cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 12 கவிதைகள் கவிதைச் சார்ந்தவைகள்

கதையிலும் கவிதையிலும் மிளிர்ந்த படைப்பாளர்கள்


கவிதை எழுதுவதும் கதை எழுதுவதும் இரு வெவ்வேறு தளங்கள், இரண்டும் முற்றிலும் வெவ்வேறான இசைக் கருவிகள் போல என்கிறார் காலின்ஸ். இரண்டு இசைக் கருவிகளிலும் தேர்ச்சி பெறுவது அசாதாரணம், அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற குறிப்பாக, எழுத்தாளர்களான கவிஞர்களைப் பற்றியது இந்தப் பதிவு. அதிலும் கவிதை ஒரு மயக்கமூட்டும் வஸ்து, இசை மொழியின் பிரபஞ்ச நடனம், கட்டற்ற காதலின் தீராபிரவாகம், அதனால் தான் கவிதை மொழியிலிருந்தே பலரும் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். காதலும் கவிதையும் யாரையும் விட்டு வைப்பதில்லை, சிந்தனைவாதியாக உலகம் கொண்டாடும்  மார்க்ஸ் காதல் ஜென்னிக்கு எழுதிய கவிதைகள் வழியாகத்தான் எழுத்துலகில் அறிமுகமாகிறார்.

உன்னுடைய இனிய முகத்தில் என்னுடைய முடிவில்லாத துயரங்களை, ஈடு செய்ய முடியாத இழப்புகளைக் காண்கிறேன். உன்னுடைய இனிய முகத்தை முத்தமிடும்போது துயரங்களை நான் முத்தமிட்டு துரத்துகிறேன்.

என்று எழுதுகிற போது மார்க்ஸ் காதலர் என்பதையும் தாண்டி கவிஞராகவே அடையாளப்படுகிறார்.

“ஏழை படும் பாடு” நாவல் மூலம் உலகெங்கும் அறியப்பட்டாலும், விக்டர்ஹியூகோ -வின் எழுத்து பயணம் கவிதைகளின் வழியாகத்தான் தொடங்குகிறது. இளம் பருவத்தில் தந்தை இவரை அரசுப் பணியில் சேர்க்கவே விரும்புகிறார். கவிமனம் அதனை ஏற்கவில்லை. “உனக்குக் கவிதையே சோறு போடட்டும்” என்று வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். கந்தலுடையுடன், கிடைத்த இடத்தில் படுத்துறங்கி, கிடைத்ததை உண்டு; பிச்சைக்காரன் போல் அலைந்த ஹியூகோவை கவிதை மட்டும் கைவிடவில்லை. ஹியூகோ எழுதிய நெடுங்கவிதை பிரஞ்சுக் கழகத்தினரால் பாராட்டும் பரிசும் பெறுகிறது. அதுவே ஹியூகோவிற்கு படைப்பிலக்கியத்தின் மீதான நம்பிக்கை வலுப்பெற காரணமாக அமைகிறது. அதன் பின்னான காலத்தில் 20 க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிடுகிறார்.

தமிழில் பாரதிக்கு பிறகு புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தி புதிய உத்திகளை கையாண்டு பார்த்தார். பிச்சமூர்த்திக்கு பிறகு புதிய பரிச்சார்த்த முயற்சிகளை செய்து பார்த்தவர் புதுமைபித்தன்.

கவிதையின் உயிர்ப்பே அதன் ஜீவ சக்திதான். அது எழுதுகிறவனின் உணர்ச்சியையும் உத்வேகத்தையும் பொறுத்தது என்கிற புதுமைப்பித்தன் கவிதையில்..

 “செத்ததற்குப் பின்னால்
நிதி திரட்டாதீர்!
நினைவை விளிம்புகட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
‘வானத்து அமரன்
வந்தான் காண்!
வந்தது போல்
போனான் காண்’ என்று
புலம்பாதீர்;
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்.”

