cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

தமிழ்மணி கவிதைகள்


மரணத்திற்குப் பின்பு:

 

விரிசல் விழுந்த மரணத்திற்குள் 

நெளி பாம்பாய் தலை நுழைத்தேன்.

அங்கு மோட்சத்திற்கான

செயல்பாடுகள் எதுவும் 

நடப்பதாக தெரியவில்லை.

சரியான இடத்திற்குள்தான்

வந்திருக்கிறேனா?

சாவின் பின் ஒளிந்திருக்கும்

வெளிச்ச கீதங்கள் எங்கே?

வெண்சங்கு ஊதி

சேகண்டி அடித்து 

வழியனுப்பி வைத்தவனே, எமனே!

மரணத்திற்குப் பின் 

எதாவது இருக்கிறதா?

உண்டு,

மரணத்திற்குப் பின்பு 

இன்னொரு மரணம் இருக்கிறது

நசிகேதா.

 

 

கோடையின் த்யானம்

 

கோடை,

தன்னை தார்ச்சாலையில்

கொட்டும் காலத்தில்

பேருந்து ஒன்றில் அமர்ந்திருக்கிறேன்.

வெம்மை அப்பிய காற்றின் பாய்ச்சல்

முகத்திரையில் அப்புகிறது.

கருவேலங்கள் வீற்றியிருக்கும்

கரம்பையின் மணமோ 

நாசிக்குள் ஏறி மண்டையைத் தட்டுகிறது

கிறங்க வைக்கும் வெக்கையின்

ஆழம் புரிந்த கண்கள் சொக்கின.

சகபயணியின் தோளில் 

தலை சாய்த்தேன்.

தெரியாத தலையும்

தெரியாத தோளும்

சந்திக்கும் இடத்தில் 

வெடித்துப் பிறக்கிறது கருணை.

வெடித்துப் பிறக்கிறது த்யானம்.

வெடித்துப் பிறக்கிறது சாந்தம்.

அடுத்த நிறுத்தத்தில்

எதிர்வந்த பேருந்துடன் மோதிய

எங்கள் பேருந்து 

ஹாரன் பிளிறி செத்தே போனது

அல்லது

எங்களின் த்யானத்துடன்

இணைந்தது.

 

எழுப்புங்கள் எங்களுக்கோர் நடுகல்லை

 

 

மூதாய்கள்

மரம் ஏறப் பழகியிருந்தனர்

ஒரு கிளைக்கும்

மறு கிளைக்கும்

இடைப்பட்ட வெற்றிடத்தின்

அமைதி அவர்களுக்குத் தெரிந்தது

கடவுளோ

அணில் கொறித்த கனிகளையே

அவர்களுக்கு வழங்கினார்

அதுவே போதுமானதாகவும்

இருந்தது.

 

பின்னால் வந்த

நாமோ

கீழிருந்தபடியே

மரத்தைப் பிடித்துக் குலுக்குகிறோம்

 

ஒரு கவிதை விரைவாய்

செரித்து மலமாகிறது

கவனித்தீர்களா?.

 

 

நான் சராசரி

இதற்குமேல் என்னை நான்

எப்படி வெளிப்படுத்த முடியும்

நான் சராசரி

 


 

About the author

தமிழ் மணி

தமிழ் மணி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website