cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

கயூரி புவிராசா கவிதைகள்


1.

கனவுகளை அடுக்கி பகடையாடும்
விழிகளில் தானியம் தேடும்
மஞ்சள் குருவியின் கழுத்தை
பிடிக்கிறாய்

பிடரிசிலிர்க்கும் பின்மாலைக் காற்றில்
துளாவும் அலைவெறிக்கும் பாதங்கள்
அம்பையின் கனல் தெறிக்கும்
இயலாமை
பீஷ்மரின் தவிப்பில் தீயெரியும் கானகம்
சிதறும் உறுத்தல்களில் எனக்கானவற்றை பொறுக்கி
கருணையே இல்லாத உனை நோக்குகிறேன்

என் காட்டு காற்றில் அலையும்
உன் வண்ணத்துப்பூச்சிகளை
ஒருபோதும்
விரட்டியதில்லை நான்.


2.

கிளையோடு உரசும் வண்டுகளின் வாசனைக்கும்
இதழ் திறக்கும்
காலைகளில் நீராழம் கொத்தி
எழுகிறது ஒரு மீன்கொத்தி

இருப்பின் மெல்லியகோடுகளில்
கழுத்தெலும்பு வளைக்கும் முத்த
ரோமங்கள்
உன் தாபத்தில் என் குளிர்தல்
சாதகப்பட்சியின் ஏக்கத்தில் விழும்
முதல் மேகத்துளி

மெய்நிகர்த்தும் தழுவலில் உருகும்
மெழுகு நதி
வெட்டப்பட்ட தசைத்துண்டில்
எவ்வளவு முழ்கினாலும்
துடித்துக்கொண்டிருக்கும் சிவப்பு
உன் தாகம்

மஞ்சள் பூக்கள் பரவும் கணத்தில் தான்
நீ மனதால் அணைத்திருந்தாய்.


3.

தொலைக்கப்பட்ட
மேகங்களிடை வண்ணங்களை
தேடிக் கொண்டிருக்கிறேன்

கரையாத நீலங்கள் செறியும்
நீரலைகளிடம் தாகமில்லா மீன்கள்
துழாவுகிறேன்
சோற்றுப்பருக்கை நோக்கி
முட்டி மோதி நிரைவகுக்கும்
சிற்றெறும்புகளென மனத் தகிப்புக்கள்
அவை முடிவிலி

சர்ப்பமொன்றின் பிளந்த நாவசைவென
சிறகுகொண்டு விதி மீறுகிறது இலையொன்று..
உயிர் கொள்ளும் அந்திம வலியின்
சரவொலிப்போடு அறைந்தபடி
மங்கல் இருளுறைவோடு
மழையொன்றின் வருகையை
தருவித்துப் போகிறது
அந்த நீல ஆகாயம்

இனி கடல் மேல் இளமையின்
காலை ஒளி பரவும்
நீங்கிச் செல்லும் உயிர் உடலை
மீள் நோக்கும்.


 

About the author

கயூரி புவிராசா

கயூரி புவிராசா

இலங்கை சார்ந்த கயூரி புவிராசா தனது 19 வது வயதிலிருந்து கவிதைகளை எழுதி வருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. ” ஒரு பகல், ஒரு கடல், ஒரு வனம்” எனும் கவிதைத் தொகுப்பை ‘கடல் பதிப்பகம்’ சமீபத்தில் வெளியிட்டது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website