”சோகக் கதை என்றால்
சோடி இரண்டு ரூபா!
காதல் கதை என்றால்
கை நிறையத் தரவேணும்!
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை
காசை வையும் கீழே. பின்
கனவு தமை வாங்கும்;
காலத்தால் சாகாது,
ஏலத்தால் மலியாது
ஓடாதீர்
உமைப்போல நானும்
ஒருவன் காண்
ஓடாதீர் ! “

என்று எழுதி ஆசுவாசப்பட்டுக்கொள்கிறார்

இலக்கிய பரப்பில் மொழிபெயர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் மூலம் திடமான மதிப்பீட்டைத் வலியுறுத்தி வந்தவர் க.நா.சு. அதே போல கவிதை தொடர்பாக துறக்கவேண்டியதும், ஏற்கவேண்டியதுமான ஒரு சில மதிப்பீடுகளையும் கொண்டிருந்தார். அதனால் தான் தனது கவிதைகளை அவர் சோதனை முயற்சி என்று சொல்கிறார். தேனீக்களைப் போல தேடிக் கண்டடைவதுதான் கவிதை, தேடாமல் கவிதை சாத்தியமில்லை என்கிற கா.நா.சு-வினுடைய ஒரு கவிதை

“செத்துக் கிடந்த தாய் உருவம்
மறந்துவிட்டது,
ஆனால் அழவேண்டிய மாதிரியா நீ அழுதாய் என்று
பாட்டி கேட்டது மட்டும் பசுமையாய் நினைவில் பதிந்திருக்கிறது”

என்று முடிகிறது.

சிறுகதை ஆசான் கு.பா.ரா. நாவல், சிறுகதை, நாடகம், கவிதை என்று இலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் தொட்டவர். கு.ப.ரா.வின் மறைவுக்குப் பின் வெளிவந்த ‘சிறிது வெளிச்சம்’ என்னும் நூலில் அவருடைய 21 கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. புனைவுகள் போல அமைந்த இக்கவிதைகள் தமிழ் இலக்கிய பரப்பில் முக்கியமானவை. அதிலிருந்து ‘என்னதான் பின் ?’ என்ற ஒரு கவிதை ..

”காதலென்றால் கேலிசெய்கிறாயே எதற்காக ?
கவிதையைக் கள்ளச்சொல்
என்கிறாயே வேண்டுமென்றுதானே
நான் துதிக்கிறேன் என்று தானே இருக்கட்டும்-
நமது இன்பத்து ஏகாந்த இரவின் இறுதியில்
பிறை வெளுத்தபின் மாலையில்
இருள் வெள்ளம் வடிந்த வைகறையில்
ஓவியமூட்டும் உன் ஒளிக்கரங்களை விட்டு
நான் பிரிவினை கொள்ளும் போர்வேளையில்
உன் கண்களை கலக்குவதென்ன காதலல்லாமல்
அந்த கனவழியும் பொழுதில்
உன் வார்த்தை வனப்புத்தானென்ன
கவிதையல்லாமல் ?.”

பாரதி மரபில் வந்தவன் என்று தன்னை பிரகடனப்படுத்தும் ஜெயகாந்தன் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமை. முன்னுரையைக் கூட இலக்கியப் பிரதி ஆக்கியவர். அதைப் போலவே அவரது கவிதைகளும் கம்பீரமாக நம்மோடு கை குலுக்குவதை உணர முடியும், உதாரணத்திற்கு இங்கே இரண்டு தெறிப்புகள்…

“நதி மிகவும் பழைய நதி
புது வெள்ளம் போகிறது
பதி மிகவும் பழைய பதி
புதுப் பாதைப் போடுகிறோம்
புது மயக்கில் ஆடுகிறோம்
விதி மிகவும் பழைய விதி – நம்
விளையாட்டே புதியதைய்யா”

“நாலு வயதில் இருந்து – நான்
நடந்து வந்திருக்கிறேன் – இப்போ
நடத்தை சரியில்லை என்கிறார் – வயதோ
நாற்பது ஆகிறது.”

மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்றவர் ஜி.நாகராஜன். பல எழுத்தாளர் தொடத்தயங்கிய இடங்களை, எளிய மனிதர்களின் அழுக்கும் சேறும் படிந்த இன்னொரு பக்கத்தை தன் எழுத்தில் கொண்டு வந்தவர், “குறத்தி முடுக்கு” இவருடைய முக்கியமான நாவல். காலச்சுவடு பதிப்பித்த ஜி.நாகராஜன் ஆக்கங்கள். முழுத் தொகுப்பில் 3 கவிதை இடம்பெற்றிருக்கின்றன. அதிலொன்று…

”அவன் அல்லற் படுகின்றான்
இரங்காதே
அவள் தொல்லைப் படுகின்றாள்
கசியாதே.
அவர் இம்சைப் படுகின்றார்
உருகாதே.
கசிதலும் உனக்கு நீ
ஊட்டும் விருந்தே,
ஆவன இருப்பின், ஆவன செய்;
செய்வன இலையேல் செல்லுக மேல்.”

