cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 12 கவிதைகள்

குடந்தை அனிதா கவிதைகள்


மேகத்தின் ஓய்வு

பேரன்பு மொத்தத்தையும்
ஒரே நாளில்
கொட்டி விட்டுப் போகிறாள்.
கன்னத்தில் இடமில்லாமல்
கண் இமைகளிலெல்லாம்
ஒளித்து வைத்திருந்தேன்.
மாலை நேரத்திலெல்லாம்
இந்த மழை களவாடுகிறது.
தேநீரின் சூட்டை
மழைக்குத் தாரை வார்த்து
மேகத்துக்கு ஓய்வளித்தேன்.
குளிர்ந்த தேநீரைப் பருகி
இரண்டு முத்தம் மிச்சம் பிடித்தேன்.
அவள் மீண்டும் வரும் வரை
உயிர் வாழ்ந்து விடுவேன்.

பயணம்

இருசக்கர வாகன பயணத்தில்
சாலையோர மரங்களெல்லாம்
உன் சாயலில் தலையசைக்க
சாலையின் இரு மருங்கில்
வகிடெடுத்த‌ நிழல் மொத்தமும்
சீயக்காய் போட்டுக் குளித்த
கூந்தலாய் அலையாடுகிறது.
உன் நிழலில் இளைப்பாறும்
பட்டாம்பூச்சி ஒன்று
என்னை நிறுத்தி
நலம் விசாரித்ததில்
நீ நலமே என்றேன்.

வேர் வளர்க்கும் அம்மா

பெண்களில் சிலருக்கு
பெரியாரின் பேத்தி
என்றெல்லாம்
பறைசாற்றத் தெரியாது
வேர் விட்ட ஆசையெல்லாம்
கிள்ளி எறிந்தவர்களுக்கு
அறிவை அகற்றத் தெரியாது.
சமையல் நடுவே
கல்வி வேர் ஒரு பக்கமாக
வளர்ந்து கொண்டு தான்
இருந்திருக்கிறது.
இருட்டிலிருந்தாலும்
வெளிச்சம் வரும்
சாளரக் கதவைத்
திறந்து வைத்துக் கொண்டு
வேர் வளர்க்கிறாள் அம்மா.


இந்தக் கவிதைகள் Spotify App -இல் உள்ள  Nutpam- Podcast –லும் ஒலிபரப்பாகிறது.

About the author

குடந்தை அனிதா

குடந்தை அனிதா

தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்து, தற்போது ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் வசித்து வரும் குடந்தை அனிதாவின் இயற்பெயர் அனிதா பாபு. ’கவிதையும் கற்று மற’ மற்றும் ’நினைவுக் குமிழிகள்’ ஆகிய இவரின் கவிதை தொகுப்புகளை ’புஸ்தகா’- டிஜிட்டல் மீடியா வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website