cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

ப.காளிமுத்து கவிதைகள்


1.

குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து
கதகதப்பைத் தேடும்
ஒரு மனதின் ரேகையைத்
தடவியபடியிருக்கிறான்

வழி முழுக்க நீளுமொரு பாரத்தைக்
கொண்டுள்ளது
அவனது தண்டவாளம்

திடீரென தடதடத்தலில்
தெளிந்து
நழுவிய குழந்தையைச்
சரிசெய்கிறாள்

நள்ளிரவில் ஆலையிலிருந்து
வெளியேறிய புகை
அவ்வளவு நிதானமாக கலைகிறது
பகல் புகையைப் பொய்யாக்கும் ஆலைக்கு
இரவுப்புகை கலைப்பதில்
பொறுமையிழக்கிறது

அதிவிரைவாய்ச்
செல்லும் பொழுதிற்கு மத்தியில்
பரிசோதகர் வருகிறார்

இரவல் காட்சியளித்த
இரயிலை
அணைத்தும் இருத்தியும்
இறங்கியவன்
தெற்கு நகர்கிறான்.

 

2.

கடை திறந்தவுடன்
வீசப்படும் தீனிகளுக்காகக்
காத்திருக்கும்
காகமாக
பல மாதமாகச்
சம்பளத்திற்குக்
காத்திருக்கிறான்
ஊழியன்

வீசப்பட்டன
ஆராவரித்துக் கொள்கின்றன
அவனுக்கு
கிடைத்ததென்னவோ
ஒரு துண்டு மிக்சர்.

3.

எலும்புகள் துருத்திக் கொண்டிருப்பவனின்
குரல் நடுநடுங்குகிறது
திடம் மாத்திரம் கூட்டியிருக்கிறது உடல்

குளிர் நிலப்பரப்பில் கதகதப்பை
விளைவித்து
புதுவரவின்
வழித்தடமாய்த் துளிர்த்திருக்கிறது
அழைப்பு

வாய்நிறைய ஆவி பறக்க
மூவரை வரவழைத்துப்
பரபரக்கிறது
சொந்தநிலத்தின் அன்பு முற்றிய நெற்கதிரொன்று

முட்டி முட்டி மோதும் தொட்டி மீனிற்கு
ஆமோதிப்பதாய் நுனி அசைக்கும்
மேசைச் செடி
உரையாடுதலின் கூந்தலாகிறது

மெட்ரோ ரயிலின் திரையைப்
பார்த்துப் பார்த்து
எச்சரிக்கையாகும் பயணியாக
கதைத்தலின் நீளம் செல்கிறது

அழைச்சென்ற
அதே நிறுத்தத்தில்
விடைபெறுதல்
வெறுமனே சடங்கென
இல்லாதிருத்தல்
எவ்வளவு நலம் மிக்கதாயுள்ளது.

அபிநயா அக்காவிற்கு…

4.

இயன்றால்
குவளைத் தேநீர்
அல்லது
நல விசாரிப்பு
அல்லது
காலத்தைக் கைத்தாங்கலாய்
அழைத்துச் செல்லும் அக்கறை
அல்லது
இருசொல் உரையாடல்
எல்லாம் விடுத்து
அலுவல் நேரத்தைத் தாண்டி
இழுத்துக் கொண்டிருத்தல் போன்று
துயர்மிகு நிமிடங்களை
நீட்டிக்க யோசனை புரிகிறார்கள்.


 

About the author

ப.காளிமுத்து

ப.காளிமுத்து

தமிழ்நாட்டிலுள்ள பொள்ளாச்சியைச் சார்ந்தவர். பொள்ளாச்சி அருகிலுள்ள பில்சின்னாம்பாளையம் என்ற கிராமம் இவருடைய சொந்த ஊராகும். 2022 ஆம் ஆண்டுக்கான இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது “தனித்திருக்கும் அரளிகளின் மதியம்” நூலுக்காக பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website