பிரபஞ்ச கவி என்ற பெயரில் தொடக்கத்தில் கவிதைகள் எழுதியிருக்கும் பிரபஞ்சன். அவற்றை திரும்ப வாசித்த போது எனக்கே அபத்தமாக இருந்தது. அதனால் அதைப் பற்றி எங்கும் பேசுவதில்லை என்கிறார்.

“மறுபக்கம், புதிய தரிசனம்” போன்ற தமிழின் மிக முக்கியமான நாவல்களை எழுதியிருக்கும் பொன்னீலன் அண்ணாச்சியும் தொடக்கத்தில் நிறைய கவிதைகளை எழுதியிருக்கிறார். அழகு ததும்பும் அண்ணாச்சியின் கவிதை ஒன்று

“கிழக்கே நீலம் பிரிந்து விட்டது
மென் காற்றே
என்னை நோக்கி வீசு
என் கருப்பு மலர்
என் முகத்துக்கு நேரே சிரிக்கும்படியாக
பழுத்த இலைகளை உதிர்த்து
குருத்து இலைகளை விரித்து
மென் காற்றே மெல்ல வீசு”

என்று குளிர் மொழியை அள்ளி வீசுகிறது

ஜனரஞ்சக எழுத்தாளர் என்று சொல்லப்பட்டாலும் பலரது தொடக்க கால வாசிப்பு பாலாகுமாரன்– னிடமிருந்தே தொடங்கியிருக்கும், பாலாவும் கவிதைகளிலிருந்தே தொடங்குகிறார். பாலாவின் கவிதைத் தொகுப்புக்கு கமலஹாசன் முன்னுரை எழுதியிருக்கிறார்.

இரவல் கவிதை என்ற ஒரு நாவலில் இடையிடையே நிறைய கவிதைகளை சேர்த்திருப்பார் பாலா.

”உனக்கென்ன கோவில் குளம்
சாமி பூதம் ஆயிரமாயிரம்
இனிமையாய்ப் பொழுதும் போகும்
வலப்பக்கம் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள்
வலிக்கின்றன
நாளையேனும் மறக்காமல்
வா”

என்கிற கவிதை அப்போது ரொம்பவே பிரபலம்

நுட்பமான ரசனை, கரைந்து போகிற பிரியம், தன்னையிழக்கும் ருசி, மிகையான கற்பனை, அழகின் உபாசனை, ததும்பும் மனது இவை இல்லாதவர்களால் காதலிக்கவோ கவிதை எழுதவோ முடியாது என்கிற மாலனின் ஒரு கவிதை

”நட்பால் பெற்றவை சில நானாய் சேர்த்தவை சில
ஆதாரமாய் சில
அலங்காரமாய் சில
சீண்டிப் பார்ப்பவை சில வேண்டிப் பெற்றவை சில விமர்சனத்துக்குரியவை சில வெட்கம்கெட்டவை சில
எடுத்து எறிய முடியாமல் வைத்து காக்க தெரியாமல்
வீடு முழுக்க புத்தகங்கள்
உன் நினைவை போல”

என்று காதல் நினைவுகளை புத்த அடுக்குகளில் சேமிக்கிறது

பாலகுமாரன், மாலன், சுப்ரமண்யராஜு மூவரும் நண்பர்கள், இதில் ராஜுவைப் பற்றி அதிகம் பேருக்கு தெரியாது, சுப்ரமணியராஜுவின் கதைகளின் முழுத் தொகுப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்த சுப்ரமண்யராஜூவும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அந்த கவிதை

“நேற்று திருமணமான
நேப்பாள கூர்க்காவுக்கு
இன்று முதல் பகல்”

என்கிற ஹைக்கூ வடிவிலானது

கலை என்பது ஒரு மாரீச மான். துரத்தத் துரத்த அது ஓடிக் கொண்ட இருக்கிறது, சமயங்களில் நம்முடைய பிரயத்தனம் இன்றியே கூட அதனுடைய தலைப்பகுதியோ காலோ தட்டுப்பட்டு விடுகிறது. ஒரே பரவசம், ஆனால் அந்த அனுபவமும் மின்னல் வெட்டும் நேரம் தான். பிறகு மறுபடியும் காணாமல் போகிறது. திரும்பவும் கண்ணா மூச்சி ஆட்டம் தான், என்கிற வண்ணநிலவன் கவிதைகளில் ஒன்று

”கைக்குட்டையைத்
தொலைப்பது போல் காலத்தைத்
தொலைக்க முடியவில்லை
விழித்தாலும், உறங்கினாலும்
வீணே என்னுடனிருக்கும்
காலத்தை என்ன செய்ய?”

