1.மெச்சூரிட்டி
‘சந்தோஷமா இரு’
ஆமோதிக்க முடியாது
மவுனித்துக்
கடக்கிறேன்.
காற்றலையில்
மிதக்கும் அச்சொல்லை
கைக்கொள்ளாது
சமைந்திருக்கிறேன்.
மணலும்,
கடலும்,
வெளிவந்து
கொண்டிருக்கும்
ஒரு பகலும்
நீயின்றி இயலாதெனச் சொல்”
என நிர்ப்பந்திக்கின்றன.
வேண்டுதல்களுக்கும்
விருப்பங்களுக்கும்
உலர்ந்த உதடுகளுக்கும்
ஏதுமிலா
வெற்று வாழ்வை
நொடியில் நெஞ்சுக்குள்
அழுத்தி
வெட்கமின்றி சிரித்து
தலையாட்டிக் கடக்கும்
போலித்தனத்திற்குத்தான்
மெச்சூரிட்டி என
பெயரிட்டிருக்கிறாய்.
அடிக்கடி ஏற்றிக்
கொண்டதில்
போதை ஊசிக்கு
பழகியவனின் சருமமென
சொரசொரத்து
கிடக்கிறது
காதல்.
உட்புக முடியாது
நுனிவளையும்
உலோக முனைக்கு
நடைமுறை வாழ்வெனப் பெயர்.
2.ஒப்பு வைத்தல்.
இரவுகளில் நின்றாடி
ஒளிரும் தாட்சண்யத்தை
பாகமிட அருளும்
நித்ய செளந்தர்யத்துக்கும்
சூடாமணி கழலாவண்ணம்
முகத்தை திருப்பி
முதலாய் முயங்கியவளுக்கும்
இடப்பாகமென நாமம்சூட்டி
பெருந்தலையில் பிறைசூட்டி
குடிவைத்த போதாமைக்கும்
சீழ்க்கை ஒலிக்கு செவியென்னும்
உறுப்பை சுமந்திருக்கும்
சீராய் கூந்தல் நறுக்கிய
ஆளுயர அழகுக்கும்
அப்படியொன்றும்
வேற்றுமையில்லை காண்.
3. நேரிதழ்.
உண்ணாத கனி,
விள்ளாத பண்டம்.
ஊன் தின்று ஒழியாதே.
ரகசிய அறையின்
கடவுச்சொல் பத்திரம். பத்திரம்.
முகம் வருடும் ஒற்றைவிரலும்
பத்திரம்.
பின்.
உறைந்து போன உன்மத்தம்.
நாடி ஏறும் சந்திரகலை
இருளோடிய பகல்
மேலும் கீழுமாக நடந்த
நட்சத்திரப்பாதை
பின் மண்டையின் சிறு வெளிச்சம்.
வஜ்ராயுத முடிவு.
கொழுந்து விட்டு எரியச் செய்.
சிந்திய வார்த்தைகள்
தணலில்.
உறுமும் சத்தங்களால்
விசிறி விடு.
முயங்குமுன்னான
பார்வைக்கு
ஒரு குவளை குருதி
ஈடு.
அனிச்சத்தை
உலோகமென
உருமாற்று.
ரசவாதம் பயில்.
சித்திக்கும் பரவசத்தை
விரையும் நீருக்கு அருள்.
உலோக மூக்கில்
காற்றைக் கிழிக்கும் வாகனத்திற்கு
காயசண்டிகையின் சாபம்.
நிறைசூலியின் நகர்தலாய்
நிமிடங்களின்
கனம்.
நகம் உடைய
சுவர் தகர்க்கும்
மூர்க்கத்திற்கு
ஊதியமென
செம்பருத்தி
எம்மாத்திரம்?
குரல் : சவிதா
இந்தக் கவிதைகளை Spotify செயலி மூலமாகவும் கேட்கலாம்.
வாழ்த்துகள் கவிதைகள் சிறப்பு