cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

சிவநித்யஸ்ரீ கவிதைகள்


ழைக்குப் பிடித்தமான ராகமாக
உன் நனைதல் இருக்கிறது.
பரிசுத்த மேனி தழுவல்
மழையின் திமிராக வெதுவெதுப்பாகிறது.

இதோ இம்மழையில் இலகுவாகும்
இவ்வுடலை தாங்கிக் கொள்.
பாதங்கள்,
விறைத்துப்போகின்ற அளவு
மழையோடு கூடட்டும்.

குழல் அவிழ்த்த கணமும்
குழல் அவிழ்ந்த கணமும்
ஒன்றாகாத
தொடுதலின் போதகத்தில்
இடை வளைத்த முத்திரைக்குள்
வெயில் ஒளிந்து கொள்ளட்டும்.

மழைக்கு பிடித்த வெயிலாம்!
மழைக்கு வெயில் பிடிக்காதல்லவா!!!

வாழ்வின் தரிசனம் என்பது
நிறைந்த பரிமாணத்தில்
தன்னுடைய கனத்தை இறக்கி வைக்கிற
பிராத்தனையாகவே உணர்கிறேன்.

தட்டான்களாய்த் தெரியும்,
ஈசல் படபடத்து நகர்ந்து செல்லும் ஈர மண்ணில்,
தெரிந்ததெல்லாம் மஞ்சளென
மஞ்சளின் கணங்களில்
அதிர்ந்து அதிர்ந்து
இவ்வாழ்வில் பயணிக்கிறேன்.

இதோ கிளிகளும் அணில்களும் சமரசமாய்
ஒரே கனியின் சுவையறிகின்றன.
தத்தம் விளையாட்டை ஒரே வேரின்
காருண்யத்தில் நிகழ்த்துகின்றன.

யாவும் விடியலின் கணங்கள் என
யாவும் வாழ்வின் தரிசனங்கள் என
நம்புகின்ற
ஒரு சமரசத்துடனான கதகதப்பை
இவ்வாழ்வோடு உணர்கிறேன்.

இம் மேற்குத்தொடர்ச்சி மலை,
அதன் மாலைப் பொழுது,
கூடடையும் அதன் வெளிச்சங்கள்,
ஒளிச்சேர்க்கையின் இரகசிய வண்ணங்கள்
என அனைத்தையும்
வெகு தொலைவிலிருந்தும்
மிக அருகில் இருந்தும் பார்க்கும்படியான
விநோத மாயையை ஏற்படுத்தியிருக்கிறேன்!!!


இந்தக் கவிதைகளை வாசித்த குரல் :  சிவநித்யஸ்ரீ

இந்தக் கவிதைகளை Spotify செயலி , Amazon Music  செயலி மூலமாகவும் கேட்கலாம்.

About the author

சிவநித்யஸ்ரீ

சிவநித்யஸ்ரீ

தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிச்செட்டிபாளையத்தை சார்ந்த சிவ நித்யஸ்ரீ -இன் இயற்பெயர் நித்யா சதாசிவம். சிவநித்யஸ்ரீ எனும் பெயரில் ‘மகரந்தன்’ ,  ’நீ ததும்பும் பெருவனம்’ என இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்களை  வெளியிட்டுள்ளார். 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website