cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

கி.சரஸ்வதி கவிதைகள்


  • நாட்குறிப்பு

ஆளுக்கொன்றாய் நான்
பரிசளித்தவற்றில்
என்னவெல்லாம் பதியப்பட்டிருக்கும்?

அப்பாவினுடையதில்
பென்ஷன் கணக்குகளும்
நட்புக்கான வரவு செலவுகளும் இருக்கலாம்

அண்ணனது தினக்குறிப்பில்
நிரம்பி வழியக்கூடும் கல்லூரிக் காதல்கள்

அக்காவின் டைரியை
ஆக்கிரமிக்கின்றன பல வருடங்களாய் மழலையை எதிர்பார்க்கும்
நாள் தள்ளிப் போன கணக்குகள்

அம்மாவின் எழுதப்படாத
நாட்குறிப்பில் நிரம்பியுள்ளன
குடும்பத்திற்காய் அவள் விட்டுத் தந்த
வாழ்வின் அறியப்படாத பக்கங்கள்.

  • ஆள்காட்டி

வீதிகள் தோறும் திரிந்தலைந்து
உயிர் தேற்றித் தான் ஈன்றவைக்கு
வாழ்வளிக்கும்
ஓர் உயிரைத் துச்சமென உதைக்க இயலுகிறது

நேற்று வரைக் கொஞ்சி வளர்த்த ஆட்டை
இன்று குழம்பிலிட்டு ருசிக்க முடிகிறது

விதையிட்டு வளர்த்தவனுக்குக் கிடைக்காத வண்ணம்
திருட்டுக் கனிகள் பறிப்பதில் நாணமில்லை

தன் வீட்டுக் கழிவைப் பிறன்மனையில்
கொட்டி விடக் குற்றவுணர்வேதும் தோன்றுவதே கிடையாது

குற்றமெனப்படுவதே நியாயம் என்றான பிறகு
அடுத்தவனை நோக்கி எளிதாக நீள்கிறது
ஆட்காட்டி விரல் !

  • சொந்த ஊர்

பயணங்களில்
பச்சை வயல்களைக் கடக்கையிலெல்லாம்
எண்ணத்தில் கிளர்கிறது
சொந்த மண்ணின் வாசம்

எங்கேனும் பருகும் இளநீர்
தகிக்க வைக்கிறது
சிறுவயது நினைவுகளை

அத்துமீறி நுழையும்
பக்கத்து வீட்டுக் குழம்பு வாசம்
நினைவூட்டாமலிருப்பதில்லை
அம்மாவின் கைமணத்தை

எப்படியும் ஊர் சேர்ந்து விடும்
ஆசையைத் தணித்து விடுகிறது
வெளியூர் வேலையில் பெறும்
ஆறிலக்கச் சம்பளம்.

  • முகமூடி

ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்திவிடக் கூடாதென
மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து
அணியத் தொடங்கினேன்
விதம்விதமான முகமூடிகளை.

எந்த நேரத்திலும் முண்டியடித்து
வெளிவந்து விடுவேன் என்றவாறு
இருக்கும் உள்ளத் தவிப்புகளை
மறைக்க உற்ற துணையெனக்
கூட வரப் பழகிக் கொண்டன அவை.

சிரிப்பைக் காட்டவியலாதபோது
அழுகை முகமூடிகள்
காறி உமிழக் கையாலாகாத வேளையில்
பல்லிளிப்பவை.

தூக்கத்தில் ஆழ்கையில் விழித்திருப்பவை
பசியோடிருக்கையில் சிரித்திருப்பவை.

நீங்கள் போதுமான கவனத்துடன் இருந்திருந்தால்
கண்டு கொண்டிருப்பீர்கள்

நெடுந்தூரம் கடந்து வந்த பிறகு
என்னைப் பழக்கிக் கொண்ட அவை
இப்போதெல்லாம் என்னைத் தேர்ந்தெடுத்து
அணிந்து கொள்கின்றன மிகத் திறமையாக

  • தேடலின் நிறம்

மஞ்சள் யானை
சூரியனை அணிந்த களிப்பில்
உயர்த்திய துதிக்கையை
இறக்கவேயில்லை

சிவப்புக் குரங்கு புதுநிற மகிழ்வை
வால் நுனி வரை கடத்தியிருக்கிறது

நீலக் கொக்கு வண்ணத்தின் ஒளிர்வில்
பிடித்த மீனை விழுங்க மறந்து நிற்கிறது

பச்சை ஒட்டகத்திற்குக் குதூகலத்தின்
உச்சத்தில் நீண்டு போனது கழுத்து

பொம்மைக் கடையில் தானற்ற நிலையை
அத்தனைக்குமான
விழியென மாறி
பார்த்துக் கொண்டிருக்கிறது கருமை.

  • அவை

காகிதங்களிலும் மரத்துண்டுகளிலும்
சுவர்களிலும்
எங்கெங்கும் வரையப்படுகின்றன
கப்பல்கள்
பெருங்கடலொன்றை
அவற்றிற்குப் பரிசளிக்கும் வரை
அவை கப்பல்கள் அல்ல தானே !

  • நனவாதல்

மழைக்குச் சாத்தப்பட்ட ஜன்னலில்
காற்றின் உபயத்தால் ஒட்டப்பட்ட
ஓர் இலை
துளிர்க்கும் பாவனையைப்
பரிசளிக்கிறது
ஒரு காலத்தில் வனமாகும்
கனவிலிருந்த மரத்திற்கு.


 

About the author

கி.சரஸ்வதி

கி.சரஸ்வதி

தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டைச் சார்ந்த சரஸ்வதி, அரசுப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிகிறார்.
ஆனந்த விகடன், கணையாழி, குமுதம், அவள் விகடன், தினமலர்- பெண்கள் மலர், தினத்தந்தி- தேவதை, அம்ருதா, செல்லமே, மங்கையர் மலர், இந்து தமிழ்திசை -காமதேனு, காற்றுவெளி போன்ற பத்திரிகைகளில் இவரின் கவிதைகள், சிறுகதைகள் உள்ளிட்ட படைப்புகள் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website