cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

சுபியின் நான்கு கவிதைகள்

சுபி
Written by சுபி

  • நானே அதுவும் நானே இதுவும்.

பரிவர்த்தனை ஏதுமற்ற போதும்
ஜென்மாந்திரங்களின்
தொற்று தொடர கணக்கை மூடி விடாது வைத்திருந்தான் தேவன்
குறைந்த பட்ச வைப்புநிதிக்குக்கூட
வக்கில்லாத எனக்கு கடவுச்சொல் மட்டுமா நினைவிலிருக்கப் போகிறது
திறவுகோலையே தொலைத்து விட்டு
வழி மறந்த செம்மறியின் சாயலுடன்
திக்குத்தெரியாமல் நிற்கிற போது
அபயக்கரங்களை நீட்டுவதை மறந்து விட்டு
என்னோடு சேர்ந்து தேடுகிறான் தேவனும் கடவுச்சொல்லை;
இன்றென் பொழுதின் முடிவில்
நானே செம்மறி, நானே தேவன்!!


  • அழைத்துச் செல்கிறார்கள்.

இனி ஒன்றுமேயில்லை என்கிற
கடைசி இருள் சுமந்த இரவு அது…
விண்மீன்களின் வெளிச்சங்களைக் கூட விழுங்கிக்கொண்ட அடர் கவ்வும் இருளது
நிலவு கூட அன்று சோகத்தின்
சாயலுடன் மிக மெதுவாகவே நகர்ந்தது
வறட்டுப் புன்னகையினை சுவர்கள் பத்திரமாய் உள்வாங்கிக் கொண்டது
பின்னாளைய சரித்திர உண்மைகளுக்குச் சாட்சியாக
எதுவுமே இல்லையென்று நிரூபிக்க
ஏதுமற்று முனகிக்கிடந்தபோது
கொஞ்சம் வேடிக்கையாகத்தான்
இருந்தது இரவே இறந்தவனை
காலையில் அழைத்துச் செல்கிறார்கள்
மேடைக்கு!!


  • அது நானில்லை.

மாஞ்சாவென சீவப்படும்
போதெல்லாம் குடத்தில் இட்ட கருவென
மீண்டும் மீண்டும் உயிர் கொள்கிறது அன்பு
வேண்டுமென இருத்தி வைப்பதும்
வேண்டாமென நகர்த்தி வைத்தலுக்குமான
அலைக்கழிப்புகளின் மீது அடைத்து வைக்கும் கதவுகளுக்குப் பின்னால்
எந்த இடுக்கிலேனும்
காற்றாய், நீராய், நிலமாய் நுழைந்து வடிவம் கொண்டு விடுகிறது
அங்கே இருப்பது ஒரு போதும் நானில்லை
என்னைக் கொல்வதாய் நினைத்து
அன்பைக் கொன்று விட வேண்டாம்
தன்னை நிறைவுபடுத்திக் கொள்வது தவிர
அதற்கு வேறெந்த ஆசைகளுமில்லை!!


  • நிறுத்தம் செய்யப்பட்டு..

போர் தொடுக்க வேறொன்றும் தேவையில்லை
சில சொற்கள் போதும்
போர் தொடுக்கத் தெரியாமல் இல்லை
இங்கு யாரும்
ஒவ்வொரு வாயிலிலும் பறக்கும்
வெள்ளைக் கொடிகளுக்குப் பின்னால்
யாரோ ஒருவர் தோல்வியுறுகிறார்கள்…
யாரோ ஒருவர் வெற்றி பெறுகிறார்கள்…
குறைந்த பட்சம் விட்டுத்தருகிறார்கள்!!
போரின் முடிவில் ரத்தக் களறியாய் சில உண்மைகளும்,
உணர்வுகளைக் கொன்று குவித்த
சில சடலங்களும் கிடைக்கும் அபாயம் இருப்பதாலேயே
போர் நிறுத்தம் செய்யப்பட்டு பல வாயில்களில்
சொற்கள் வெள்ளைக் கொடிகளாய்!


 இந்தக் கவிதையை  Spotify  App – லும் கேட்கலாம். 

 

About the author

சுபி

சுபி

சென்னையை சார்ந்த சுபிதா எனும் இயற்பெயரை கொண்ட சுபி; வரலாறு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக, பள்ளி வயதிலிருந்தே சிறு சிறு கவிதைகள் எழுதி, தற்போது முகநூலிலும் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். இவரின் எழுத்தாக்கத்தில் காலடித் தடங்கள் , தேம்பூங்கட்டி, தோமென் நெஞ்சே ஆகிய தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website