ஊதா நிறத்துப் பிழை
அதுதான்
நமது கடைசிச் சந்திப்பென
நீயாவது
சொல்லிப் போயிருக்கலாம்…
நானாவது
கேட்டிருக்கலாம்.
அந்த அந்தி மழைச் சந்திப்புக்குச்
சாட்சியாக நின்றிருந்ததே
என் கையிலொரு ஊதா நிறத்துக் குடை..
உனக்கு நினைவிருக்குமா
தெரியவில்லை.
அந்த மழையின் பிழையை
இப்போதும் அது
பதுக்கி வைத்திருக்கிறது
நீயெப்படியோ நானறியேன்.
சொல்லாத சொற்களோடு
வெல்லாதுபோன அந்த நாளின் ஈரத்தை
அதன் காதுகளில் தான்
சொல்லிச் சொல்லி மனனம் பழகுகிறேன் நான்
நீ வருவாய் என.
அந்தப் பிழைமழையை விடு
இனியொரு நல்லமழை வாய்த்தால்
எடுத்து வா…
உனக்குப் பிறகு நனையாமல்
காத்திருக்கிறது
ஊதா நிறத்துக் குடையும்
பிறிதொரு நாளும்.
பத்தியச்சோறு
ஒரு கல்யாணத்தில்
என் மகளென்று தெரிந்து
அவளை வாரியணைத்து
வாஞ்சை மொழிகிறாய்..
அவளின் ஒவ்வொரு துளியிலும்
நீயறிந்த என்னை
நீ தேடுகையில்..
உனக்குத் தட்டுப்படாத
தூரத்திலிருந்து
உன் பார்வையில் நனையாமல் நனைகிறேன் நான்.
அந்தக் கணம்
உன் கனமும்
என் கனமும்..
காலமிட்ட பத்தியச் சோறாய்
நமக்குப் பாத்தியப்பட்ட கணம்.
சத்தியமாயது
ரணத்துக்கும் ரணம்.
பொய்யில்லை என் மெய்
இதுவரைக்கும்
வாய்மொழியாய் எதையும்
மொய்யெழுதிக் கொண்டதில்லை
நம் மெய்யை.
அதற்காக..
பொய்யெழுதிக் கொள்ளவுமில்லை.
ஏழுகடல் ஏழுமலை தாண்டி
ஏழேழு பிறவிக்குமாய் நீந்திக் கடக்க வேண்டியதன் பாடு அது..
அத்தனை
நீ….ளப் பெருங்கோட்பாட்டினை
தாங்குமாயென்ன
ஐ லவ் யு என்ற
இந்த மீச்சிறு கூப்பாடு.
நீ துளையிட்ட என் கனவு
நீ புல்லாங்குழல் வாசிப்பது
தெரிந்திருந்தால்
ஒருவேளை நான்
உன் கையிலாடும் மூங்கிலாய்ப்
பிறந்திருப்பேனோ
என்னவோ.
கண்ணை மூடி நீ
வாசிக்கத் தொடங்குகிறாய்..
என்னைப் பாரேன்..
உனதந்தக் கோலத்தில்
கண்ணைத் திறந்துகொண்டே
நம் வாழ்வின் இறுதிவரைக்கும்
ஒருநடை போய்
வாழ்ந்து பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.
என்னவோ போ…
உன் புல்லாங்குழல் திறந்துகொள்கையில் எல்லாம்
குழலூதும் கண்ணனுக்குக்
குயில்பாடும் பாட்டுக் கேக்குதா..
குக்கூ குக்கூ வென தான் கேட்கிறதெனக்கு.
எதிரில் நானொருத்தி
கரைவது தெரியாமல்
கரைந்து கொண்டிருக்கையில்
உன்பாட்டுக்கு
வாசித்துக் கொண்டே போகிறாய் நீ..
என்னில் சுட்டெரிக்கும் உன் அதிர்வில் நான்தான்
நீ துளையிட்ட என் கனவின் வழியே..
இந்த வாழ்வு போதாமல்
ஜென்ம ஜென்மத்து
நாள்காட்டியைக்
கிழித்துக் கொண்டிருக்கிறேன்.
பைத்தியம் என்று நீ சொன்னால்..
வைத்தியம் பாரேன் நீதான்.
அன்பின் அகதி
சிலுவையில் அறையவெனவே
துரத்தியடிக்கின்றன
அன்பின் அகதியாய் அலையுமெனது
துருப்பிடித்த திசைகள் யாவும்.
நிதானத்தின் நிறுத்தத்தில்
நிலைகொள்ளச் சொல்லி
வெந்த புண்ணுக்கு வென்னீரை வார்க்கிறது
வேடிக்கை செய்யுமிந்த உலகம்.
இப்போது
சிலுவை இலகுவெனப்
படுகிறதெனக்கு…
மூன்றாம் நாளே இல்லையென்றாலும்
எப்படியும் ஒருநாள்
உயிர்த்தெழுந்து விடலாம்
அதில்.
இந்தக் கவிதைகள் Spotify App -இல் உள்ள Nutpam- Podcast –லும் ஒலிபரப்பாகிறது.
சிறப்பு
வாழ்த்துகள் தோழர்