொருவரும்
ரோலர்கோஸ்டரிடம் மன்றாடிக்
கேட்கின்றனர்.
பதிலுக்கு அதுவும் இதையே கேட்கிறது.
முழுதாய்
ஒப்புக் கொடுத்தல் மட்டுமே
உயிர் வாழ்தல் சாத்தியம்
என்றுணர்ந்தவர்கள்
தொடர்கின்றனர்.
திருவிழா தீர்ந்து தனியே
நிற்கிற ரோலர் கோஸ்டரைப்
பார்க்க நேர்கிறபோது
நாம் குழந்தையாகிக் குதூகலிக்க
அதில் நாம்
பயணித்திருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை.
இந்தக் கவிதைகள் Spotify App -இல் உள்ள Nutpam- Podcast –லும் ஒலிபரப்பாகிறது.
அருமை