என்கிற கேள்வியின் வழியே அகவிழி திறக்கிறது. வண்ணநிலவன் காலம் என்று ஒரு நாவலும் எழுதியிருக்கிறார்

சுந்தரராமசாமியின் கவிதைகளை பதற்றமும் தத்தளிப்பும் நிறைந்த அகவுலகின் வெளிப்பாடுகளாக பார்க்கலாம், சுந்தரராமசாமி அடிப்படையில் ஒரு கவிஞர், அதனால்தான் அவரால் சிறுகதை மற்றும் நாவல்களில் உயரங்களை எட்ட முடிந்தது. அவரது கவிதையில் ஒன்று

”உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு”

தமிழின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமி கதைகள், கட்டுரைகளில் போலவே கவிதையிலும் தனக்கான இடத்தைத் தக்க வைத்திருக்கிறார்.

சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற படைப்புகளைவிட கவிதைக்கு ஆயுள் அதிகம், அதனால் தான் 2000 ஆண்டுகளாக உயிர்ப்போடு இருக்கிறது. அதனால் கவிதை அதற்கு தகுதியாக எழுதப்பட வேண்டும் என்கிறார் நாஞ்சில்நாடன். அவரது கவிதை

”மது வேண்டி எவனிடமும் இரந்தேனில்லை
எவள் நிதம்ப வாசனைக்கும் விரைந்தேனில்லை
கூலிக்காய் எவரையும் புகழ்ந்தேனில்லை
முன்னுரைக்கும் மதிப்புரைக்கும் அலைந்தேனில்லை
தமிழ்த்துறையின் தாழ்வாரம் உருண்டேனில்லை
பதிப்பாளர் முன் குனிந்தேனில்லை
விருதுக்காய் பரிசுக்காய் நடந்தேனில்லை
சுயசாதி இருக்கைக்காய் நச்சவில்லை
சவத்துக்கு தேசக்கொடி உவந்தேனில்லை
எவர் காலும் நக்குவதெம் தமிழும் இல்லை”

என்று ஒரு தன்னுரையாடல் போல நீள்கிறது

என் கவிதைகளை நான் நாடகக் கொட்டகையிலிருந்துதான் எழுதக் கற்றுக் கொண்டேன், இப்போது வரும் கவிதைகளை நான் படித்து வருகிறேன். சிலதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கவிதை என்பது மனசில தைக்கிற மாதிரியும், தீயை உண்டாக்குவதாகவும் இருக்கவேண்டும். தமிழில் அப்படி கவிதைகள் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்கிற நீலபத்மநாபன் – னின் கவிதை

“வந்த சுவடு தெரியாமல்”
ஆர்ப்பரித்து வந்த
எதிர் காற்றினில்
அடிபதறாதிருக்க
அழுத்திக்காலூன்றிய
கட்டங்கள் கணங்கள்
இல்லையென்பதில்லை
இருப்பினும்
இப்போதெல்லாம்
வந்த சுவடு தெரியாமல்
போய்விடவே ஆசை”

அபூர்வமான கவிதைகள் எப்போதும் நிகழ்வது இல்லை. அது ஓர் உச்சம். ஓர் இலக்கு. ஒரு கனவு. ஆனால் கவிதை என்பது ஒரு சமூக நிகழ்வாக எப்போதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. கவிதை எழுதுவதும் வாசிப்பதும் பண்பாட்டின் அன்றாடச்செயல்களில் ஒன்று என்கிற ஜெயமோகன் –இன் கவிதை…

“எறும்பு தின்னி”
எறும்பு தின்னியின் நிதானம்.
திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன்
கனமாக அசைந்து செல்கிறது.
அதன் குளிர்ந்த நாக்கு
எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது.
அதன் குளிர்ந்த மூச்சு
அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது.
உள்ளே ஓலங்கள்
உயிரின் குருட்டு வெறி
தினம் அதுகாண்பது அக்காட்சி.
மரணம் ஒரு பெரும் பதற்றம்
என அது அறிந்தது.
எனவே
வாழ்வு ஒரு நிதானமான நடை எனப்
புரிந்து கொண்டது”

