- கரி நாக்கு
என் தந்தையின் உதட்டிலிருந்து
உதிர்ந்த மொழியது.
அது ஒரு கதகதப்பான தேனீர்.
அல்லது சரணாலயம்
என் பிள்ளைக்கு
முதன் முதல் பாடிய தாலாட்டு
ஒரு காலத்தில் நான் நேசித்த வார்த்தை
இப்போது விஷப் பாம்பாய்
என்னைச் சுற்றி நெரிக்கிறது.
.
ஒரு சாபத்துக்குள் அகப்பட்ட
மந்திரச் சொல் போல் உணர்கிறேன்.
இந்த இருண்மையிலிருந்து
விடுபட முடியவில்லை.
நாக்கு கூண்டில் அடைக்கப்பட்ட
பறவை.
இறந்த மொழியிலிருந்து
விடுபட போராடுகிறது.
நான் இகழ்வது
வார்த்தைகளை அல்ல
என்னை ஒடுக்கவும் ஒதுக்கவும்
உயிரோடு கொளுத்தவும்
அவை திரிக்கப்பட்டு
கருவியாகப் பயன்படுத்தப்பட்டதை.
சொற்கள் முட்கள் போல தைக்கின்றன.
உடைந்த மந்திரக்கோலுடன்
தனித்து விடப்பட்டிருக்கிறேன்.
மந்திரம் போய்விட்டது.
அந்த மொழி
என் ஆன்மாவை சிதைத்த
கடந்த காலத்தின் நினைவூட்டல்.
மரணத்தைக் கூறும்
கூகையின் அழுகை.
காதுகளை இறுகப் பொத்திக் கொள்கிறேன்.
அது
அண்ட வெளிக் கருந்துளை போல
என்னை
அப்படியே விழுங்குகிறது.
மரணம் வரை
இனியொரு சொல் என்னில்
விழாதிருக்கக் கடவ.
- திரவம்
நான்
சிக்கலான பாதைகளில்
நடக்கிறேன்
திருப்பங்கள் ,சுற்றுக்கள்,
சிறு பாதைகள் பின்னல்கள்
சிலந்திக்கூடு.
மனம் ஒரு புயல் மையமாகி விட்டது.
எண்ணங்கள் அச்சங்கள், நிச்சயமின்மைகள்
என்னைச் சுழற்றி அடிக்கின்றன.
மேகங்களைஅணைக்கிற
மலை சார்ந்த நிலப்பரப்பு.
பாதை மறந்த கடல் புறாக்கள்
எனக்கு மேலே கத்துகின்றன.
அவை என்
ஆன்மாவை எதிரொலிக்கின்றன.
நான் மழைக்கால இரவில்
ஒளிரும் திரைகளுக்கு இடையே
மிதக்கிறேன்.
நிழல் உலகம்.
ஒன்று , பூச்சியம்
ஒன்று பூச்சியம்
இந்த டிஜிட்டல் வெளியில்
பேய்கள் துரத்துகின்றன.
எத்தனை அவதார்கள்…
முடிவில்லா நீரோடையில்
ஒரு கப்பல் அலைகிறது.
நங்கூரம் இல்லை.
சுயம் ஒரு மாய விம்பம்
இரத்தம் சதை போர்த்திய ஆன்மா
மங்கலான கோட்டுச் சித்திரம்.
என் அடையாளம்
திரவம் போல.
மாறிக் கொண்டே இருக்கிறது.
நான் முழுமையாகவும் இருக்கிறேன்…
ஆனால் முழுமையற்றும் இருக்கிறேன்.