cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

சங்கரி சிவகணேசன் கவிதைகள்


எங்கு சென்றாலும்
இந்த நானைத்தான்
எடுத்துச் செல்ல பணிக்கிறீர்கள்..

பெண்ணாய்ச் சுமந்தலையும்
சம்பிரதாயங்களையும் அடையாளங்களையும்
மகளுக்கும் கற்றுக் கொடுக்க கட்டளையிடுகிறீர்கள்..

பழைய பஞ்சாங்கம்
உள்ளமெங்கும் உளுத்து உதிர
தப்பிக்க வழியின்றி
தலைதெறிக்க ஓடுகின்றேன்..
என் பாதம் படும் இடமெல்லாம்
பாலையாகவே விரிந்து எரிக்கிறது..

தசாப்தங்களாக நீளும் வாழ்வில்
தினந்தோறும் தீக்குளிக்கும்
பேதமையில் கனல்கிறது தேகம்..

கண்திறக்காத குஞ்சுப்பறவையின்
சிறகுகளை எறும்புகள் அரிப்பது போல
பிறப்பிலிருந்தே அரிக்கும்
சமூகத்தின் கோரப்பற்களை
பிடிங்கி எறிய முடியாத மனதை
சுமந்த உடல் எடை கூடிக் கனக்கிறது..

மரபுகளைத் துறக்கும் நேரம்
எனக்கும் சிறகுகள் முளைக்கும்..
என்னை முற்றிலும் என் உடலிலிருந்து
விடுவித்து உடல் பெயர்கின்றேன்..

அந்திப்பொழுதில்
கூடு திரும்பும் பறவைக் கூட்டங்களுக்கு
எதிர் திசையில் பறக்கும்
பறவை ஒன்றைக் கண்டால்
என் பெயர் சொல்லி அழையுங்கள்..
நீங்களும் இணையுங்கள்..

அழுத்தும் பாறைகளின்
அடியிலிருந்து விலகி
முளைவிட முயலும்
பெருங்காடு சுமக்கும்
சிறு விதை,
உயிர்த்தெழும் வரை புரிவதில்லை
பொடியாகும் பாறைக்கு
விதையின் சுயம்..

வாழ்வதற்கு அஞ்சி
பாறைக்கடியில்
பதுங்கிக் கிடக்கிறது
என்றுதான் அவை
நினைத்துக் கொள்கின்றன..

பாவம் பாறைகள்
விதையின் வீரியத்தில்
நிகழும் அதன் மரணம் பற்றி அறிந்திருக்கவில்லை..

ஓசையில்லாமல் நிகழ்ந்துவிடும்
ஒரு விதையின் உயிர்ப்பு
வானத்தை தன் வசப்படுத்தி
காற்றோடு கை சேர்க்கையில்
வெந்து தணிகின்றன பாறைகள்

முகவரி தேடும் செடிகளை
உச்சி முகர்கிறது சூரியன்…

 

யாரும் பிரவேசிக்காத
வனாந்தரத்திற்குள்ளும்
பூத்துக்கிடக்கின்றன
சில வாசனை மலர்கள்..

அறிமுகமோ ஆரவாரமோ
இல்லாத போதும்
பூப்பதை நிறுத்துவதுமில்லை
பூப்பதை தவிர பூவுக்கு
வேறு வேலையுமில்லை..

பூக்களை ரசிக்கவோ..
பூஜைக்கென்று கொண்டாடவோ
யாரும் வராதபோதும்,
இயல்பை மறக்காமல்
யாருமற்ற வெளியிலும்
ஆனந்தமாகச் சிரித்துக்
கொண்டுதானிருக்கின்றன…

முகவரி இல்லாத சிலரின்
கவிதைகள் போல…..

மௌனமாய் மனதோடு பேசி
உணர்வோடு இசைந்து
தன்னை மறந்த
ஒரு பித்துநிலையில்
மிதந்து செல்லும் அவைகள்
உங்கள் பார்வைகளைக்
கடந்தால்
கொஞ்சமாய் புன்னகைத்து
தலைகோதுங்கள்..

குழந்தையின் உள்ளங்கையென
மொட்டவிழ்கின்ற அவை
வனப்பு மிக்க காடுகளையே
நாளை உருவாக்கலாம்..

அந்த
வனாந்தரத் தியானம்
பூக்களின் கடமை..
அதன்
வாசனையை பரப்புவது
தென்றலின் பொறுப்பு..

அந்தத் தென்றல்
உங்கள் நாசி தீண்டினால்
ஒருமுறை பிரவேசியுங்கள்
வனாந்தரப் பூக்களுக்கும்
அறிமுகங்கள் தேவைதான்…

எல்லாத் திசைகளிலும்
அலைக்கழியும் வாழ்க்கையை
ஒரு கூண்டுக்குள் அடைத்து விட
நினைக்கிறது மனது
குழந்தையின் பேராவலோடு..

தன் கூடு அடைய விரும்பாத
ஒரு பறவையைப் போல்
அதன் எல்லைகளுக்கு வெளியே
சுற்றி வருகிறது மனது..

வாழ்க்கையை அடைத்துவிட்டு
வாசலில் நிற்கும் அதனிடம்
இரை தேடும் பெரும் பணியை
திணித்து விடுகிறது காலம்..

வாழ்விலிருந்து தனித்துப்
பறந்த அதன் சிறககள்
உதிரத் தொடங்குகின்றன..

வாழ்க்கை என்பதே
நமக்கான கூடு.
அதன் வரன்முறைக்குள் தான்
எமக்கான வாழ்வு..

வாழ்க்கைகுள்தான் எமக்கு
இளைப்பாறல்
வாழ்க்கையின் இளைப்பாறல்
மரணமே..

மரணத்திற்குப் பின்னும்
நாம் வாழ்வதற்கு,
வாழ்க்கைக்குள்தான்
வாழ்ந்தாக வேண்டும்..


 

About the author

சங்கரி சிவகணேசன்

சங்கரி சிவகணேசன்

இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள புத்தூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார்.
'உன் நிலம் நோக்கி நகரும் மேகம்" எனும் கவிதைத் தொகுப்பு மற்றும் பெண்களின் மனவோட்டத்தை கவிதைகளாய் கூறும் "அரூப நிழல்கள்" எனும் நூலையும் வெளியிட்டுள்ளார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
ஹோசப்

நன்றாக இருக்கிறது கவிதைகள்

You cannot copy content of this Website