மர இலை உதிர்ந்து காற்று வெளியில் பயணித்து நிலம் சேர்வது மாதிரிதான் கவிதைப்பயணமும், எப்போதும் தயாராக இருக்கும் நிலம் போலத்தான் கவிஞன் என்கிற பெருமாள்முருகன் உடைய கவிதையுலகம் எளிமையும் வசீகரமும் நிறைந்தவை மட்டுமல்ல இந்த சமூக சிடுக்குகளின் மீது ரௌத்திரம் பழகக் கூடியதும் கூட,

”கட்டை விரல் வெட்டி குருவுக்கு சமர்ப்பித்தார் எம்முன்னோர்
சுண்டுவிரல் தறித்து காணிக்கை தந்தோம் நாங்கள்
எதிர்கால சந்ததிக்கு
இருக்கின்றன இன்னும் மூன்று”

என்ற இந்தக் கவிதை பெருமாள்முருகனின் கவிதை முகத்திற்கு சிறிய சான்று.

“இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துவது இலக்கணம்; அப்படி இருக்க முடியாமல் போவதன் அவஸ்தைகளைப் பேசுவது இலக்கியம்; பாவனையான பதில்களுடன் கிடைத்த ஆனந்தத்தில் திளைக்கிறது தினசரி வாழ்க்கை; அசலான பதில் உறைந்திருக்கும் புள்ளியை நோக்கி இருளடர்ந்த மனக்குகையில் பயணத்தைத் தொடங்குகிறது இலக்கியம்” என்று பேசும் பாவண்ணன்– னின் கவிதை,

”மழைப்பறவை,
விடியத் தொடங்கும் நேரத்தில்
காற்றிலேயே நெளிந்து தாவுகிறது
காணக் கிட்டாத கம்பிமழைப் பறவை
அதன் சிறகுகள் மின்னுகின்றன.
அவற்றின் அசைவும் தெரிகிறது
ஈரம் வருடுகிறது கன்னத்தை
நுரைப்புள்ளிகள் ஒதுங்குகின்றன கூந்தலில்
கோலமிட வந்த நங்கை
மனமும் உடலும் சிலிர்க்க நிற்கிறாள்.
அதன் ரகசிய வருகையாக்
நந்தியாவட்டைப் பூவின் இதழ்கள்
அகன்ற குரோட்டன் இலைகள்
எங்கெங்கும் நிறைந்திருக்கின்றது ஈரம்
தரையில் மட்டுமில்லை தடம்.”

கவிதைகளில் பாவண்ணன் காட்டும் படிமங்களும், உவமைகளும், உரைநடையில் சிறப்பாக இயங்கும் இவரால் எப்படி கவிதைகளிலும் பரிமளிக்க முடிகிறது என்று பெரும் ஆச்சரியமாக இருக்கிறது

கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், சிறந்த மேடைப் பேச்சாளர் என பல பரிமாணங்கள் உடையவர் அழகியபெரியவன். தன்னுடைய எழுத்து செயற்பாட்டின் வழியாக தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பவர். அவருடைய கவிதை….

”குருவிகளையும்
கூடுகளையும்
பார்க்கக் கூடவில்லை
முன்பென்றால் ஊரில்
அடைமழைக்காலம்
ஆற்றில் நீர்புரளும்
கரையெல்லாம் நெடுமரங்கள்
கரைகின்ற பறவைக் குரல்கள்
போகும் வழியெல்லாம்
தூக்கணாங்குருவி கூடுகள்
காற்றிலாடும் புல் வீடுகள்
மூங்கில் கிளையமர்ந்து
சுழித்தோடும் நீருடன்
பாடிக்கொண்டிருக்கும் சிட்டுகள்
மண்ணின் மார்பு
சுரந்த காலமது
வெட்டுண்டன மரங்கள்
வான் பொய்த்தது
மறுகியது மண்
ஏதிலியாய்க் குருவிகள்
எங்கோ போயின.”

நாய்கள் புனர்வது பற்றியெல்லால் சாருவும் கவிதை எழுதியிருக்கிறார் என்பதைத் தாண்டி சொல்வதற்கு ஒன்றுமில்லை.


 

About the author

முருக தீட்சண்யா

முருக தீட்சண்யா

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ‘கீரனூர்’ கிராமத்தை பூர்வீகமாக கொண்ட முருகதீட்சண்யா, தற்போது வசிப்பது மயிலாடுதுறையில். வணிக நிறுவனமொன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறார். “நீர்மையின் சாம்பல் சித்திரங்கள்” எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். இவரின் கவிதைப் படைப்புகள் சொற்கள், காக்கைச் சிறகினிலே, புதுப்புனல், கணையாழி போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website