cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

ரத்னா வெங்கட் கவிதைகள்

1.

என்னைத் தின்று எச்சமிடும் ஒன்றை
எச்சத்திலிருந்து உயிர்த்து
என் பேரன்பைக் கொட்டி
வளர்த்து வருகிறேன்

காலுரசி விரல் கடித்தே துப்புகிறது
நெஞ்சை முட்டிச் சாய்த்து
குரல்வளை நெறித்து
விழி பிதுங்குகையில் கைவிடெனெக் கரங்கூப்ப
முன் பல் காட்டி உறுமி
நாவால் வருடி முத்திடுகிறது

இறப்புக்கும் இழப்புக்கும்
நடுவே பரத்தி
ஆணியறைந்து குருதி சுவைக்கிறது
விடுவித்து
ஒற்றைக் கொம்பில் பிணைத்து
செக்குச் சுழற்ற வைக்கிறது

கயிற்றைத் தளர்த்தி அமர வைத்து
சுற்றி வந்து மடி சாய்கிறது
செல்லமென வாலாட்டி
தலை வருட வைத்து
கை சோர்ந்து
கண்ணயரும் நேரத்தில்
கபாலம் பிளந்து
கடித்தே தின்கிறது

என்னைத் தின்று எச்சமிடும் ஒன்றை
எச்சத்திலிருந்து உயிர்த்து
என் பேரன்பைக் கொட்டி
வளர்த்து வருகிறேன்….
அன்பை விழுங்கிச் செமிக்காது
உமிழ்ந்து வைக்கிறது.


2.

சாயல்களுக்கள்
சாயம் போனவற்றை
ஒரு முனைப்புடன்
தேடுதலை
வழக்கமாக்கி
நீலம் நீர்ப்பதும்
சாம்பல் பூப்பதும்
தன் குற்றமென
ஆகப்பெரிய துக்கமென
சுயமழித்துப் புறம்பேசித் திரிகிறாள்.

பூசிய இருண்மை
முன் வகிட்டிற்குள்
வெள்ளியாகும் முன்
பொருந்தா ஆசுவாசமெனப்
புறம் தள்ளியதை
அரைக்கணமேனும்
இழுத்துவிடும் மூச்சினுக்குள்
உணரத் தலைப்படுவாளெனில்
விட்டுக் கழன்று
உதிர்வதன் சூட்சமத்தை
அவள் அறியக் கூடும்.

அரவங்களற்ற நெடும்பாதை
கண்முன்னே இரண்டாக
திகைப்பூண்டை மிதித்தவளாய்
செயலிழந்து பிதற்றுபவளை
உற்றுக் கேளுங்கள்
ஒற்றைக் கரம் நீட்ட வேண்டாம்
ஒரு தோள் தட்டலில்
கட்டி வைத்திருக்கும்
வசியத்தின் பிடியவிழ
விலகி அவள் நடக்கக் கூடும்.


 திருப்புதல் 

 

1.

உயர்ந்தெழுந்த
அலைகளுக்குள்
ஆர்ப்பரித்த தன்மானத்தின்
சாயல்
ரௌத்ரமெனில்,

புரண்டு புரண்டு அடங்கி
நிலம் தொட்ட மாத்திரத்தில்
மண்ணைக் குழைத்துப் பூசிமெழுகி
பாதம் முத்தமிட்டுத் திரும்பும்
நிறமற்று நீர்த்த
ஒன்றினுக்குப் பெயரென்ன?

 

2.

பெருநிலங்கள்
விழுங்கிச் செமிக்காது
உமிழும்
நுரைக் குமிழிகளுக்குள்
மலையளவு உப்பை
இட்டு வைத்திருக்கிறது கடல்

ஆழியினடி குடைந்து மலைகளைப் பெயர்த்து
நுணுக்கி
சொட்டுத் திவலைக்குள்
அநாயாசமாய்
உருள விடுகிறது விழிகள்.

 

3.

பழக்கு பழக்கு எனக் கட்டளையிடுவதையே
மந்திரச் சொல்லாக்கி
ஏமாற்றுகிறது மனம்
ஓடுகிற நாய் மேலெறியும்
கல்லென…

நின்று முறைத்து
பல் தெரிய
உறுமி பயங்காட்டுவதும்
பின்னங்காலில்
வாலொடுக்கி
தீனமாய்க் குரைத்து
நாலு கால் பாய்ச்சலைத் தொடர்வதுமாக
அலை பாய்கிறது புத்தி.

 

4.

உன்னதம் உன்னதம்
என சன்னதத்தில்
பிதற்றுகிற
நாவுக்கும்
பின்னம், பேதம், பித்தம்
என்று ஜெபிக்கிற
மூளைக்குமான
நரம்பறுபட்டு
நாற்சந்தியில் கிடக்கிறது.

ஒட்டாத புள்ளியில்
தன்னைப் பொருத்தி
ராசலீலையின் நுணுக்கங்களை
கிறங்கி அனுபவித்து
எத்தனை காதல்களடா உனக்கென
கண்ணனை வியக்கிற உலகு
முகஞ்சுளிக்கிறது என்னை .


 

About the author

ரத்னா வெங்கட்

ரத்னா வெங்கட்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website